சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2-ம் கட்ட திட்டத்தில் 9 ரயில் நிலையங்களின் கட்டுமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நிலையங்களுக்கிடையில் மிகக் குறைவான தூரம் மற்றும் சீரமைப்பு ஆகியவை காரணமாக 9 ரயில் நிலைய கட்டுமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1200 கோடி வரை கட்டுமான செலவுகள் குறையும் என்றும் இரண்டாம் கட்டத்தில் 118 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் எந்த இடமும் தவிர்க்கப்படவில்லை, ரயில் நிலையங்களை அணுகு மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றும் இல்லை. ஒவ்வொரு கி.மீட்டருக்கும் இடையே ஒரு ரயில் நிலையம் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட 2-ம் கட்ட வழித்தட வரைபடத்தில், தபால்பெட்டி, டோவெட்டன் சந்திப்பு, செயின்ட் ஜோசப் கல்லூரி, ஃபோர்ஷோர் எஸ்டேட், நடேசன் பார்க், மீனாட்சி கல்லூரி, காளியம்மன் கோயில், போரூர் சந்திப்பு மற்றும் மேடவாக்கம் சந்திப்பு ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.
சி.எம்.பி.டி ரயில் நிலையத்திற்குப் பதிலாக, கோயம்பேட்டில் ஒரு உயர்த்தப்பட்ட நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது, அது தற்போதுள்ள 1-ம் கட்ட ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். மேலும் மாதவரம் பால் காலனி தனி ஒரு நிலையமாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மொத்தம் 118.9 கிமீ என திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அது 118.1 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 127-ல் இருந்து 118 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“