கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை மெட்ரோ தெரிவித்தது.
Advertisment
சென்னை மெட்ரோ நிர்வாக வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், "கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் விமானம் மற்றும் ரயில் வழி பயணங்களை மத்திய அரசு அனுமதித்தது. எனவே, மெட்ரோ ரயில் பயணங்கள் விரைவில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது" என்று தெரிவித்தனர்.
மேலும், மெட்ரோ வளாகங்களில் ஆங்காங்கே முகக்கவசம்/ சமூக விலகல் குறித்த எச்சரிக்கை வாசகம் ஓட்டப்படும் என்றும், சமூக விலகல் நெறிமுறையை கடைபிடிக்கும் வகையில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக 1,276 பேரை அழைத்து செல்லும் திறன் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 150 -160 பேர் மட்டும் பயணம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ வெளியிட்ட செய்தி குறிப்பில், " மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ரயில் நிலையத்திற்க்கு வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படும். பிளாஸ்டிக் டோக்கனுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு அல்லது பிளாஸ்டிக் டிக்கெட் மட்டும் பயன்படுத்தப்படும்" என்று தெரிவித்தது.
பீக் ஹவரில் 10 நிமிட இடைவெளியில், பீக் ஹவர் இல்லாத நேரத்தில் 15 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்க சென்னை மெட்ரோ இதுவரை திட்டமிட்டுள்ளது. மக்கள் வரவு அதிகரித்தால், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil