சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு இருக்கும் நிலையில், முதல்வரின் வாகனம் செல்வதற்கான ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், இரண்டாவது பொது முடக்கத்தில் இருந்து தளர்வு கொண்டுவருவதற்கான யுக்திகள் குறித்தும் இன்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்திற்கு பயணித்தார். அப்போது, தீவுத்திடல் சிக்னல் அருகே ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த செயலுக்கு திமுக மக்களவை உறுப்பினர், கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில், "முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி" என்று பதிவு செய்துள்ளார்.
முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி https://t.co/6PJzVay0W3
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 27, 2020
முழுமையான ஊரடங்கு காலத்தில் ஏன் அத்தியாவசிய வாகனங்களை நிறுத்த வேண்டும். பிரதமரின் காணொலி கலந்துரையாடல் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று தான். ஏன்? மாற்று ஏற்பாடுகளை செய்ய வில்லை என்று திமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக காவல்துறை இந்த குற்றசாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது. ஊரடங்கை மீறியதற்காக வாகனங்கள் சோதனைக்கு நிறுத்தப்பட்டதாகவும், ஆம்புலன்சில் எந்த நோயாளியும் இல்லை என்று தெரிவித்துள்ளது. எப்போதுமே தனது பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று முதல்வர் அறிவுரித்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.