தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாலத்தீவு, குமரிக்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால், தென் தமிழக மீனவர்கள் மாலத்தீவு, குமரிக் கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
அடுத்து வரும் 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கோடை மழை பெய்யக் கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்றார்.