வீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் ஒருவர் தீக்குளித்து தற்கொலை; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னை விநாயகபுரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாடகைதாரரிடம் வீட்டு வாடகை கேட்டு தாக்கியதால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

By: Updated: August 3, 2020, 03:50:39 PM

சென்னை விநாயகபுரத்தில் வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாடகைதாரரிடம் வாடகை கேட்டு தாக்கியதால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மீளும் வரை வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை வாடகை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று மாநில அரசு பல முறை கூறியுள்ளது. ஆனால், பல இடங்களில் வாடகை கேட்டு தொந்தரவு அளிக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளது.

சென்னை புழல் அருகே உள்ள விநாயகபுரத்தில் வாடகை கேட்டு வீட்டு உரிமையாளரும் காவல் ஆய்வாளரும் வாடகைக்கு குடியிருந்த சீனிவாசன் (42) என்பவரிடம் வாடகை கேட்டு தாக்கியதால், அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார்.

தீக்குளித்து உயிரிழந்த சீனிவாசன் இறப்பதற்கு முன்பு, வாக்குமூலம் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதால் இன்ஸ்பெக்டர் பென்சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை புழல் அருகே உள்ள விநாயகபுரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்தார். பெயிண்டர் வேலை செய்துவந்த இவருக்கு கொரோனா பொது முடக்கத்தால் வருமானம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சீனிவாசன் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் அப்பகுதி அரசியல் நிர்வாகி ஆவார். வாடகைதாரர் சீனிவாசன் வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் புழல் போலீசாரை அணுகினார். இதையடுத்து, புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பென்சாம் சனிக்கிழமை சீனிவாசனின் வீட்டுக்கு சென்று அங்கே சீனிவசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், சனிக்கிழமை இன்றைக்குள் வாடகை தந்துவிடவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

வாடகை தர பணத்தை ஏற்பாடு செய்ய முடியாத சீனிவாசன் இரவு 11 மணி அளவில் வீட்டில் தீக்குளித்தார். 90 சதவீத தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சீனிவாசன் இறப்பதற்கு முன்பு அவரது சகோதரர் கணேசன் பதிவு செய்த வீடியோவில், தான் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “விடு உரிமையாளர் என் வீட்டுக்கு இன்ஸ்பெக்டரை அழைத்து வந்து அவர்கள் இருவரும் என்னை மிரட்டினார்கள். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் என்னை தாக்கினார்.” என்று குறிப்பிட்டுள்ளார். சீனிவாசனின் சகோதரர் கணேசனை போலீசார் ஒருவர் விரட்ட முயற்சிப்பதற்கு முன்பு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், புழல் காவல் ஆய்வாளர் பென்சாம்-ஐ பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே, காவல் ஆய்வாளர் பென்சாம் சீனிவாசனை தாக்கவில்லை என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில், போலீசார் சீனிவாசன் வீட்டுக்கு சென்றனர் என்றும் ஆனால் சீனிவாசனை தாக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். மேலும், சீனிவாசன் அப்போது மது போதையில் இருந்ததால் அவரை காலையில் காவல் நிலையத்துக்கு வரச்சொல்லிவிட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

வாடகை கேட்டு தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பென்சாம், 2018-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது பாலியல் துண்புறுத்தல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதே போல, தீக்குளித்து உயிரிழந்த சீனிவாசன் மீது 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அவர் தொல்லை அளிப்பதாக புகார் அளிக்கப்பட்டதாகவும் அதில் கடுமையாக இல்லாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து எச்சரித்து அனுப்பப்பட்டார் என்று போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.


சென்னையில் வாடகை கேட்டு போலீசார் தாக்கியதால் வாடகைதாரர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “புழலில் ஊரடங்கால் வீட்டு வாடகை கொடுக்க முடியாதிருந்த கூலித்தொழிலாளி சீனிவாசனை குடும்பத்தினர் முன்பாக காவல்துறை தாக்கவே அவமானத்தில் தீக்குளித்து மாண்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும் காவல்துறை அட்டூழியங்கள் தொடர்வது அடிவருடி அரசின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai man sets himself fire after attacks police inspector for asked house rent puzhal inspector suspend

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X