தீபாவளி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கடந்த 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.
அவ்வப்போது வெயில் அடித்தாலும், மழையும் பெய்து வருகிறது, குறிப்பாக, இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையைப் பொறுத்தவரை, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தற்போது அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.
இந்தநிலையில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 6ம் தேதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதி வழியாக நகர்ந்து செல்லும்.
இதன்காரணமாக வருகிற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பருவமழை மேலும் வலுப்பெறும். கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 6ம் தேதி முதல் 7ம் தேதி வரையும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 7ம் தேதி முதல் 8ம் தேதி வரையும் கடல்காற்று மணிக்கு 50 கி.மீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்கள் 6ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும். நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று, தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.
மேலும் படிக்க - கனமழை எதிரொலி : விருதுநகர் சதுரகிரி கோவில், தென்காசி குற்றாலம் அருவிகளுக்குச் செல்லத் தடை