![PMK Protest](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/21/AaaXtM99SvhxDhoAeb2U.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை சற்று குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று விலை குறைந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.81க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மழை
திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 3 செ.மீ மழை பதிவு, கும்மிடிப்பூண்டி,செங்குன்றம் பகுதிகளில் தலா 2 செ.மீ., சோழவரத்தில் 1 செ.மீ. மழை பொழிந்துள்ளது.
-
Dec 21, 2024 21:44 IST
முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
விவசாயிகளின் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே பா.ம.க சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 21, 2024 20:58 IST
"செல்போனில் மூழ்கிய போலீசார்": நீதிபதிகள் வேதனை
பணியில் இருக்கும் காவல்துறையினர், பணியை விட செல்போனில் மூழ்கி கிடப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்ட நீதிமன்றம் எதிரே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Dec 21, 2024 20:22 IST
45 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் பா.ம.க உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநாட்டில், வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், இலவசங்கள் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 19:41 IST
''ஜி.எஸ்.டி - மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை''
விமான எரிபொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Dec 21, 2024 19:36 IST
ரூ. 6 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் ஒப்படைப்பு
புதுச்சேரி இணைய வழி காவல் நிலைய குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இணைய வழி மோசடியில் நடைபெற்ற ரூ. 65 லட்சத்து 82 ஆயிரம் மீட்கப்பட்ட நிலையில், அதனை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், ரூ. 6 லட்சம் மதிப்பிலான 32 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்களுடைய குறைகளை தெரிவித்ததோடு தாங்கள் கொடுத்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
-
Dec 21, 2024 19:08 IST
செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு நிராகரிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 18:48 IST
கொலை வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Dec 21, 2024 18:39 IST
தொடர் விடுமுறை: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தாம்பரம் – கன்னியாகுமரி இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து டிச.24,31-ல் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு பகல் 12.15 மணிக்கு செல்லும். கன்னியாகுமரியில் இருந்து டிச.25, ஜன.1-ல் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20க்கு தாம்பரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 18:19 IST
ஆண்டுக்கு 30 நாட்கள்கூட சட்டப்பேரவை நடப்பதில்லை - வானதி சீனிவாசன் விமர்சனம்
தந்தை மகன் - பேரன்' புகழ்பாடும் மன்றமாக தமிழ்நாடு சட்டமன்றத்தை நடத்துபவர்கள் பாஜகவை விமர்சிப்பதா? நாடாளுமன்றத்தை திட்டமிட்டு முடக்கியதே 'இண்டி' கூட்டணி கட்சிகள்தான். தமிழகத்தில் ஆண்டுக்கு 30 நாட்கள்கூட சட்டப்பேரவை நடப்பதில்லை." என்று தி.மு.க அரசு மீது பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
தந்தை மகன் - பேரன்' புகழ்பாடும் மன்றமாக தமிழ்நாடு சட்டமன்றத்தை நடத்துபவர்கள் பாஜகவை விமர்சிப்பதா? நாடாளுமன்றத்தை திட்டமிட்டு முடக்கியதே 'இண்டி' கூட்டணி கட்சிகள்தான். pic.twitter.com/XIBzBkMRPm
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 21, 2024 -
Dec 21, 2024 18:15 IST
"இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான மனிதர்கள்?" - தெலங்கானா முதல்வர் காட்டம்
"திரையரங்கில் கூட்டத்தை சமாளிக்க முடியாததால், உடனடியாக வெளியேறுமாறு போலீசார் கூறியும், அல்லு அர்ஜுன் வெளியேறவில்லை இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான மனிதர்கள்?" என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காட்டமாக பேசியுள்ளார்.
-
Dec 21, 2024 17:34 IST
ஒன்றிய அரசு மவுனம் கலைக்க வேண்டும்: ஸ்டாலின் பதிவு
"உரக்கப் பேசியிருக்கிறோம்; ஒன்றிய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"உங்கள் எம்.பி.களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டவர்களை வாயடைக்கச் செய்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். எம்.பி.க்களின் செயல்பாடுகளுக்காக திமுக தலைவராகப் பெருமை கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Dec 21, 2024 17:30 IST
ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்குற மாதிரி ஒரு படம் பண்ணுவேன் - சரத்குமார் பேச்சு
“என் அன்பு மனைவி ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்குற மாதிரி ஒரு படம் இயக்கனும்னு ஆசை இருக்கு” என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
-
Dec 21, 2024 17:28 IST
ஜாபர் சாதிக் வழக்கு - நீதிபதி விலகல்
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரரின் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
-
Dec 21, 2024 17:21 IST
பா.ஜ.க பிரமுகர் கொலை - தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கைது
வேலூரில் பா.ஜ.க பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Dec 21, 2024 16:58 IST
விராட்டின் உணவகத்திற்கு நோட்டீஸ்
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உணவகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தீ பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடிக்கவில்லை என்று கூறி தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
-
Dec 21, 2024 16:48 IST
தாம்பரம் – திருச்சி இண்டர்சிட்டி ரயில் சேவை திடீர் நிறுத்தம்
தாம்பரம் – திருச்சி இண்டர்சிட்டி ரயில் சேவை முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக போராடி பெற்ற ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 4 மாதங்களுக்கு முன் தாம்பரம் திருச்சி இண்டர்சிட்டி ரயில் சேவை தொடங்கப்பட்டது. தாம்பரம் – திருச்சி இண்டர்சிட்டி ரயில் லாபகரமாக இயங்கி வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
-
Dec 21, 2024 16:29 IST
சென்னை: 2 குழந்தைகளை கழுத்தறுத்த தாய் - தற்கொலை முயற்சி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 2 குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய தாய் முயற்சி செய்துள்ளார். கழுத்தறுக்கப்பட்ட ஒரு குழந்தை உயிரிழப்பு; தாய் மற்றும் மற்றொரு குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Dec 21, 2024 16:13 IST
பெங்களூரு: கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி
பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
-
Dec 21, 2024 15:40 IST
ஃபார்ப்கார்னுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஃபார்ப்கார்னுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் கானுக்கு, 5 சதவீதம் வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளேட் செய்யகப்பட் ஃபார்ப்கார்னுக்கு 12 சதவீத வரியும், கேரமெல் வகை ஃபார்ப்கார்னுக்கு 18 வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 15:36 IST
"ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை: சுப்ரமணியன் சுவாமி
மோடிக்கு பைத்தியம் பிடித்து விட்டது. ஒருவேளை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறினால் அதற்கு எதிராக நிச்சயம் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
Dec 21, 2024 14:40 IST
வார்டு மறுவரையறை செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு தகவல்
வார்டு மறுவரையறை பணிகள், பட்டியல், பழங்குடியின மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீட்டு தொகுதிகள் குறித்து முடிவு செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என்று, தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இடஒதுக்கீடு தொகுதிகளை முடிவு செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று முனியன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு அரசின் உத்திரவாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
-
Dec 21, 2024 14:35 IST
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மோசடி: ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மோசடி புகாரில், முன்னாள் கிரிக்கெட்வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூர் பி.எஃப் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். உத்தப்பா இயக்குனராக உள்ள, சென்ட்ரூஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த வைப்பு நிதி 23 லட்சத்தை முறையாக வைப்பு வைக்கவில்லை என்பதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 14:32 IST
காப்பீடு ப்ரீமியம்களுக்கு ஜிஎஸ்டி வரி தொடரும்
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான தவனை தொகைகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை நீக்குவது தொடர்பாக, இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், எநத முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, கூடி விவாதித்து ஒருமித்த கருத்து கூறிய பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
Dec 21, 2024 13:42 IST
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், 3 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
-
Dec 21, 2024 13:40 IST
கலங்கரை விளக்கத்தின் ரேடார் ஆன்டனாவை மாற்றும் பணி
மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் 10வது தளத்தில் உள்ள ரேடார் ஆன்டனாவை ராட்சத கிரேன் மூலம் மாற்றும் பணி நடைபெற்றது
-
Dec 21, 2024 12:17 IST
வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பின் தான் உள்ளாட்சித் தேர்தல்
வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகுதான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
-
Dec 21, 2024 12:17 IST
சம்பவ இடத்தில் மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
ஆற்காடு அருகே சாலையோர மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில், இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில், சம்பவ இடத்தில் மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
Dec 21, 2024 11:09 IST
மதுரை மெட்ரோ - கள ஆய்வு
மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் கள ஆய்வு மேற்கொண்டார். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜெய்ஹிந்த் புரம், ஆண்டாள் புரம் வரை கள ஆய்வு நடக்கிறது. மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக கூறுகளை அர்ஜூனன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
-
Dec 21, 2024 10:31 IST
பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி - நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் சென்ற பேருந்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
பேருந்தை சாலையோரம் நிறுத்திய போது மின்கம்பத்தில் உரசி பேருந்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
பேருந்தில் இருந்து இறங்க முயன்ற இளம்பெண் அகல்யா மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காலணி அணியாமல் பேருந்தின் இரும்பு கைப்பிடியைப் பிடித்து இறங்க முயன்ற போது மின்சாரம் தாக்கியது-உடனிருந்த பெண் சந்தியா பேட்டி
அவரைக் காப்பாற்ற முயன்ற இருவரையும் மின்சாரம் தாக்கியது. டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்திய போது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.
-
Dec 21, 2024 10:23 IST
லாரி மீது வேன் மோதி விபத்து - 4 பேர் பலி
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே கொடூர விபத்தில் 4 பேர் பலியாகினர்.
சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பதி மலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பும்போது நிகழ்ந்த விபத்து, காயம் அடைந்தவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து பற்றி குடிபண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 21, 2024 09:50 IST
சென்னையில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ்
சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து 174 பயணிகளுடன், ஹைதராபாத் செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல், சென்னையில் தரையிறக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் வானிலை சீரடைந்த பின்பு, இந்த விமானம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
-
Dec 21, 2024 09:29 IST
திருப்பதி கோவில் மார்ச் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு தேதி மாற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் மார்ச் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. 25ம் தேதிக்கு பதிலாக 26 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது
-
Dec 21, 2024 09:02 IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 21, 2024 08:42 IST
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; 2 பேர் மரணம்
ஜெர்மனியின் மக்டிபர்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை, நெரிசலான கிறிஸ்துமஸ் சந்தையில் கார் மோதியதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை திட்டமிட்ட வன்முறைச் செயலாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
-
Dec 21, 2024 08:19 IST
ரகளையில் ஈடுபட்ட காவலர்; கம்பி குத்தி மரணம்
மது போதையில் பெண் நீதிபதி வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட சட்டம் ஒழுங்கு காவலர் பின்புற கதவு வழியாக கீழே குதித்த போது இடுப்பில் கம்பி குத்தி உயிரிழந்தார்
-
Dec 21, 2024 07:52 IST
மின்கம்பி மீது பேருந்து உரசி விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே முப்பதுவெட்டி பகுதியில் மின்கம்பி மீது பேருந்து உரசி விபத்து ஏற்பட்டதில் பேருந்தில் இருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
வாணியம்பாடியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 40 பேர் பேருந்தில் மேல்மருவத்தூர் வந்து கொண்டிருந்தனர்.
முப்பதுவெட்டி பகுதியில் பேருந்தை நிறுத்தியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலையோர மின் கம்பி பேருந்தின் கூரை மீது உரசி விபத்து - பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
-
Dec 21, 2024 07:47 IST
பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு இன்று செல்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தியவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் செய்யும் நாடுகளில் குவைத் முக்கியமானது.
-
Dec 21, 2024 07:47 IST
சென்னைக்கு 390 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு 390 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது.
அடுத்த 24மணி நேரத்தில் (டிச.22 காலை 6 மணி) தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.