பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
திருப்பதி தரிசனம்: வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்துக்கு இலவச தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர், கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 09, 2025 23:48 IST
பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் லீக் விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், FIR லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. என்.ஐ.சி (NIC) யின் தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு அரசு காரணம் இல்லை என மேல்முறையீட்டு மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை, இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய பிற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை
-
Jan 09, 2025 23:42 IST
வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை: எல் அண்ட் டி தலைவர் கருத்துக்கு நடிகை தீபிகா படுகோன் பதில்
ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப்போகிறீர்கள்?; உங்கள் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்ப்பீர்கள்? ஞாயிறு அன்று உங்களை வேலை செய்ய வைக்க என்னால் முடிந்தால், எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்; ஏனென்றால் நான் ஞாயிறு அன்றும் வேலை செய்கிறேன் என்று L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் உயர்பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவிப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. #MENTALHEALTHMATTERS என்று நடிகை தீபிகா படுகோனே, கூறியுள்ளார்.
-
Jan 09, 2025 20:19 IST
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு
சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் குறித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 24 பேர் மீது அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Jan 09, 2025 19:24 IST
மருத்துவமனையில் ஜெகன் - பவன் கல்யாண் ஆதரவாளர்கள் மோதல்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்களை பார்க்க வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியேறும் முன்பே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் மருத்துவமனைக்கு வருந்ததால், இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது
-
Jan 09, 2025 19:23 IST
மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
-
Jan 09, 2025 19:22 IST
குற்றவாளிகளை முதல்வர் தப்பிக்க விடமாட்டார்': உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தவறான விரும்பத்தகாத சம்பவம் நடந்தது; முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்" குற்றவாளிகளை முதலமைச்சர் தப்பிக்க விடமாட்டார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
-
Jan 09, 2025 19:21 IST
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 320 இணைப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் 320 கூடுதல் இணைப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். நாளை முதல் ஜனவரி 13ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
-
Jan 09, 2025 19:20 IST
தமிழ்நாட்டை கீழே தள்ளும் முயற்சி: யுஜிசி விதிகள் திருத்தம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து
துணை வேந்தரை ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுனரே நியமிக்கலாம் என்று யுஜிசி விதிகள் திருத்தப்பட்டால், உயர்கல்வி நிலை என்னவாகும்? தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதை பொறுக்காத வயிற்றெரிச்சலில், நம்மை கீழே தள்ளும் அப்பட்டமாக முயற்சிதான் இந்த யுஜிசி விதிகள் திருத்தம் என்று, மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jan 09, 2025 19:16 IST
திருப்பதி மரணம் குறித்து விசாரிக்கப்படும்: சந்திரபாபு நாயுடு உறுதி
திருப்பதியில் ஊட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ள ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
-
Jan 09, 2025 18:45 IST
சென்னையில் ரயில் முனையங்களுக்கு 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்வோரின் வசதிக்காக மற்றும் நாளை முதல் (ஜன. 10) வரும் 13ம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
Jan 09, 2025 18:21 IST
காரைக்கால் மீனவர்களுக்கு ஜன. 23 வரை காவல்; இலங்கை நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 10 பேருக்கு, ஜன.23ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கையின் ஊர்க்காவல்படை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
-
Jan 09, 2025 17:30 IST
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது
-
Jan 09, 2025 17:28 IST
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அ.தி.மு.க என்பது மீண்டும் அம்பலம் - அமைச்சர் சிவசங்கர்
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அ.தி.மு.க என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தி.மு.க மீது களங்கம் சுமத்தும் வகையில் இ.பி.எஸ் வதந்தி பரப்பி வந்தார். அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் அ.தி.மு.க.,வை சேர்ந்த சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது கட்சியை சேர்ந்தவரை காப்பாற்றவே யார் அந்த சார்? என்ற கபட நாடகம் மக்களிடையே அம்பலமானது. பெண்கள் மீதான வன்முறையை திராவிட மாடல் அரசு சகித்துக்கொள்ளாது, சட்டத்தின் பிடியில் யாரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்
-
Jan 09, 2025 16:10 IST
பொங்கல் பரிசுத்தொகை: அ.தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி; தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் - துரைமுருகன்
பொங்கல் பரிசுத்தொகை குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், அ.தி.மு.க ஆட்சியில் ரூ.2,500 தரப்பட்டது. தற்போது 1,000கூட இல்லை’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அப்போது தேர்தல் வந்ததால் நீங்கள் பணம் கொடுத்தீர்கள். எங்களுக்கு இப்போது தேர்தல் வரவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.
-
Jan 09, 2025 15:26 IST
‘அதிகாரிகள் அவையில் ஏன் இல்லை?’ துரைமுருகன் கேள்வி; உடனே உத்தரவு போட்ட சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “சட்டப்பேரவை நிகழ்வு நடைபெறும் போது அதிகாரிகள் அவையில் ஏன் இல்லை? அவை நடைபெறும் போது அவைக்கு மரியாதை கொடுத்து அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும்” என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் அவைக்கு வர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு உடனடியாக உத்தரவிட்டார்.
-
Jan 09, 2025 15:19 IST
2016-19 காலகட்டத்தில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் முழுமையக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
2016-19 காலகட்டத்தில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை கண்காணித்து வருகிறது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேற்கண்ட காலகட்டத்தில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ₹1.60 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில், சிறைத்துறை எஸ்.பி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி கடலூர் சிறை எஸ்.பி. ஊர்மிளா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், முழுமையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 09, 2025 15:03 IST
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? - தங்கம் தென்னரசு விளக்கம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? என சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது.
எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் ரூ 2100 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ, 1000 வழங்க முடியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
-
Jan 09, 2025 14:57 IST
'முதல்வரின் நடிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது' - ஆ.ராசா பேச்சு
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்த "ஒரே ரத்தம்'' திரைப்படம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என்று நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க எம்.பி., ஆ.ராசா பேசியுள்ளார்.
-
Jan 09, 2025 14:55 IST
பெரியார் விவகாரம் - சீமானுக்கு அண்ணாமலை ஆதரவு
"பெரியார் விவகாரம் தொடர்பாக சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நாங்கள் தருகிறோம். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை தற்போது பேசினால் அருவருப்பு ஏற்படும்; அவர் பேசியதை பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Jan 09, 2025 14:42 IST
ரூம் போட்டு சிந்திக்கும் சீமான்- அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
சீமான் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "கரைந்து கொண்டிருக்கின்ற இயக்கமாக அவருடைய இயக்கம் மாறிக்கொண்டு உள்ளது. ஆதலால் ஏதாவது ஒன்றை இப்படி பேசி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக செய்கின்ற முயற்சிகள் தான் இது. அதற்காகவே ரூம் போட்டு சிந்திப்பார் என்று நினைக்கின்றேன், தினந்தோறும் வாழ்ந்து மறைந்த தலைவர்கள், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், இருட்டிலிருந்த இந்த சமுதாயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தலைவர்கள், விடிவெள்ளிகள், பகுத்தறிவுவாதிகள் போன்றவர்களை கொச்சைப்படுத்தினால் தான் தன்னுடைய பெயர் அடையாளப்படுத்த முடியும் என்பதற்காக இவ்வாறு பேசுகிறார்.
கரைந்து கொண்டிருக்கின்ற அந்த இயக்கத்தை அவர் காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர வாழ்ந்து மறைந்தவர்கள், இந்த நாட்டிற்காக தொண்டாற்றியவர்கள் பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.
-
Jan 09, 2025 14:13 IST
பெரியார் குறித்த கருத்து - சீமான் மீது தி.மு.க புகார்
பெரியார் குறித்த அவதூறான கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க சட்டத்துறை துணை செயலாளர் புகார் மனு அளித்துள்ளார். பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சீமான் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரங்களோடு புகார் அளித்தனர் தி.மு.கவினர்.
இதேபோல், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள்ளது.
-
Jan 09, 2025 14:06 IST
யு.ஜி.சி புதிய விதிகள் - மத்திய அரசை கண்டித்து தி.மு.க நாளை ஆர்ப்பாட்டம்
யு.ஜி.சி-யின் புதிய விதிகளை பரிந்துரை செய்துள்ள மத்திய அரசை கண்டித்து தி.மு.க சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
Jan 09, 2025 13:36 IST
அவதூறு கருத்து - சீமான் மீது போலீசில் புகார்
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.வி.க-வினர் புகார் அளித்துள்ளனர். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகம் புகார் தெரிவித்துள்ளது. பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சீமான் பேசி வருகிறார். பொய்யான செய்திகளை தீய எண்ணத்துடன் சீமான் பரப்பி வருகிறார். பெரியார் பேசாததை பேசியதாக கூறி சீமான் அவதூறு பரப்புகிறார் என புகாரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
Jan 09, 2025 13:26 IST
எம்.பி கதிர் ஆனந்த் கல்லூரியின் மனு தள்ளுபடி
தி.மு.க எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியின் சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவை கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த நிலையில், அதனை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மாணவர்கள் நலன் கருதி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சோதனைக்கு சென்ற போது தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கணினிகளை ஆய்வு செய்ய ஒத்துழைக்கததால் சர்வர் அறைக்கு சீல் வைப்பு என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2025 12:37 IST
அ.தி.மு.க ஆதரவு, பா.ஜ.க வெளிநடப்பு
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளது.
-
Jan 09, 2025 12:33 IST
திருப்பதி நெரிசல் பலி - ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பக்தர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2025 12:30 IST
நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு அழைப்பு,த.வெ.க மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை இறுதிச் செய்யப்படவுள்ளனர்
த.வெ.க மாவட்ட செயலாளர்கள் வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 100 மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
-
Jan 09, 2025 12:11 IST
எல்லா முறைகேடும் நடக்கும் நம்பர் 1 தேர்வாக நீட் தேர்வு உள்ளது
யு.ஜி.சியின் புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்து சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கல்வித் துறை சாராதவர்களையும் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்பது கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிரானது. எல்லா முறைகேடும் நடக்கும் நம்பர் 1 தேர்வாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு மூலமாக மருத்துவ கனவை சிதைக்கும் செயலை பல ஆண்டுகளாக மத்திய அரசு செய்து வருகிறது எனவும் பேசினார். -
Jan 09, 2025 11:33 IST
தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜன.27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
-
Jan 09, 2025 11:02 IST
தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு
தொழில் துறை வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
Jan 09, 2025 10:34 IST
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
"கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும். எந்த இடங்களில் உடனடி தேவை என்பதைக் குறிப்பிட்டால் உடனடியாக முன்னுரிமை தந்து பணிகள் முடிக்கப்படும்" - ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் நேரு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
-
Jan 09, 2025 10:31 IST
ஐ.டி. உச்சி மாநாடு - தொடங்கி வைத்த முதலமைச்சர்
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்றும் நாளையும் umagine TN மாநாடு நடக்கிறது.
-
Jan 09, 2025 10:22 IST
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீமானின் வீட்டிற்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செல்வதாக அறிவித்துள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Jan 09, 2025 10:05 IST
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டம் தொடங்கியது வினாக்கள்- விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.
-
Jan 09, 2025 10:05 IST
முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை
பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை. பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2025 09:39 IST
யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு - தனித்தீர்மானம்
யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற தீர்மானத்தில் வலியுறுத்தல். "தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது யுஜிசி வரைவு நெறிமுறை"
-
Jan 09, 2025 09:31 IST
டெல்லியில் ஆம் ஆத்மிக்கு திரிணாமூல் ஆதரவு!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை தொடர்ந்து மம்தாவும் ஆம் ஆத்மி க்ட்சிக்குரவு கொடுத்துள்ளது.
-
Jan 09, 2025 09:20 IST
சென்னை 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை
சென்னை திருவொற்றியூர் உள்ளிட்ட 26 இடங்களில் 3வது நாளாக வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 09, 2025 09:15 IST
நாதக கரைந்து கொண்டு இருக்கிறது - சேகர்பாபு
கரைந்து கொண்டிருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. எதையாவது பேசி கொண்டிருந்ததால் தான் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீமான் பேசுகிறார். கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது. தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல என்று சீமானில் பேச்சுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jan 09, 2025 09:11 IST
ஜன. 10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதியே மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்க வாய்ப்பு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Jan 09, 2025 08:25 IST
திருப்பதி கூட்ட நெரிசல் விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனையை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கள் என்றுள்ளார். திருப்பதி கூட்ட நெரிசல் விபத்து குறித்து முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Jan 09, 2025 08:21 IST
தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது!
கேரளாவில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
-
Jan 09, 2025 07:46 IST
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. போதிய அவகாசம் இல்லை என்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
Jan 09, 2025 07:43 IST
மன்னிப்பு கோரிய தேவஸ்தானம்
கூட்ட நெரிசலால் பக்தர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம். ஒரே கவுண்டரில் ஏராளமானோர் திரண்டதால் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 09, 2025 07:41 IST
பொங்கல் பரிசுத்தொகுப்பு
சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
Jan 09, 2025 07:31 IST
நாகை மீனவர்கள் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jan 09, 2025 07:29 IST
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்துக்கு இலவச தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.