வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களான இன்று, நாளை பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் திங்கள்கிழமை வரை கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழை நவம்பர் 7-ம் தேதி வரை நீடித்தாலும், அதன் தீவிரம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சில மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை மிக அதிக அளவில் (11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை) மழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்கள் உட்பட கிட்டத்தட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை 11.5 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "இன்று முதல் பருவமழை அதிகரிக்கும். இருப்பினும், விட்டுவிட்டு மழை பெய்யும். பகல் நேரங்களில் வெயில் அடிக்கும். கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும்.
மழை பற்றாக்குறை
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது" என்று கூறினார்.
இந்திய வானிலை மையத் தகவல்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பற்றாக்குறையாக உள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் வெறும் 12 செ.மீ மழை மட்டும் பெய்துள்ளது. இது 19 செ.மீ.யில் இருந்து 40% பற்றாக்குறையாக உள்ளது. சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சியில் பருவமழை 70% க்கும் மேல் குறைவாக பெய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“