Chennai News : காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி 8ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் சென்னை மாநகரில் கொரோனா கடுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக 2,351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 4.44 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று மட்டும் 892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1.62 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டது.
சென்னை மாநகரம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய 196 சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததற்காக 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 59,500 அபராதமாக பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் 8 முதல் 11 தேதிகளில் மொத்தமாக 1,30,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ. 2.52 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று மட்டும் 46,062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 89.61 லட்சம் அபராதமாக பெறப்பட்டது.
சென்னையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், அம்மா பெட்ரோல் மற்றும் இதர மாநகராட்சி குழுக்கள் வீடுகள், சந்தை பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்டலங்கள் வாரியாக பதிவான வழக்குகள் மற்றும் பெறப்பட்ட அபராதங்களை வெளியிட்டுள்ளது காவல்துறை. 12 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் 27,910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 48.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் 22,524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 44.11 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 21,739 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 43.40 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் 43,019 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 85.74 லட்சம் அபாராதம் பெறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil