/indian-express-tamil/media/media_files/2025/01/09/4B9vlpoWP0POIsQkw4ZQ.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை ஆகிறது.
-
Mar 05, 2025 22:35 IST
லண்டனில் சிம்பொனி: இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முத்தரசன்
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசைஞானி இளையராஜாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அரிசி திரைப்படத்தின் கதையின் நாயகனாக முத்தரசன் நடித்து வரும் நிலையில், படக்குழுவினரோடு சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 21:57 IST
அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு
“குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது என் நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான்” என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 21:26 IST
இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சீமான்
லண்டனில் சிம்பொனியை இசையை நிகழ்த்த உள்ள இசைஞானி இளையராஜாவை நா.த,க ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். “கடினமான மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கும் திருநாளாகும்.” என்று கூறினார்.
-
Mar 05, 2025 20:59 IST
45 தலைவர்களுக்கும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கடிதம் எழுதப்படும் - அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 45 தலைவர்களுக்கும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கடிதம் எழுதப்படும். தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களையும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் நேரில் சந்திக்க உள்ளோம். சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளையும் நேரில் சந்திக்க உள்ளோம். அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உள்ளோம்” கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 19:59 IST
ரயில் பாதை பராமரிப்பு: எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே 2 நாட்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
ரயில் பாதை பராமரிப்பு: எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே புறநகர் 2 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து
நாளை முதல் 2 நாட்கள் மதியம் 12.30 மணி - 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 7 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளது.
-
Mar 05, 2025 19:48 IST
'பத்ம பூஷன்' விருது: பரதநாட்டியக் கலைஞர், நடிகை சோபனாவுக்கு எல்.முருகன் வாழ்த்து
'பத்ம பூஷன்' விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான சோபனாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
Mar 05, 2025 19:35 IST
11ம் வகுப்பு பொதுத்தேர்வு: 11,070 பேர் தேர்வு எழுதவில்லை
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் 8.18 லட்சம் பேர் எழுத இருந்த இன்றைய தேர்வை 11,070 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
Mar 05, 2025 19:04 IST
அனந்த் அம்பானிக்கு சச்சின் பாராட்டு
குஜராத்தின் ‘வன்தாரா' விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை உருவாக்கிய அனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவினரின் செயல் பாராட்டுக்குரியது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 18:55 IST
கையெழுத்து இயக்கம் - அண்ணாமலை அறிவிப்பு
"சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் சந்திக்க உள்ளோம். திராவிடர் கழகமாக இருந்தாலும் தொகுதி மறுவரையறை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி
செய்ய நேரில் சென்று சந்திப்போம். இந்தியாவை, ஹிந்தியா என்று மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்று கூறுவதன் மூலன் கமல்ஹாசன் தனது மாநிலங்களவை இடத்தை உறுதி செய்துள்ளார்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். -
Mar 05, 2025 18:52 IST
'அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம்' - உதயநிதி ஸ்டாலின்
அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த ஒன்றிய அரசுத் துடிக்கிறது.
இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோம். இந்த முக்கியத்துவம் வாய்ந்தக் கூட்டத்தில், அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தீங்கினை மக்களிடம் எடுத்துச்சொல்வது உட்பட 5 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 18:11 IST
2026-ல் புதிய கல்விக்கொள்கை அமல் - அண்ணாமலை பேச்சு
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'சமக்கல்வி எங்கள் உரிமை' கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது காங்கிரசின் கொள்கை; இதை மோடி எதிர்த்துள்ளார். முகாந்திரம் இல்லாத நிலையில் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டம் தேவையற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு முன் பா.ஜ.க. எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை.
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. தமிழ்நாட்டில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். 2026-ம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். தேர்தல் கூட்டணிக்காக யாருடனும் நாங்கள் ரகசியமாக பேசவில்லை; தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நேரம், காலம் வரும்போது கூட்டணி சம்பந்தமாக பேசுவோம்." என்று அவர் கூறினார்.
-
Mar 05, 2025 18:04 IST
ஓய்வை அறிவித்தார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்!
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சரத்கமல் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
-
Mar 05, 2025 17:17 IST
சைபர் க்ரைம் மோசடியில் சிக்கிய ஓய்வு பெற்ற உயரதிகாரி!
