/indian-express-tamil/media/media_files/BSpy91DJzqE7UTOb4kEY.jpg)
TM Krishna Controversy
சென்னை, தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்து பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக,பிரபல கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி ஆகியோர், தி மியூசிக் அகாடமிக்கு எழுதிய கடிதத்தை புதன்கிழமையன்று தங்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.
இது கர்நாடக இசை உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு, தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், "தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவு செய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வு செய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை.
உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல.
எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.
எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.