கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணிகளை வழங்க கூடாது என, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி என்னுமிடத்தில் ஆயிரத்து 259 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சர்வதேச ஒப்பந்த புள்ளிகளை கோரியது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் :
இந்த ஒப்பந்தப் புள்ளிகளை திறக்க தடை விதிக்க கோரி பிரான்சை சேர்ந்த சூயஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த போது, தங்கள் நிறுவனத்தை தொழில்நுட்ப ரீதியாக தகுதியான நிறுவனமாக அறிவிக்க வேண்டும்.
ஏற்கனவே இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரு நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்த குடிநீர் வழங்கல் வாரியம், தற்போது கூடுதலாக ஒரு நிறுவனத்தை சேர்த்துள்ளதாக மனுதாரர் நிறுவனத்தின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கனவே திறந்து விட்டதால், அதற்கு தடை விதிக்க கூடாது என்றும், தற்போது புதிய நிறுவனம் ஒன்றும் இந்த டெண்டரில் கலந்து கொள்ள தகுதி இருப்பதை கண்டறிந்து, அந்த நிறுவனத்தை சேர்த்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெண்டர் நடவடிக்கைகளை தொடரவும், முடிவுகளை அறிவிக்கவும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால், டெண்டர் ஒப்பந்தப் பணிகளை தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க கூடாது எனவும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.