2023ஆம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகளுடன், சென்னை இலக்கியத் திருவிழா மற்றும் பன்னாட்டு புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு மாபெரும் இலக்கியப் போட்டிகளையும் பயிலரங்கங்களையும் இந்த இலக்கிய மற்றும் பன்னாட்டு புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் நடத்தவுள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த திருவிழாவில் 25 கல்லூரிகள் பங்கு பெற உள்ளது. 30 போட்டிகள், 25 பயிற்சி பட்டறைகள் என ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இவை, சென்னையில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்வுக்கு கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் குறிப்பிட்டுள்ள போட்டிகள் யாதெனில், ஒரு நிமிட பேச்சாற்றல், தமிழ் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, கருத்தரங்கம், நாட்டுப்புற கலைகள், நாடகப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் ஆகும்.
ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் பயிலரங்கத்தில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகளும், ஆங்கில மொழி பயிற்சி பட்டறைகளும் நடக்க உள்ளன. இவற்றில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, இணையதளம் வழியாக பதிவு செய்யும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil