Chennai News Highlights: தி.மு.க தான் எப்போதும் ஆளுங்கட்சி; 2026யில் எதிர்க்கட்சிக்குதான் போட்டி - ஸ்டாலின்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 29, 2025 20:40 IST

    இ.பி.எஸ்-க்கு தங்கம் தென்னரசு கேள்வி

    "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உறுதி பெற்று பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்க தயாரா?" என அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியமைச்சர் தங்கம் தன்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்



  • Mar 29, 2025 19:51 IST

    சென்னையில் நாளை கால்பந்து போட்டி

    சென்னை, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஃபிஃபா உலக கோப்பையை வென்ற பிரேசிலின் முன்னாள் வீரர்களான ரொனால்டினோ, கில்பெர்டோ சில்வா ஆகியோர் விளையாட உள்ளனர். இதனால், கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



  • Advertisment
  • Mar 29, 2025 19:12 IST

    தமிழ்நாட்டில் 2ஆம் இடத்திற்கு தான் போட்டி - ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் இப்போது இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி நடைபெறுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், தி.மு.க தான் எப்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.



  • Mar 29, 2025 18:39 IST

    உங்களிடத்தில் வாக்குகள் கேட்டு வரவில்லை: ரம்ஜான் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    ரமலான் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் 8000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குகள் கேட்டு வரவில்லை. குடும்பத்தில் ஒருவனாக ரம்ஜான் வாழ்த்தை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 29, 2025 18:34 IST

    பல்லாவரத்தில் ஆக்கிரமிப்பை  அகற்ற சென்றஅதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் வியாபாரிகள்

    சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை 
    அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது



  • Mar 29, 2025 17:13 IST

    சாதி பெயருடன் விழா நடத்துக்கூடாது: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

    கோவில்களில் திருவிழா நடத்த ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும். பக்தர்கள், ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • Mar 29, 2025 16:26 IST

    யாரும் நம்ப வேண்டாம் - கமல் நிறுவனம் எச்சரிக்கை 

    “நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம். எங்களது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Mar 29, 2025 15:51 IST

    மியான்மருக்கு உதவ "ஆப்ரேஷன் பிரம்மா"

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர் நாட்டின் ராணுவ தளபதியுடன் பிரதமர்  மோடி தொலைபேசியில் பேசினார்.இந்நிலையில்,   "ஆப்ரேஷன் பிரம்மா" மூலம் மியான்மருக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்தியா உதவி செய்யவுள்ளது.  இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டின் ராணுவ ஜெனரலிடம் இந்தியா உறுதியளித்துள்ளது. 

     



  • Mar 29, 2025 15:38 IST

    நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று - அன்புமணி

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,  "நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில்  சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில்  தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும்  என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார். நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால்  நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.

    நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து  உறுதியாகிறது. இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

    தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்." என்று அவர்  வலியுறுத்தியுள்ளார்.  



  • Mar 29, 2025 15:06 IST

    100 நாள் வேலை நிதி - தி.மு.க மோசடி நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்," இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, தி.மு.க., நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் தி.மு.க., அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அங்கிருந்த அருப்புக்கோட்டை பா.ஜ., வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.

    கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, தி.மு.க., எம்.பி., கனிமொழியிடம், மத்திய அமைச்சர் பார்லி.யில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தி.மு.க., ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் தி.மு.க.,வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Mar 29, 2025 13:58 IST

    முறையான ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற லாரி

    நிற்காமல் சென்ற லாரியை துரத்திச் சென்று பெண் அதிகாரிகள் பிடித்தனர். சுங்க அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Mar 29, 2025 13:47 IST

    மியான்மர் நிலநடுக்கம் - உதவி எண்கள் அறிவிப்பு

    மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்தது அயலக தமிழர் நலத்துறை. 

    தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் -1800 309 3793 (இந்தியா)

    +91 8069009901 (வெளிநாடு)

    மின்அஞ்சல் - nrtchennai@gmail.com - அயலகத் தமிழர் நலத் துறை



  • Mar 29, 2025 13:43 IST

    முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - டி.ஆர்.பாலு

    முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று திமுகவை மன்னராட்சி என்று தவெக தலைவர் விஜய் பேசியதற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். 



  • Mar 29, 2025 13:29 IST

    சென்னையில் வெயில் அதிகரிக்கும்..!

    சென்னையில் வரும் நாட்களில் 100 டிகிரி F வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது 



  • Mar 29, 2025 13:17 IST

    திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை - திமுக எம்.பி. கனிமொழி

    “எல்லோரும் திமுகவைதான் போட்டியாக நினைக்கிறார்கள், திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது” 2026 தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்துள்ளார். 



  • Mar 29, 2025 13:11 IST

    அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதி செய்த அமித்ஷா

    "அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்



  • Mar 29, 2025 13:09 IST

    புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    “புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி வாழ்த்துகள்; தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரை மதித்துப் போற்றி உற்ற தோழனாய் விளங்குவது திமுக அரசு" உகாதி விடுமுறையை அதிமுக அரசு ரத்து செய்தாலும் 2006ல் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி; தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Mar 29, 2025 12:50 IST

    அடுத்த முதல்வருக்கான பந்தயம்- 2ஆவது இடத்தில் விஜய்!

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயத்தில் 27% ஆதரவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார். 18% பேரின் ஆதரவைப் பெற்று தவெக தலைவர் விஜய் 2வது இடம் பிடித்துள்ளார்; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 10% ஆதரவுடன் 3வது இடமும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் 4வது இடத்திலும் உள்ளனர் என்று சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது 



  • Mar 29, 2025 12:37 IST

    கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி தேதி மாற்றம்!

    ராம் நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 6ம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த KKR - LSG அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 8ம் தேதி 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தா போலீசார் வைத்த கோரிக்கையை ஏற்று ஐபிஎல் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது 



  • Mar 29, 2025 12:29 IST

    "மக்களையே சந்திக்காத விஜய்"- கே.பி.முனுசாமி, அதிமுக துணை பொதுச்செயலாளர்

    “விஜய் இன்னும் மக்களையே சந்திக்கவில்லை. நான்கு சுவற்றுக்குள் 2 ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார்” என்று கே.பி.முனுசாமி, அதிமுக துணை பொதுச்செயலாளர் பதிலளித்துள்ளார். 



  • Mar 29, 2025 12:18 IST

    மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு

    மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு. மியான்மரில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 2,376 பேர் காயமடைந்துள்ளனர்; தாய்லாந்தில் 10 பேர் உயிரிழப்பு, 68 பேர் காயமடைந்துள்ளனர்; சீனாவிலும் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் 2 பேர் காயமடைந்தனர்



  • Mar 29, 2025 12:14 IST

    விஜய் கருத்துக்கு இபிஎஸ் பதில்

    தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அவரது கருத்தை கூறுகிறார்; பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் எங்களைத்தான் சொல்கிறார்கள் என்று  2026 தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 



  • Mar 29, 2025 12:13 IST

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம்

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக சார்பிலான ஆர்ப்பாட்டத்தில் கடப்பாரை, மண்வெட்டியுடன் பெண்களின் கண்டன முழக்கத்துடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது 



  • Mar 29, 2025 12:12 IST

    அடுத்த வாரம் தாய்லாந்து, இலங்கை செல்லும் பிரதமர் மோடி

    ஏப்ரல் மூன்று முதல் ஆறாம் தேதி வரை அரசு முறை பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தாய்லாந்தில் வரும் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற இருக்கும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் ஐந்தாம் தேதி இலங்கை அதிபரின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைக்கிறார்.



  • Mar 29, 2025 12:11 IST

    செங்கோட்டையன் டெல்லி பயணம்

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக தகவல்



  • Mar 29, 2025 11:46 IST

    சென்னை: நவீன வசதியுடன் தயாராகும் மாட்டு கொட்டகை!

    சென்னை ராயபுரத்தில் நவீன வசதிகளுடன் மாட்டு கொட்டகை தயாராகி வருகிறது. சுமார் 182 முதல் 200 மாடுகளை பராமரிக்கும் வகையில் இடம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாட்டின் பராமரிப்பு செலவுக்காக நாளொன்றுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தொண்டு நிறுவனம் மூலம் மாடுகளை பராமரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.



  • Mar 29, 2025 11:44 IST

    செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 29, 2025 11:32 IST

    தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசுகிறார் - பழனிசாமி

    அ.தி.மு.க.தான் பிரதான எதிர்க்கட்சி என மக்கள் அங்கீகரித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் த.வெ.க-தி.மு.க. இடையேதான் போட்டி என த.வெ.க. தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் தெரிவித்தார். மேலும், புதிய கட்சி தொடங்குபவர்களுக்கு அ.தி.மு.க. தலைவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளதாகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசியதாகவும் அவர் கூறினார்.

     



  • Mar 29, 2025 10:56 IST

    புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர்

    தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.32.9 கோடி செலவில் புதிய வாகனங்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 500 இருசக்கர வாகனங்கள், 300 நான்கு சக்கர வாகனங்களின் சேவை தொடக்கங்கப்பட்டுள்ளது.



  • Mar 29, 2025 10:52 IST

    மியான்மர் நிலநடுக்கம் - உயிரிழப்பு 1,000ஆக உயர்வு

    மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஆக அதிகரித்துள்ளது. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



  • Mar 29, 2025 10:11 IST

    பெசன்ட் நகரில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    சென்னை பெசன்ட் நகரில், காவல்துறை சார்பில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபர் குற்றவாளிகள் எந்தெந்த வகையில் ஏமாற்றுவார்கள் என்பது தொடர்பாகவும், எப்படி கவனமாக இருக்க வேண்டும்? சைபர் குற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் உதவிகள் தேவைப்பட்டால் 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் விநியோகப்பட்டன.



  • Mar 29, 2025 10:10 IST

    சத்தீஸ்கரில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்த நிலையில் இரு தரப்பினரிடையே நீடித்து வரும் மோதல் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 29, 2025 10:07 IST

    மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

    100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



  • Mar 29, 2025 09:58 IST

    தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்காதது ஏன்?-அன்புமணி

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சி அளிக்காதது ஏன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், தீயணைப்புத் துறையின் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், தேவையை கருத்தில் கொண்டு 674 தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக பயிற்சியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



  • Mar 29, 2025 09:54 IST

    ஏப்.6-ல் நடக்க இருந்த ஐ.பி.எல். ஏப்.8-க்கு மாற்றம்

    ஏப்ரல் 6-ம் தேதி நடக்க இருந்த லக்னோ-கொல்கத்தா இடையிலான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராம நவமி விழா நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல் போட்டி தேதி மாற்றப்பட்டுள்ளது.



  • Mar 29, 2025 09:49 IST

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ66,880-க்கும் ஒரு கிராம் ரூ.8,360-க்கும் விற்பனையாகிறது.



  • Mar 29, 2025 09:20 IST

    மியான்மர் நிலநடுக்கம் - உயிரிழப்பு 704ஆக உயர்வு

    மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 704-ஆக அதிகரித்துள்ளது. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



  • Mar 29, 2025 08:57 IST

    தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதி வழங்கவில்லை என பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.



  • Mar 29, 2025 08:55 IST

    மியான்மர் நிலநடுக்கம் - உயிரிழப்பு 255ஆக உயர்வு

    மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 255-ஆக அதிகரித்துள்ளது. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



  • Mar 29, 2025 08:30 IST

    சி.எஸ்.கே. தோற்றதால் கேலி செய்த நபர் மீது தாக்குதல்

    சேப்பாக்கம் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால் கிண்டல் செய்த நபரை சக நண்பர்கள் சரமாரி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேளச்சேரியில் மதுபோதையில் சக நண்பர்கள் தாக்கியதில் காயமடைந்த ஜீவரத்தினம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜீவரத்தினம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தாக்கிய 5 பேரை துரைப்பக்கம் போலீசார் கைது செய்தனர்.



  • Mar 29, 2025 08:25 IST

    சென்னையில் தொடர் பைக் திருட்டு - இளைஞர் கைது

    சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த சோளிங்கர் இம்ரான் (33) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேனாம்பேட்டையில் பைக்குகளைத் திருடி, புதுப்பேட்டையில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் கொடுத்தபோது போலீசாரிடம் பிடிபட்டார். 



  • Mar 29, 2025 08:19 IST

    ”100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க பா.ஜ.க. அரசு முயற்சி”

    காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட இத்திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.



  • Mar 29, 2025 07:43 IST

    ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று திருச்சி பயணம்

    ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை திருச்சி செல்கிறாா். திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி  பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்துகிறாா்.



  • Mar 29, 2025 07:40 IST

    "சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்கும்"

    எல்.பி.ஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், வாடிக்கையாளா்களுக்குத் தடையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறவும், எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

     



  • Mar 29, 2025 07:32 IST

    மியான்மருக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள்

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா. தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மருந்து உள்பட 15 டன் நிவாரணப் பொருட்களை ராணுவ விமானத்தில் இந்தியா மியான்மருக்கு அனுப்பியது. மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



  • Mar 29, 2025 07:30 IST

    குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்

    2025 ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (மார்ச் 29) மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • Mar 29, 2025 07:27 IST

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 5வது நடைமேடையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவரது பையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதேப் தாஸ் என்ற அந்த இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Mar 29, 2025 07:26 IST

    மியான்மரில் நிலநடுக்கம்-ஆயிரக்கணக்கானோர் பலி?

    மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. மியான்மரின் 2வது பெரிய நகரான மன்டலேயில் ரிக்டரில் 7.7 அளவு பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன. 144 பேர் இறந்துவிட்டதாகவும் 730 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



  • Mar 29, 2025 07:24 IST

    ஏ.டி.எம்.மில் 5 முறைக்கு மேல் பரிவர்த்தனை - ரூ.23 கட்டணம்

    ஏ.டி.எம்.மில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23-ஆக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 1-ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் அமலாகிறது. 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்.



  • Mar 29, 2025 07:19 IST

    3-வது நாளாக LPG கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்!

    தென் மாநிலம் முழுவதும் 3-வது நாளாக எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.



Tamil News Chennai Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: