மெரினா மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்: அன்புமணி, அண்ணாமலை கண்டனம்

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
Anbum Anama

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்.6) இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. 

Advertisment

இருப்பினும் காலை முதலே மெரினாவில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவித்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது மற்றும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் பலர் மயக்கமடைந்தனர். 

இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களித்த போது கூட்ட நெரிசல் மற்றும் வெயிலினால் ஏற்பட்ட நீா்ச்சத்து இழப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு முறையான ஏற்பாடு செய்யாதது தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி மெரினாவில் 5 பேர் உயிரிழந்ததற்கு போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். 
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை கடற்கரையில்  நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர்  நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment
Advertisements

மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே  முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும்,  உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன.

விமானப்படை சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே  சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும்,  அதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட இருப்பதாகவும்  விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதைக் கருத்தில் கொண்டு 15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு  எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட  மிகவும் குறைவானவர்களே நிகழ்ச்சியைக் காண   வந்தாலும் கூட அவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து 7 முதல் 8 லட்சம் பேர் திரும்பும் போது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலையில் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால்,  தேவையான போக்குவரத்து வசதிகளில் 10% கூட செய்யப்படாததால் இரவு 10 மணிக்குப் பிறகும் கூட  பேருந்து நிறுத்தங்களிலும், மெட்ரோ மற்றும்  பறக்கும்  தொடர்வண்டி நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதை காண முடிந்தது.  காலையில் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலும், அதன்பின் சாலைகளிலும்  சுட்டெரிக்கும் வெயிலில் நின்றது தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.

லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான  ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது.  நிகழ்ச்சியைக்  காண பொதுமக்கள் எவ்வளவு  பேர் வருவார்கள்? அவர்கள் எந்த பாதிப்பும், இடையூறுமின்றி  திரும்பிச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறி விட்ட  தமிழக அரசு தான் இந்த  உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். 

மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில், "இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம். 

முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு. 

தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: