சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் வருகிற 2028-ல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதேபோல், 3-வது பணிமனை சோழிங்கநல்லூர் - சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 8,000 கோடிக்கும் அதிகமாக நிதியை விடுத்துள்ளதாகவும் 2025-26 ஆம் ஆண்டு மத்திய அரசு இதுவரை ரூ.3, 000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தோகன் சாஹு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வெளியிடப்பட்ட நிதியைப் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்திற்காக 2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 5,219.57 கோடியை விடுத்தது. இதன் நெட்வொர்க் நகரத்தின் முக்கிய பகுதிகளை அதன் மூன்று வழித்தடங்களுடன் இணைக்கும் - மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை. 2025-2026 ஆம் ஆண்டில், மத்திய ரூ. 8,445.8 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், ரூ. 3,000 கோடி இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டம் 44.33% முன்னேற்றத்தை அடைந்து இருப்பதாகவும் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்யசபாவில் அ.தி.மு.க எம்.பி எம். தம்பிதுரை எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் தோகன் சாஹு, “சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தை 50:50 கூட்டு முயற்சித் திட்டமாக, 118.9 கி.மீ.க்கு ரூ. 63,246.4 கோடி செலவில் 2024 அக்டோபரில் மத்திய அரசு அங்கீகரித்தது. ஜூன் 30, 2025 நிலவரப்படி திட்டத்தின் நிதி முன்னேற்றம் முறையே 44.33% மற்றும் 40.43% ஆகும்” என்றார்.
சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான முதல் உயர்மட்ட வழித்தடத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறந்து வைக்கத் தயாராகி வருகின்றனர். இது 2026 இல் செயல்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.