கோர தாண்டவம் ஆடிய கஜ புயல், இதுவரை சோழ தேசம் கண்டிராத சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது. தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை அந்த பகுதி மக்கள் கண்டிடாத ஒன்று.
இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் நேற்று முன்தினம் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (20-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் நிலைகொள்ளக்கூடும். இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதுமேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை (20-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர பகுதிகளில் நிலை கொள்ளக்கூடும்.
இது அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். தொடர்ந்து நாளை (20-ம் தேதி) மற்றும் 21-ம் தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
எனவே மீனவர்கள் 20,21- தேதிகளில் தமிழக கடற்கரை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#tamilnadu #fishermen weather warning valid for next 24hrs from 1730 hrs IST 19th Nov. pic.twitter.com/e2aZi0iJ7H
— TN SDMA (@tnsdma) 19 November 2018
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 20,21-ந்தேதிகளில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும்.
அக்டோபர் 1ம் தேதி முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆனால் 30 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது 20 சதவீதம் குறைவாகும்.
சென்னையில் இதுவரை 21 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் 53 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது 60 சதவீதம் குறைவாகும். இன்னும் டிசம்பர் மாதம் வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.