சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை, சென்னைவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சென்னையில் 2 கட்டங்களாக மெட்ரோ ரயில் சேவை பணிகள் வழங்க திட்டமிடப்பட்டு, தற்போது முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக மண் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை அமைய உள்ள இடங்களின் வரைபடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதவரம் பால் பண்ணையில் இருந்து துவங்கும் மெட்ரோ ரயில் சேவை, சோழிங்கநல்லூர், அண்ணா நகர், கோயம்பேடு, ஆழ்வார் திருநகர், முகலிவாக்கம், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுன்ட், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட் ரோடு
ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையால் பயனடைந்தநிலையில், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளால் பயனடையும்.
கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்த பார்கவி சாய் கூறியதாவது, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னையின் மற்ற பகுதிகேளாடு மெட்ரோ ரயில் சேவையின் மூலம் விரைவில் இணைய உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் பகுதியில் புறநகர் ரயில் சேவையும் இல்லை. எங்களுக்கு அருகிலுள்ள ரயில்வே ஸ்டேசன் செயின்ட் தாமஸ் மவுன்ட் ஸ்டேசன் தான், அதுவும் எங்கள் பகுதியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சிட்டி பஸ்கள் மட்டுமே எங்களுக்கு போக்குரவத்துக்கு ஒரே வாய்ப்பாக உள்ளது. எங்கள் பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவை வரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
புழுதிவாக்கத்தை சேர்ந்த மாதங்கி தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியில் தற்போது தான் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக மீண்டும் சாலை தோண்டப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க உள்ளது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், போக்குவரத்து நெரிசலை நினைத்தால் தான் பயமாக உள்ளது. பீக் நேரங்களில், எங்கள் பகுதியில் உள்ள சாலையில் பயணிப்பது கொடுங்கனவை போல பயங்கரமானது என்று அவர் கூறியுள்ளார்.
பணிகள் எப்போது துவங்கும் : மண் பரிசோதனை என்பது ஆரம்பகட்ட நிலை தான். மெட்ரோ ரயில் பணிகள் துவங்க இன்னும் நீண்ட நாள் ஆகும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.