சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 21 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சட்டக்கல்லூரி மோதல் வழக்கு:
சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், 2008 ம் ஆண்டு இரு பிரிவு மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் வெடித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம், மோதலுக்கு காரணமான 21 மாணவர்களுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார்,
”இந்த வழக்கில் இரு தரப்பும் சமரசமாக செல்வதாக கூறி மனு தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர்கள் தண்டனை பெற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்களுக்குள் சமரசமாக செல்ல முடியாது. இருந்தாலும் இதுதொடர் பாக பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித் துள்ளது.
எனவே அதன் அடிப்படையில் இருதரப்பும் சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கிறேன்” என்றார்.மேலும், பள்ளி, கல்லூரி நாட்களில் சகோதரத்துவம் தான் முக்கியம். அதைத்தான் தேசத் தந்தை மகாத்மா காந்தியும் அகிம்சை வடிவில் நமக்கு கற்றுத் தந்துள்ளார். எனவே இந்த வழக்கில் இருதரப்பும் சமரசமாக செல்வ தால் கீழ் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இவை எல்லாவற்றையும் கூறிய பின்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தண்டனை விதிக்கப்பட்ட 21 மாணவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.