சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி காலை 9 மணி முதல் மே 1-ம் தேதி காலை 9 மணி வரை மண்டலம் 13, 14, 15-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது. இந்த நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 30. 04. 2024 அன்று காலை 9 மணி முதல் 01. 05. 2024 அன்று காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) மண்டலம் - 13 (பகுதி), 14 மற்றும் 15-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அன்று நிறுத்தப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“