சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பி.காம் பயிலும் 19 மாணவர்கள் 7 பைக்குகளில் மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றுபார்த்துள்ளனர். இதன்பிறகு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்புறம் உள்ள கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ரோஷன் (21) என்பவர் கடல் நீரில் முழ்கி உயிரிழந்தார்.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (19), கவுதம் (19) ஆகியோர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு மீட்பு படைவீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உள்ளூர் மீனவர்களின் துணையோடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் தற்போது ஈடுபட்டனர். சுற்றுலா வந்த மாணவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி பலியானதாலும் இருவர் கடலில் மாயமானதாலும் உடன் வந்தவர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று ஒரு மாணவர் உயிரிழந்த சூழலில் இன்று மாயமான 2 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர கடலில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“