/indian-express-tamil/media/media_files/2025/05/15/JKrjcs5ZNYAHMbxHF2gZ.jpg)
எம்.ஆர்.டி.எஸ்-ஐ கையகப்படுத்தும் மெட்ரோ: டிசம்பரில் ஒப்பந்தம், 2027-க்குள் பணிகள் நிறைவு
சென்னையில் உள்ள மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) கையகப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு இந்த ஆண்டு டிசம்பரில் இந்திய ரயில்வேயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளவுள்ளது. இந்த கையகப்படுத்தும் பணிகள் டிச.2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், எம்.ஆர்.டி.எஸ்-ஐ இயக்கும் பொறுப்பு, மேலாண்மை, மற்றும் பராமரிப்பு பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை தமிழக அரசு அளித்தது. அக்கூட்டத்தில், சென்னைக்கான விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கும் (Comprehensive Mobility Plan) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த வாரம் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வேயின் ஒப்புதல் கிடைத்தபின் டிசம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான போக்குவரத்து திட்டத்தின் கூட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வேயுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இந்த வார இறுதி அல்லது அடுத்த வார தொடக்கத்தில் நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
எம்.ஆர்.டி.எஸ்-ஐ கையகப்படுத்துவது குறித்து பல ஆண்டுகளாகப் பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், இந்த ஆண்டு ஜூலை மாதம் அதற்கு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (CUMTA) இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்து வருகிறது. மேலும், திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, தமிழக அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மற்றும் ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. CUMTA மற்றும் CMRL இணைந்து விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) இறுதி செய்து வருகின்றனர்.
தினமும் 6.5 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட எம்.ஆர்.டி.எஸ், தற்போது சுமார் 80,000 பயணிகளை மட்டுமே கையாண்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற, எம்.ஆர்.டி.எஸ்-ஐ மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.