சென்னையில் மெட்ரோ ரயில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த நேரம், விரைவான பயணம் என்பதால் பலரும் மெட்ரோ பயணத்தை விரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிக பயணிகளை ஈர்க்க ரயில் டிக்கெட்டிலும் சலுகைகளை வழங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப் மூலம் சலுகை விலையில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், தற்போது பே.டி.எம் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் பே.டி.எம் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார். பே.டி.எம் செயலியில் Transit பகுதியில் உள்ள ரீசார்ஜ் ஆப்ஷன் சென்று புறப்படும் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, டிக்கெட் பெறலாம். முன்பதிவில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் வரை பெறும் வசதி உள்ள நிலையில், 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த வசதி அறிமுகம் செய்யப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சித்திக், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளில் தூண்கள் அமைக்கும் பணி அடுத்தாண்டு இறுதிக்குள் நிறைவுறும் எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“