Chennai news : தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் மூன்றாம் கட்ட செரோ சர்வே நடைபெற்று வருகிறது. இம்முறை தமிழகத்தில் 46 சுகாதார பிரிவு மாவட்டங்கள் உள்ள 888 இடங்களில் சர்வே மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. SARS-CoV-2 IgG ஆன்டிபாடிகளைக் கண்டறிய சுமார் 25,000 மாதிரிகள் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் முதல் கட்ட செரோ சர்வே பொதுசுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் 2020ம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் காலங்களில் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் செரோபாஸிட்டிவிட்டி 31% ஆக இருந்தது என்று கூறப்பட்டது.
இரண்டாம் கட்ட செரோ சர்வே சென்னை நீங்கலாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு, செரோபாஸிட்டிவிட்டி 23% இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செரோபாஸிட்டிவிட்டி 49%-ஆக இருந்தது. குறைந்தபட்சமாக நாகையில் 9% பதிவானது.
இதில் தொற்று அளவு, தடுப்பூசி மற்றும் தனிநபரின் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், இது சமூகத்தில் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடிய அளவையும் இது குறிக்கிறது. இந்த அளவு அதிகரிக்கவும் செய்யலாம் அல்லது குறையலாம் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவித்தார்.
தொற்று மற்றும் தடுப்பூசி மூலம் செரோப்ரெவலென்ஸ் (seroprevalence) 70%-த்தை தாண்டும் போது – பாதுகாப்பு இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஆனால் புதிய வகை வைரஸ் பிறழ்வுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. எனவே நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் ஒரு மக்கள்தொகையில் எந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை மட்டுமே செரோ கணக்கெடுப்பு முடிவுகள் கூறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil