சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேசன்களுக்கு எளிதில் செல்ல அறிமுகப்படுத்தப்பட்ட ஷேர் ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவையை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளை துரிதமாக நிறைவேற்றுவதில் சென்னை மெட்ரோவின் பங்கு அளப்பரியதாக மாறியுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை மேலும் பலர் நாடும்பொருட்டு, மெட்ரோ ஸ்டேசன்களுக்கு விரைவாகவும் அதேநேரத்தில் குறைந்த கட்டணத்தில் செல்ல சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு இயங்கும் வகையில் இந்த ஷேர் ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவை வடிவமைக்கப்பட்டது. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ.5 டாக்ஸியில் பயணிக்க ரூ.10 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த ஷேர் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் 48,664 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி மெட்ரோ ஸ்டேசனுக்கு 11,347 பேரும், திருமங்கலம் ஸ்டேசனுக்கு 7,231 பேரும், ஆலந்தூர் ஸ்டேசனுக்கு 5,263 பேரும், கோயம்பேடு ஸ்டேசனுக்கு 1,327 பேரும் இந்த செப்டம்பர் மாதத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.