சென்னை மாநகரில் இந்த மே மாதத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள இறப்பு சான்றுகள் தரவுகளின் படி இந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 16 ஆயிரம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6560 மட்டுமே. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 2347 நபர்கள் கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திலும் இந்த ட்ரெண்டில் மாற்றம் ஏதும் இல்லை. சென்னையில் இந்த ஏப்ரல் மாதத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9103 ஆகும். கடந்த ஆண்டு 4113 நபர்கள் மட்டுமே உயிரிழந்த நிலையில் இது 2.2 அதிக உயிரிழப்பாக கருதப்படுகிறது. 2019 ஏப்ரல் மாதத்தில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 4885 ஆகும். 2021 ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 501 என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. பல நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தாலும், நிம்மோனியா, மாரடைப்பு போன்ற காரணங்கள் இறப்பு சான்றிதழ்களில் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் அறிவித்த தகவல்கள் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக வந்த அண்டை மாவட்ட நபர்களின் உயிரிழப்புகளும் இதில் சேர்க்கப்பட்டிருப்பதால் எண்ணிக்கை உயர்வாக இருக்கிறது என்று முன்னாள் பொதுநலத்துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil