சென்னை: தமிழ்நாட்டில் மூன்று புதிய மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு வழித்தடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மாநிலத்தில் மண்டலங்களுக்கு இடையேயான இணைப்பை மேலும் வலுப்படுத்தும்.
ஆர்.ஆர்.டி.எஸ் என்றால் என்ன?
மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு என்பது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் ஒரு அதிநவீன ரயில் சேவை ஆகும். இது நகர்ப்புறங்களில் இருந்து நகர மையங்களுக்கு 30-60 நிமிடங்களில் விரைவாக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதே முக்கிய நோக்கம். தற்போது, டெல்லி-காஜியாபாத்-மீரட் ஆர்.ஆர்.டி.எஸ் வழித்தடத்தில் உள்ள டெல்லியில் உள்ள அசோக் நகரில் இருந்து மீரட் தெற்கு நிலையம் வரையிலான 55 கி.மீ தூரம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
தமிழகத்தில் ஆர்.ஆர்.டி.எஸ் திட்டங்கள்:
சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களை அதன் அருகிலுள்ள மண்டல மையங்களுடன் இணைக்கும் விதமாக, ஒரே நேரத்தில் மூன்று சாத்தியக்கூறு ஆய்வுகளை சி.எம்.ஆர்.எல் தொடங்கியுள்ளது. இதற்கான ஆலோசகராக பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாக சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு, ரயில் பாதைகள் தரை மட்டத்தில் அமைக்கப்பட வேண்டுமா, எலிவேட்டட் முறையில் அமைக்கப்பட வேண்டுமா அல்லது சுரங்கப்பாதையில் அமைக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும். அத்துடன், நிலம் தேவை, சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் திட்டத்திற்கான செலவு போன்ற விவரங்களையும் தீர்மானிக்கும். இந்த ஆய்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதாக சி.எம்.ஆர்.எல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
தமிழகத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆர்.ஆர்.டி.எஸ் வழித்தடங்கள் - சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் மூன்று வழித்தடங்கள்:
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம்: 170 கி.மீ
சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்: 140 கி.மீ
கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம்: 185 கி.மீ
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை புதிய சாதனை:
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை மொத்தம் 1,03,78,835 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜூலை 4 ஆம் தேதி மட்டும் 3,74,948 பயணிகள் பயணம் செய்து அன்றைய தினத்தில் அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளனர்.