/indian-express-tamil/media/media_files/W6CBiuFOjMrEGZKz1bO1.jpg)
Today Latest Live News Update in Tamil 30 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 31, 2025 07:10 IST
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி தொடர்ந்து நீடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் இன்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார்.
அதற்கு ஏற்ப, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஓபிஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ள அவர், கூட்டணி குறித்த நிலைப்பாடு மற்றும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jul 30, 2025 22:26 IST
அரசியல் ரீதியாக வேறு இடத்தில் இருந்தாலும், தம்பி என்ற முறையில் விஜய்க்கு என் வாழ்த்துகள் இருக்கும் - குஷ்பு
அரசியல் ரீதியாக வேறு இடத்தில் இருந்தாலும், தம்பி என்ற முறையில் விஜய்க்கு தனது வாழ்த்துகள் இருக்கும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும், விஜய் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 30, 2025 21:33 IST
இ.பி.எஸ் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் - அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சனம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கிராமப்புறங்களில் தொழில் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். உரிமம் கட்டணம் என்பது அ.தி.மு.க ஆட்சியிலும் இருந்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 30, 2025 21:00 IST
இந்தியா மீது 25% வரி விதிப்பு - அமெரிக்காவின் அறிவிப்பை ஆய்வு செய்யும் மத்திய அரசு
இருதரப்பு வர்த்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கை, மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அதன் தாக்கங்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வர்த்தகம் தொடர்பாக இந்தியா மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் இன்று அறிவித்தார். அந்த வகையில், தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
The Government has taken note of a statement by the US President on bilateral trade. The Government is studying its implications: Government of India
— DD News (@DDNewslive) July 30, 2025
"India and the US have been engaged in negotiations on concluding a fair, balanced and mutually beneficial bilateral trade… pic.twitter.com/Kz9pOjgtEi -
Jul 30, 2025 20:13 IST
பா.ஜ.க தேசிய அளவிலான பட்டியலில் என் பெயர் இடம்பெறும் என்று நினைக்கிறேன் - விஜயதரணி
பா.ஜ.க மாநில நிர்வாகிகளுக்கான பட்டியலில் விஜயதரணியின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், தேசிய அளவிலான பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாக தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 30, 2025 19:54 IST
தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையத்தில் 105 , கடலூர், நாகை 102, ஈரோடு, பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், புதுச்சேரி 101, நுங்கம்பாக்கம், திருச்சி, காரைக்கால், தஞ்சை, மதுரை நகரம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளகினர்.
-
Jul 30, 2025 19:32 IST
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது, குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 19:15 IST
நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி
நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 நாள்கள் சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 19:03 IST
பா.ஜ.க மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்: கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா ஆகியோரும் மாநில துணைத் தலைவர்களாக செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பா.ஜ.க மாநில துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதி, மாநில தலைமை செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனக்கு கட்சியில் பதவி வழங்கப்படும் என விஜயதாரணி கூறி வந்த நிலையில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
-
Jul 30, 2025 19:00 IST
முன்னாள் பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு
முன்னாள் பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பா.ஜ.க முன்னாள் நிர்வாகி சாமுண்டீஸ்வரி மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் பெயர் மாற்றி போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் சாமுண்டீஸ்வரி கைதானார். ஜாமீனில் வெளியே வந்த சாமுண்டீஸ்வரி ஆட்களை வைத்து ஆறுமுகம் என்பவரை கட்டையால் தாக்கியுள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த சாமுண்டீஸ்வரி மீது 4 பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள சாமுண்டீஸ்வரியை வண்ணாரப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்
-
Jul 30, 2025 18:15 IST
ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி; ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் 'அபராதம்': ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் 25% வரி விதித்தார். வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அதிபர் டிரம்ப் 25% வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கான 25% வரி விதிப்பு ஆக.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அபராதமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா இனி 25% வரி விதிக்கும்.
-
Jul 30, 2025 17:49 IST
விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்
புவியின் சுற்றுச்சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து தகவல் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிசார் செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.எப்-16 ராக்கெட்.
-
Jul 30, 2025 17:31 IST
43 OTT தளங்களை மத்திய அரசு தடை
நாடு முழுவதும் இதுவரை 43 OTT தளங்களை மத்திய அரசு தடை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்துள்ளார்.
-
Jul 30, 2025 17:24 IST
பாஜக மாநில துணைத் தலைவர்கள் நியமனம்
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர்களாக குஷ்பூ, தமிழ்நாடு பாஜகவின் பிரிவு அமைப்பாளர் / இணை அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்லனர்.
-
Jul 30, 2025 16:40 IST
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ.5 கோடி பெற்று மோசடிப் புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 முதல் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 6 பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
-
Jul 30, 2025 16:38 IST
செயலி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து: சீமான்
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு செயலியை தொடங்கிய விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் திருப்புமுனையை நோக்கிதான் அனைவரும் பயணப்படுகிறோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
-
Jul 30, 2025 16:12 IST
கொடிக்கம்ப விவகாரம் - தவெக சார்பில் மனு
பொது இடங்களில் அரசியல் கட்சிகள் அனுமதியின்றி வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பையும் சேர்க்க வேண்டும் என தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 16:00 IST
மின் பேருந்துகளால் ரூ.90 லட்சம் டீசல் செலவு மிச்சம்: MTC
சென்னையில் மின்சார பேருந்துகளால் ரூ.90 லட்சம் டீசல் செலவு மிச்சம்; மின்சார பேருந்துகளில் ஒரு மாதத்தில் 12.80 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். 6.55 லட்சம் கி.மீ. வரை 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன; டீசல் பேருந்துகளை இயக்கியிருந்தால் அரசுக்கு ரூ.1.60 கோடி செலவாகி இருக்கும் என்று சென்னை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Jul 30, 2025 15:46 IST
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் எக்ஸ் தளத்தில் விமர்சனப் பதிவு
டி வி கே ஆப்... இன்று வெளியீடு... தமிழ்நாட்டில் இனி
ஆப்பிற்கும் ஆதரவு கிடையாது
அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது... ஓரணியில் தமிழ்நாடு... நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது ஏனென்றால் இன்று இவர்கள் மக்கள் நலனில் இருந்து விலகி இருக்கிறார்கள்
வெற்றி பேரணியில் தமிழ்நாடு... நாடகத்திற்கு ஆதரவு கிடையாது....ஏனென்றால் இவர்கள் எப்போதுமே மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள்....
"அண்ணா "வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு" தம்பி"?என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பதிவிட்டுள்ளார்.
-
Jul 30, 2025 14:57 IST
பெருங்குடி செயின் பறிப்பு - இளைஞர் கைது
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில், இன்று காலை தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் செயின் பறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருவான்மியூர் ரயில்வே போலீசார் பாபுராம் என்பவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 30, 2025 14:26 IST
சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: மேயர் பிரியா!
சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். தெரு நாய்கள், செல்லப்பிராணிகளுக்கு கண்காணிப்பு சிப் பொருத்தும்பணி நடக்கிறது. தன்னார்வலர்கள் உணவு தருவதால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 14:24 IST
கார் ஏற்றி மாணவன் படுகொலை - மேலும் ஒரு இளைஞர் சரண்
சென்னை திருமங்கலத்தில் காதல் விவகாரத்தில் கார் ஏற்றி மாணவன் படுகொலை - காரை ஓட்டிய இளைஞர் ஆரோன் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண். திமுக பிரமுகரின் பேரன் சந்துரு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞர் சரண் அடைந்துள்ளார். இளைஞர் கொலைக்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் வளசரவாக்கம் பகுதியில் சிக்கியது.
-
Jul 30, 2025 13:59 IST
ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ: “ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை; 1998-ல் பா.ஜ.க ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததால் தி.மு.க கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது” என்று கூறியுள்ளார்.
-
Jul 30, 2025 13:31 IST
‘முரண்பாடு இருண்தாலும் அமித்ஷாவின் முயற்சிக்காக ஒரே கூட்டணியில் தொடர்கிறோம்’ - டி.டி.வி தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்: “என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்த துணை நிற்போம்; அ.தி.மு.க தலைமைக்கும், தங்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதைத் தேர்தல் வரை ஒதுக்கிவைத்துவிட்டு, தி.மு.க-வை வீழ்த்த ஒரே கூட்டணியில் உள்ளோம்” என்று கூறினார்.
-
Jul 30, 2025 13:25 IST
சுனாமி எச்சரிக்கை: ஜப்பானில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பெரு உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 12:34 IST
1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும் - த.வெ.க தலைவர் விஜய்
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற த.வெ.க உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை வெளியிட்டுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும்; அண்ணா வழியில் பயணிப்போம்; 1967, 1977-ல் ஆள் பலம், அதிகார பலத்தை எதிர்த்து புதிதாக வந்தவர்கள்தான் ஜெயித்தனர்; நாம் இருக்கிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள்; இதற்கு மேல் என்ன வேண்டும்” என்று பேசினார்.
-
Jul 30, 2025 12:18 IST
மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி
ஒரு மாத இடைவெளியில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருகை தருகிறார். வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்குச் செல்ல இருக்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jul 30, 2025 12:07 IST
த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியிட்டார் விஜய்
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டார். இதையடுத்து, விஜய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என 3 தலைமுறைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
-
Jul 30, 2025 11:52 IST
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். 'வெற்றி பேரணியில் தமிழ்நாடு' என்பதன் கீழ் உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார்.
-
Jul 30, 2025 11:35 IST
தவெக செயலி அறிமுக விழா
தவெக செயலி அறிமுக விழா தற்போது பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
-
Jul 30, 2025 11:13 IST
மருத்துவ சேர்க்கை: 25 பேர் போலி சான்றிதழ்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது, மருத்துவ சேர்க்கைக்கு 25 மாணவர்கள் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
25 மாணவர்களின் மீதும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
-
Jul 30, 2025 11:12 IST
அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் ஆஜர்
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த விவகாரம், நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜர் ஆகினார்.
-
Jul 30, 2025 11:11 IST
தொடரும் ஆணவக் கொலைகள்; புரட்சி பாரதம் கட்சி கண்டிப்பு
திருநெல்வேலியில் ஆணவ படுகொலைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து நடக்கின்றன . ஆணவ படுகொலைகளை தடுக்க முதலமைச்சர் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் . கவின் படுகொலை வழக்கை முதலமைச்சர் நேரடி பார்வையில் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும். தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவக் கொலைகளை புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
கச்சிப்பட்டு பா. அன்பு , புரட்சி பாரதம் கட்சி, காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்.
-
Jul 30, 2025 10:49 IST
பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் எதிரொலி காரணமாக ரஷ்யா, ஜப்பான் நகரங்களை சுனாமி அலைகள் தாக்கிய நிலையில் சீனா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 10:47 IST
மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி
கடலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாத இறுதியிலும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து நேரலையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
-
Jul 30, 2025 10:26 IST
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழக்கு: ஆக.1 இல் விசாரணை
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
Jul 30, 2025 09:53 IST
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை நிர்வாகிகளுக்காக அக் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது . இரண்டரை கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் திமுக-வைப்போல் புதிதாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கோடி குடும்பம் இரண்டு கோடி உறுப்பினர் என்ற இலக்கை நோக்கி பயணிக்க உள்ளது.
-
Jul 30, 2025 09:42 IST
டி.சி.எஸ். சந்தை மதிப்பில் ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., இந்த ஆண்டு 2 சதவீத ஊழியர்களை, அதாவது 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக சரிந்து நேற்று மும்பை பங்குச்சந்தையில், டி.சி.எஸ். பங்கு 0.73 சதவீதம் குறைந்து, ரூ.3,056 ஆனது. தேசிய பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் 0.72 சதவீதம் குறைந்து, ரூ.3,057 ஆக சரிந்தது. இதனால், கடந்த 2 நாட்களில் டி.சி.எஸ். சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரத்து 149 கோடி குறைந்துள்ளது.
-
Jul 30, 2025 09:06 IST
குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
கடலூர் மாநகராட்சியின் குப்பை வண்டியில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தது. வாக்காளர் அடையாள அட்டைகளை யார் போட்டது என வட்டாட்சியர் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
Jul 30, 2025 09:05 IST
சுனாமி எச்சரிக்கை - உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது. அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்.சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 30, 2025 08:59 IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு. பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
Jul 30, 2025 08:57 IST
சிறுமி பாலியல் வன்கொடுமை நபரிடம் தீவிர விசாரணை
திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது. தொடர்ந்து 2-வது நாளாக கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 30, 2025 08:30 IST
ரஷ்யா, ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்குதல்
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. இதுதொடர்பான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. ரஷ்ய கிழக்கு பகுதியில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டடங்கள் குலுகியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
-
Jul 30, 2025 08:14 IST
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த செல்வம் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று (29.7.2025) குற்றவாளி செல்வம் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Jul 30, 2025 08:08 IST
ரஷ்யா, ஜப்பானில் 3 மீட்டர் வரை எழுந்த சுனாமி அலைகள்
கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி தாக்கத் தொடங்கியது. 3 மீட்டர் வரை கடல் அலைகள் எழுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
Jul 30, 2025 08:06 IST
மல்லிகார்ஜுன கார்கேவிடம் மன்னிப்பு கோரிய நட்டா
மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார். விவாதத்தின்போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டதாக நட்டா பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்தது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவை பேசியதற்கு ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார்.
-
Jul 30, 2025 08:05 IST
கவின் உடலை வாங்க 3வது நாளாக உறவினர்கள் மறுப்பு
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3வது நாளாக அவரது உறவினர்கள் மறுத்துவருகின்றனர். கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் நேற்று இரவு நடைபெற்ற 4 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் உறவினர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
Jul 30, 2025 07:54 IST
கோவில்பட்டி: போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சண்முகையா (வயது 36) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகையாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதமும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
-
Jul 30, 2025 07:38 IST
கீழணையில் இருந்து 1.06 லட்சம் கனஅடி நீர் திறப்பு
தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,06,526 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் 1.06 லட்சம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது.
-
Jul 30, 2025 07:30 IST
பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யும்
'தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட், 4 வரை, பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.