தமிழ்நாடு வனத்துறையில் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் கோடிக்கணக்கில் சைபர் கிரைம் மோசடி நடத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் சுமார் ரூ.6.80 கோடி சைபர் கிரைம் மோசடி என புகார் எழுந்துள்ளது. ஓய்வுக்குப் பின் கிடைத்த பணப் பலன்களை ஒரே மாதத்தில் 2 போலி டிரேடிங் செயலியில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை 20க்கும் மேலான பரிவர்த்தனையில் பணத்தை இழந்துள்ளார்.
ஒரே மாதத்தில் 2 ஆன்லைன் டிரேடிங் செயலிலும் அதிகம் லாபம் கிடைப்பதாக ரூ.6.80 கோடி இழந்துள்ளார். ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 05, 2025 16:37 IST
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் 2 நாட்கள் ரத்து
எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 05, 2025 16:33 IST
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு: அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Mar 05, 2025 16:32 IST
`கனவு நிறைவேறிய நாள்: இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
நல்ல படம் பண்ணனும், அத பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டணும். இது டைரக்டர் ஆகணும்னு கஷ்டப்படுற ஓவ்வொரு உதவி இயக்குநரோட கனவு என்று ரஜினியின் பாராட்டு குறித்து அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.
-
Mar 05, 2025 15:39 IST
தொகுதி மறு சீரமைப்பு குறித்து திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஜெயக்குமார்
"தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை, திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தின் உரிமை பிரச்சினை என்பதால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 15:38 IST
கோவில்களில் சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
கோவில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும், சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 05, 2025 15:33 IST
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றாக நின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றாக நின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழகத்தின் நிலைப்பாட்டை உரத்த குரலில் தெளிவுபடுத்துகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 15:33 IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடிகர் வடிவேலு வாக்குமூலம்
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
Mar 05, 2025 14:51 IST
தமிழகத்தின் உரிமை பிரச்சினை என்பதால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம் - ஜெயக்குமார்
தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை, தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தின் உரிமை பிரச்சினை என்பதால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
-
Mar 05, 2025 14:39 IST
தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் – த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த்
தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும். இது தேவையற்றது, தற்போது உள்ள தொகுதிகளே தொடர வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்
-
Mar 05, 2025 14:25 IST
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும், காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Mar 05, 2025 14:12 IST
டிராகன் படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு
டிராகன் திரைப்படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Mar 05, 2025 14:02 IST
வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - சிவாஜி மகன் கோரிக்கை
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீடு நடிகர் பிரபு-க்கு சொந்தமானது என கூறப்படுகிறது
-
Mar 05, 2025 13:45 IST
அனைத்துக் கட்சி கூட்டம் – அ.தி.மு.க, த.வெ.க, ம.நீ.ம, தே.மு.தி.க ஆதரவு
அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்திற்கு அ.தி.மு.க, த.வெ.க, ம.நீ.ம, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாட்டை ஆபத்து சூழும் முன்பு நாம் இங்கு கூடியுள்ளோம். தற்போதுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
-
Mar 05, 2025 13:16 IST
தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு அ.தி.மு.க முழு ஆதரவு
தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு அ.தி.மு.க முழு ஆதரவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் 7.2% பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறினார்
-
Mar 05, 2025 13:09 IST
தென் மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை வி.சி.க வரவேற்கிறது - திருமாவளவன்
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை வி.சி.க வரவேற்கிறது, ஆதரிக்கிறது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறினார்
-
Mar 05, 2025 13:03 IST
இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள்
“கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கூடியிருக்கிறோம்; கலந்துகொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். எந்த வகையில் பாராளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தாலும் அதனால் பாதிக்கப்படப் போவது ஹிந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலங்களே" என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மநீம தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 12:49 IST
“இந்தியாவுக்கென்று ஒரு மாடல் இருக்குமென்றால்.. அது தமிழ்நாடு மாடல்தான்” -பேராசிரியர் க்றிஸ்டோப் ஜாஃபர்லாட்
“கல்வி, தனிநபர் வருமானம், ஊட்டச்சத்து குறைபாடு, வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை என அனைத்து அளவுகோலிலும் தெற்கிற்கும், வடக்கிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாடு சிறப்பான மாணவர்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவுக்கென்று ஒரு மாடல் இருக்குமென்றால் அது தமிழ்நாடு மாடல்தான்!” என்று நேர்காணல் ஒன்றில் லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய அரசியல் சமூகவியல் பேராசிரியர் க்றிஸ்டோப் ஜாஃபர்லாட் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 12:32 IST
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை. பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பேருந்தின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுளளார்.
-
Mar 05, 2025 12:05 IST
அந்த்யோத்யா ரயில் தாமதம்
தாம்பரத்தில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு கொல்கத்தாவின் சாந்த்ராகாஜி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டிருக்க வேண்டிய அந்த்யோத்யா ரயில் தாமதம் ஆனதால் மணிக்கணக்கில் காத்திருக்கும் வடமாநில பயணிகள். கொல்கத்தாவில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு தாம்பரம் வர வேண்டிய ரயில், இன்று காலைதான் வந்து சேர்ந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
Mar 05, 2025 11:32 IST
மத்திய அரசின் அணுகுமுறையை தடுப்பது கட்டாயம் - முத்தரசன்
எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது அதை வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். மத்திய அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை, எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது; மிகச் சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட்மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 11:16 IST
சென்னையில் போக்குவரத்து போலீசிடம் வாக்கி டாக்கி பறிப்பு - இருவர் கைது
சென்னை திருமங்கலம் அருகே போக்குவரத்து எஸ்.ஐ.யிடம் இருந்து வாக்கி டாக்கியை பறித்து பைக்கில் தப்பிச் சென்ற இருவரும் பிடிபட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த வாசுதேவ் (28), நேபாளத்தைச் சேர்ந்த தினேஷ் (27) இருவரும் அப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று மதுபோதையில் பைக் ஓட்டி வரும் போது, போலீஸ் மறித்ததால் அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
-
Mar 05, 2025 11:14 IST
ஏப்.2-ல் இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி
இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப். 2 ஆம் தேதி முதல் அமெரிக்கா பரஸ்பர வரி விதிக்கும் ஏப்ரல் 1 ஆம் முட்டாள்கள் தினம் என்பதால், ஏப்ரல் 2 ஆம் தேதி பரஸ்பர வரிவிதிப்பு என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேசியபோது கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 11:09 IST
சம நீதி தேவை என்பதையே வலியுறுத்துகிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரி அல்ல; அதில் சம நீதி தேவை என்பதையே வலியுறுத்துகிறோம் விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்; மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்க்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Mar 05, 2025 10:59 IST
தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க தீர்மானம்
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
Mar 05, 2025 10:56 IST
தொகுதி மறுசீரமைப்பு - அனைத்து கட்சியினருக்கும் ஸ்டாலின் வலியுறுத்தல்
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை கட்சி எல்லைகளை கடந்து தமிழக நலனுக்காக எதிர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இது நடைமுறைக்கு வந்தால் 12 தொகுதிகள் வரை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Mar 05, 2025 10:28 IST
தொகுதி மறுசீரமைப்பு; தென்னிந்தியாவுக்கு அபாயமான செயல் - ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்னிந்தியாவுக்கு அபாயமான செயல் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, "மக்கள் தொகை, விகிதாச்சார முறையில் தொகுதிகளை கணக்கிட்டால் தமிழ்நாடு பாதிக்கப்படும்" என்று அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் உரையாற்றியுள்ளார்.
-
Mar 05, 2025 09:56 IST
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வருகை தருகின்றனர்.
-
Mar 05, 2025 09:17 IST
தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனை - விஜய்
நாடாளுமன்ற மறுசீரமைப்பை கண்டித்து த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை மத்திய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 08:29 IST
தமிழுக்கு அலுவல் மொழி அந்தஸ்து வேண்டும் - ஸ்டாலின்
இந்திக்கு நிகராக தமிழுக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், "பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது. தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 07:44 IST
டிரம்புடன் மோதல் - ஜெலன்ஸ்கி வருத்தம்
டிரம்ப் உடனான சந்திப்பின் போது நிகழ்ந்த மோதல் சம்பவத்திற்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப்பின் பலமான தலைமையின் கீழ் பணியாற்ற தயார் என்றும் அறிவித்துள்ளார்.
-
Mar 05, 2025 06:35 IST
இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பங்கேற்கவுள்ள நிலையில், பா.ஜ.க, நா.த.க ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.