Advertisment

’பேசிவிட்டு கைதட்டல் வாங்க சினிமா டயலாக் இல்ல, இந்த பேரிடர்’; நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலடி

அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்; நடிகர் விஷால் வீடியோ பதிவுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி

author-image
WebDesk
New Update
Mayor Priya and Vishal

அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்; நடிகர் விஷால் வீடியோ பதிவுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி

மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள் என நடிகர் விஷால் வீடியோ பதிவுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளிலும், வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது படிப்படியாக வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மழை பாதிப்பு குறித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "வணக்கம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். மழை வந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். சாலையில் தண்ணீர் தேங்க ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் புகத் தொடங்கும். நான் அண்ணா நகரில் இருக்கிறேன். என் வீட்டுக்குள்ளேயும் 1 அடிக்கு தண்ணீர் வந்து விட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள்.

2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது, ​​எல்லோரும் ஒன்றாக இணைந்து இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 ஆண்டுகளுக்கு பிறகு அதைவிட மோசமாக இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அந்த திட்டம் என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இது ஒரு கோரிக்கை தான். ஒரு வாக்காளராக கேட்கிறேன், நடிகனாக அல்ல. சென்னை தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.

இருட்டில் குழந்தைகளை வைத்துக் கொள்வார்கள், மூத்த குடிமக்கள் இருப்பார்கள். என் வீட்டிலும் என் அப்பா, அம்மா இருக்கிறார்கள். பயந்து போய் உள்ளனர். இது பொதுவான பிரச்சனை. அரசியல் சார்ந்தோ, வேறு எந்த குற்றச்சாட்டும் அல்ல. இன்று எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதை ஒரு தர்ம சங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். இதற்கு பெரு நகர சென்னை மாநகராட்சி, ஆணையர், அரசு ஊழியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் வரி கட்டுகிறோம். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். கண்டிப்பாக இந்த நேரத்தில் உங்கள் முகம் தெரிந்தால் நன்றாக இருக்கும். வந்து உதவுங்கள்" என்று விஷால் பேசியிருந்தார்.

இந்தநிலையில், விஷாலுக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை மேயர் பிரியா ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!

2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அ.தி.மு.க அரசுதான். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அ.தி.மு.க.,தான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி.

தி.மு.க பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது.

அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!.” இவ்வாறு பிரியா ராஜன் பதிவிட்டுள்ளார்.

  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Actor vishal priya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment