/tamil-ie/media/media_files/uploads/2022/01/COVID-1-6.jpg)
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,வேலூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும் கொரோனா அதிகளவில் பதிவாகியுள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 36,784ஆக உயர்ந்துள்ளது. அதே போல், 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 8,340 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில், சென்னையில் மட்டும் 682 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பதிவான மொத்த பாதிப்பில், சென்னையில் தான் 46 சதவீதம் பதிவாகியுள்ளது. அதேபோல், சென்னை கொரோனா பாதிப்பில் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து கணக்கிட்டால் 955 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து சுகாதார செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தினந்தோறும் புதியதாக பாதிப்புகள் பதிவாகி கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அல்லது அறிகுறியற்ற பாதிப்பு தான் இருக்கிறது. இருப்பினும் பரவுவதைத் தடுக்க மருத்துவமனைகள் அல்லது கோவிட் பராமரிப்பு மையங்களில் நோயாளிகளை தனிமைப்படுத்துகிறோம்" என்றார்.
வேலூரில் 39 பேருக்கும், கன்னியாகுமரியில் 31 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை பதிவான எண்ணிக்கையை விட அதிகமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த நான்கு பேருக்கும், இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கும்,டெல்லியைச் சேர்ந்த மூவருக்கும், வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேருக்கும்,மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், ஜார்கண்டை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.