அரக்கோணம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயில் மீது மர்மநபர்கள் சனிக்கிழமை மாலை கற்களை வீசித் தாக்கியதில் சென்னை – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
சனிக்கிழமை மைசூருலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்கியதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் மகேந்திரவாடிக்கும் அனவர்திகான்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் மாலை 6.04 மணியளவில் நடந்தது. C6 பெட்டியில் இருந்த இருக்கை 75 மற்றும் 76 இன் ஜன்னல்கள் சேதமடைந்தன.
இதையும் படியுங்கள்: கன்னியாகுமரி டூ சென்னை வந்தே பாரத் ரயில்; காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் சென்னை சென்ட்ரலில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், அரக்கோணம் ரயில் நிலைய எல்லைக்குள் சம்பவம் நடந்ததால், "அடையாளம் தெரியாத நபர்கள்" மீது ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 154 (ரயில்வேயில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து அல்லது கவனக்குறைவு) கீழ் அரக்கோணம் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் மாதம், வாணியம்பாடி நகரில் மைசூரு சென்ற வந்தே பாரத் விரைவு ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை கல்லெறிந்து உடைத்ததற்காக, திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியைச் சேர்ந்த 21 வயது இளைஞரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil