நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவியை எஸ்சி பெண்களுக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கை எஸ்சி மக்கள், பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது. இதனால், இது அதிமுகவுக்கு திமுக வைத்த செக் என்றும் இதனால், அதிமுக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சென்னை மேயர் பதவியை தலித் பெண்களுக்கு ஒதுக்கி திமுக அரசு எடுத்த முடிவு, எஸ்சி மக்கள், பெண் வாக்காளர்களை ஈர்க்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவியை தலித் பெண்களுக்கும் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கும் திமுக அரசு ஒதுக்கியது. இந்த நடவடிக்கையால் கவலையடைந்த ஒரு சில அதிமுக தலைவர்கள், அதிமுக ஆட்சியில் இருந்தபோது, 2019ம் ஆண்டு சில தலித் தலைவர்கள் சென்னை மாநகராட்சி மேயர் பதவியை தலித்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிமுக ஆட்சி அதற்கான வாய்ப்பை இழந்தது என்று கூறுகின்றனர்.
இது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “அம்மாவின் (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பாமக உடனான கூட்டணியால் வடமாவட்டங்களில் எஸ்சி வாக்காளர்களும் எங்களை விட்டு விலகிவிட்டனர். திமுக அரசின் இந்த நடவடிக்கை, இந்த எஸ்சி வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் என இரண்டு வாக்காளர்களையும் கவர்ந்துள்ளதால் இது அதிமுகவுக்கு மற்றொரு சவாலாக இருக்கும்.” என்று கூறுகிறார்கள்.
சென்னை மேயர் பதவியை எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். அது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இருந்த சென்னை மாநகராட்சி சட்டத்தில், ஒவ்வொரு 5 மேயருக்கு பிறகு ஒரு எஸ்சி மேயர் இருக்க வேண்டும். எஸ்சி பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்வது திமுகவுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கும். திமுக பெண் வாக்காளர்களின் ஆதரவை மேலும் பலப்படுத்தும். சென்னையில் ஒரு எஸ்சி தலைவரை திமுக வளர்த்தால், எஸ்சி கட்சிகளை சார்ந்து இல்லாமல் எஸ்சி மக்களின் வாக்குகளை வெல்ல முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி எஸ்சி பெண்களுகு ஒதுக்கி திமுக அரசு அறிவித்திருப்பது தலித் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், எஸ்சி மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக எடுக்கப்பட்ட முடிவாக இருக்கக் கூடாது என்று சிலர் எச்சரித்தனர்.
இது குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமுக சமத்துவப் படையின் கட்சியின் தலைவர் சிவகாமி ஊடகங்களிடம் கூறுகையில், “இது வரவேற்கத்தக்கது. ஆனால், அத்தகைய முக்கியமான பதவியில் தங்கள் திறமையை நிரூபிக்கக்கூடிய தகுதியான வேட்பாளர்களை கட்சிகள் அடையாளம் காண வேண்டும். இல்லையெனில், இது ஒரு பெயரளவிலான நடவடிக்கையாகவே இருக்கும்.” என்று கூறினார்.
எப்படியானாலும், சென்னை மேயர் பதவியை தலித் பெண்களுக்கு ஒதுக்கியதன் மூலம் திமுக அரசு அதிமுகவுக்கு செக் வைத்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால், எஸ்சி வாக்காளர்கள், பெண் வாக்காளர்களின் ஆதரவு நழுவிவரும் நிலையில், திமுகவின் இந்த நகர்வு அதிமுகவுக்கு மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.