Chennai News Complete Leave APP CLAPP : மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு காவல்துறையினர் இரவு பகலாக உழைக்கின்றனர். நாட்டின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பினை உறுதி செய்வதில் இவர்களின் பங்கு மகத்தானது. விடுமுறைகள் ஏதும் இன்றி இவர்கள் பணியாற்றுவது நாம் பரவலாக அறிந்த ஒன்று தான். அப்படியே விடுப்பு வேண்டும் என்றாலும் தங்களின் மேல் அதிகாரிகளிடம் நேரில் சென்று விடுப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனால் கால தாமதம் ஆவதோடு, விடுமுறை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.
இதனை கருத்தில் கொண்ட தற்போது சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு க்ளாப் என்ற ( Complete Leave APP (CLAPP)) ஆண்ட்ராய்ட் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று (21/01/2022) முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் சென்னை ஆணையர் ஷங்கர் ஜிவால் ஆகியோர் உடனிருந்தனர்.
இது விடுப்பு விண்ணப்பம் மற்றும் பெறுவதற்கு இடையேயான தாமதத்தை குறைக்கிறது. மேலும் விடுமுறைகளை வழங்குவதில் அதிகாரிகளுக்கு இடையே இருக்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் மட்டும் ஆயுத பிரிவில் 5800 காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
முன்னதாக, கான்ஸ்டபிள் முதல் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்ஐ) வரையிலான பணியாளர்கள் தங்களின் விடுப்பிற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. விடுமுறை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் ஆயுத ரிசர்வ் போலீஸ் பிரிவு அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த சிரமங்கள் மற்றும் சிக்கல்களை தற்போது முழுமையாக நீக்கியுள்ளது க்ளாப் செயலி.
மேற்கொண்ட பொறுப்புகளில் பணியாற்றும், ஆயுத பிரிவு காவலர்கள் (இருபாலரும்) இந்த செயலியை இனி தரவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கேஷூவல், மெடிக்கல் மற்றும் இதர விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரி 3 மணி நேரத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கு பதில் அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் விண்ணப்பம் உயர் அதிகாரிக்கு அனுப்பப்படும்.
பெண்கள் பாதுகாப்புக்கு 1750 சி.சி.டி.வி. கேமராக்கள்; மாஸ் காட்டும் சென்னை மாநகராட்சி
இணைய வசதி இல்லாத இடங்களில் ஒரு வேளை காவல்துறையினர் பணியில் இருக்கும் சமயத்தில் மேம்படுத்தப்பட்ட CLAPP V2 செயலியை பயன்படுத்தி, எஸ்.எம்.எஸ். மூலம் தங்களின் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil