Chennai metro phase 2 status: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்ட 2ம் கட்ட விரிவாக்க பணிகள் இந்தாண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக , கிட்டத்தட்ட 3 ஆயிரம் குடும்பங்கள் தங்களது வீடு, கடை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
119 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திட்டமாக சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட விரிவாக்கப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அரசு மற்றும் தனியார் நிலங்கள் என 300 ஏக்கர் நிலங்களும், இணைப்பு பணிகளுக்காக 100 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. தனியார் இட உரிமையாளர்களிடமிருந்து இதுவரை 67 ஏக்கர் நிலமும் மற்றும் 97 ஏக்கர் தரைத்தள இடங்களும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது மொத்த திட்டமதிப்பீட்டில் 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மெட்ரோ ரயில் 2ம் கட்ட விரிவாக்க திட்டத்திற்காக 2,865 குடும்பங்களில் உள்ள 9,455 மக்கள் பாதிக்கப்படுவர். இவர்களில், 164 குடும்பங்கள் தங்கள் வீடுகளையும், 777 குடும்பங்கள், கடைகள் உள்ளிட்ட தங்களது வாழ்வாதாரங்களையும், இந்த திட்டத்திற்காக தர உள்ளனர். மாதவரம் - சிறுசேரி சிப்காட் மற்றும் சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் அமைய உள்ள மெட்ரோ ரயில் பாதை, பெரும்பாலும் தனியார் இடங்களிலேயே அமைய உள்ளது. மாதவரம் - சோழிங்கநல்லூர் மற்றும் மாதரவம் - கோயம்பேடு இடையேயான 52 கிலோ மீட்டர் தொலைவிலான திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 2,970 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் ( லைட்ஹவுஸ்) முதல் பூந்தமல்லி இடையேயான வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நந்தனம், தியாகராய நகர், வடபழனி மற்றும் போரூர் பகுதிகளில் உள்ள 97 குடும்பங்கள் தங்களது வீடுகளையும், 279 பேர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை தர உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, புரசைவாக்கம், டவுட்டன், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் இடங்களை 25 சதவீதம் மாற்றியமைப்பதன் மூலம், மெட்ரோ ரயில் ஸ்டேசன், சுரங்க ரயில்பாதை மற்றும் அடுக்கு இணைப்புப்பாதைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், அதிக செலவு தவிர்க்கப்படும் என்று அவர் கூறினார்.
மக்கள் எதிர்ப்பு : மெட்ரோ ரயில் 2ம் கட்ட விரிவாக்க திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்படுவதால், மாற்றுவழியில் இந்த திட்டத்தை செயல்படுத்த டிடிகே சாலை, லஸ் சர்ச் சாலை மற்றும் கச்சேரி சாலை பகுதிவாழ் மக்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தியாகராய நகர், மேற்குமாம்பலம், புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி பகுதியில் உள்ள நில உரிமையாளர்களும் இவர்களுடன் இணைந்து இந்த திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.