சென்னையில் மைனர் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்ததற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி, பக்கத்துவீட்டு இளைஞரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் அவர்களை தாக்கியதாகவும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வேண்டும் என்று தங்களை வற்றுது்தியதாகவும், சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரணியம், எஸ்.மாலா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் இருக்கிறார். அதனால் சட்டவிரோத காவலில் அவர் இல்லை என்பதால் இந்த வழக்கு விசாரணை தேவையற்றது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ராஜீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவும், வெளிப்படையாக கூற இயலாத சில விஷயங்களை விவரிக்கவும், இந்த வழக்கின் விசாரணை ரகசியமாக சேப்ம்பரில் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசு வழக்கறிஞரின் இந்த சமர்ப்பிப்பை பதிவு செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தேவைப்பட்டால், கேமராவில் இந்த வழக்கின் விசாரணை நடத்தவும் தயாராக இருப்பதாகவும், அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிறுமியின் தாயாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில், யார் குற்றம் செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கூறியதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் அக்டோபர் 1-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை கட்டிடத் தொழிலாளி மற்றும் அவரது தாய் சமையல்காரராக இருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 29 அன்று, சிறுமியின் தாய் மாலை வேலை முடிந்து திரும்பியபோது சிறுமிக்கு வயிற்று வலி இருப்பதாக சொல்ல, அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு மருத்துவர் சிறுமியை பரிசோதித்த போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அதன்பிறகு சிறுமி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (கேஎம்சிஎச்) அழைத்து செல்லப்பட்டு்ளளார். அங்கு அவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை அதிகாரிகளின் தகவலின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் குழு மருத்துவமனைக்குச் சென்றது. விதிகளுக்கு மாறாக, காவல் ஆய்வாளர் ராஜீ, தாயிடம் ஆதார் அட்டை மற்றும் பிற விவரங்களை ஸ்டேஷனுக்கு கொண்டு வருமாறு கூறி, குழந்தையிடம் 'விசாரணை' நடத்தினார்.
சிறுமியுடனான'விசாரணை'க்குப் பிறகு, இன்ஸ்பெக்டர் அவளது பெற்றோரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தார், அங்கு அவர்கள் மறுநாள் அதிகாலை வரை தங்கும்படி கூறியுள்ளனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ய்பபட்ட அந்த சிறுமி, கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 31 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.