/indian-express-tamil/media/media_files/2025/01/07/PqLcJkObirwlvBmXF3Wc.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
870 பேர் மீது வழக்கு
சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன் உள்பட 870 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jan 24, 2025 05:18 IST
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து - அரசியல் தலைவர்கள் வரவேற்பு
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் முடிவுக்கு செல்வப்பெருந்தகை, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
Jan 23, 2025 20:05 IST
டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த வெற்றி, யாருக்கு என்று பேசக்கூடாது - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து மக்களுக்கு கிடைத்த வெற்றி, யாருக்கு வெற்றி என்று பேசக்கூடாது. தமிழக அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியது. டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து வி.சி.க மனு அளித்திருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 23, 2025 20:02 IST
டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து - இ.பி.எஸ் வரவேற்பு
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மதுரை, மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். மக்களின் போராட்டத்தை உணர்ந்த மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் செயலுக்கு முற்றுப்புள்ளி” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 23, 2025 19:10 IST
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழக அரசில் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக, அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
-
Jan 23, 2025 19:01 IST
`கவனமாக இருங்கள்' - நடிகர் ராஜ் கிரண் பதிவு
“என்னுடன் எடுத்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை
அணுகினாலும் அவர்களிடம் கவனமாக இருங்கள். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்து, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு” என்று நடிகர் ராஜ் கிரண் பதிவிட்டுள்ளார். -
Jan 23, 2025 18:49 IST
கியூ கோடு மூலம் அனுமதி - அண்ணா பல்கலை. திட்டம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கு கியூ கோடு மூலம் அனுமதிக்கும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை. வளாகத்துக்குள் வருவோரை கண்காணிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. இணையதளம் மூலம் செயலி கொண்டு வரப்பட்டு அதன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலை.யில் யாரையும் பார்க்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட செயலி மூலம் முன் அனுமதி பெற வேண்டும். பார்வையாளர்களின் விவரம் நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
Jan 23, 2025 18:35 IST
பதவிகளுக்கு பணம் - த.வெ.க ஆனந்த் எச்சரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தில், பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பதவிகளில் எந்தவித சமரசமும் இன்றி முறையாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமென விஜய் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
Jan 23, 2025 18:32 IST
மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - ஸ்டாலின்
“அனுமதி இல்லாமல் அறிவிப்புகளை வெளியிட கூடாது. மாநில அரசின் அனுமதி பெறாமல் சுரங்க ஏல அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க-வும் துணைபோகக் கூடாது" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jan 23, 2025 17:48 IST
சிக்கலான குற்ற வழக்குதமிழக அரசு, டி.ஜி.பி-க்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை
"சிக்கலான குற்ற வழக்குகளை விசாரிக்கவும், விசாரிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் பிரத்யேக குழு அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்று தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
-
Jan 23, 2025 17:35 IST
இரும்பு நாகரீகம் - ராகுல்காந்தி கருத்து
இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து தொடங்கியதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
இரும்பு யுகத்தில் இந்தியாவின் ஆரம்ப முன்னேற்றங்களைக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நமது தேசம் முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன" என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
-
Jan 23, 2025 17:18 IST
`ஞானசேகரன் பிரியாணி' - சிக்கிய 6 போலீசார்
மாமூல் பிரியாணிக்காக ஞானசேகரனுடன் அடையாறை சேர்ந்த ஆறு போலீசார் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளனர். போலீசாரின் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் துறைக்கு அனுப்பிய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்.
-
Jan 23, 2025 17:17 IST
செக் மோசடி - இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு சிறை தண்டனை
செக் மோசடி வழக்கில், திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபர தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
Jan 23, 2025 16:41 IST
நடிகர் விஷால் குறித்து அவதூறு: நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு
மதகஜராஜா திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் அவரைப்பற்றியும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், யூடியூபர் சேகுவாரா கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீதும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி, நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர், அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சேகுவாரா மற்றும் யூடியூப் சேனல்கள் மீது தேனாம்போட்டை போலீசார் வழக்குப்பதிவு -
Jan 23, 2025 16:39 IST
ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
சவாரிகளை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனத்தின் வகையின் அடிப்படையில் மாறுபடும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்மார்ட் போன் அடிப்படையிலான மாறுபட்ட கட்டணம் தொடர்பாக ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Jan 23, 2025 16:35 IST
ஓடும் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து லாரியில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுநர்
மாதவரம் தனியார் நிறுவனத்தில் இருந்து ஆடைகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்ற லாரியில், கேபினில் புகை வந்ததும் டிரைவர் இறங்கிய ஓடினார். புகை எழுந்த சிறிது நேரத்தில் கண்டெய்னர் லாரி முற்றிலும் தீப்பற்றி எரிந்தது.
-
Jan 23, 2025 16:34 IST
ஈராக் - பெண்களின் திருமண வயது குறைப்பு
ஈராக்கில் ஷியா பிரிவு பெண்களின் திருமண வயது 9ஆக குறைக்கப்பட்டுள்ளது. சன்னி பிரிவில் பெண்களின் திருமண வயதை 15ஆகவும் குறைத்து சட்டம் இயற்றியது அரசு
-
Jan 23, 2025 16:33 IST
தூக்குதண்டனை கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலை மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சதீஷை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில், புழல் சிறையில் இருந்து அவரை வரும் 29ம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு
-
Jan 23, 2025 16:31 IST
அமெரிக்க குடியுரிமைக்காக அவசரம் காட்டும் தம்பதிகள்!
பிப்.19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 'அமெரிக்க குடியுரிமை' கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர். பிப்.19 முதல் பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்க தடை விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்
-
Jan 23, 2025 16:28 IST
செஸ் தரவரிசை: இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான குகேஷ்
செஸ் வீரர்களுக்கான எஃப்.ஐ.டி.இ தரவரிசை பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி, இந்தியாவின் நம்பர் ஒன் வீரரானார் தமிழக செஸ் வீரர் குகேஷ்.
-
Jan 23, 2025 16:18 IST
தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், நெல்லை நகர துணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jan 23, 2025 15:35 IST
கல்வி உதவித்தொகை பற்றிய அழைப்புகள்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், OTP கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்வி உதவித்தொகையானது SC/ST, BC, MBC நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. Phonepe, Gpayயில் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளே என விளக்கம் அளித்துள்ளது.
-
Jan 23, 2025 14:55 IST
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ள நிலையில் இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
-
Jan 23, 2025 14:37 IST
தமிழகத்தில் இன்று மழை பெய்யும்... வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் இன்று (23-01-2025) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல்.
-
Jan 23, 2025 14:34 IST
ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி - அமைச்சர் செ்தில் பாலாஜி
5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது நிரூபிக்கப்பட்டதை குறிப்பிட்டு அமைச்சர் செ்தில் பாலாஜி முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதை இந்த உலகிற்கு அறிவித்தற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறி, தமிழை இருட்டடிப்பு செய்த ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி என்றும் தெரிவித்துள்ளார்.
-
Jan 23, 2025 14:06 IST
சென்னை - ஸ்பெஷல் டீம் போலீஸ் எனக்கூறி வழிப்பறி
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே, ஸ்பெஷல் டீம் போலீஸ் எனக்கூறி கடலூரைச் சேர்ந்த சேது என்பவரிடம் ₹12,000 வழிப்பறி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி, ரம்ஜான் அலி மற்றும் இப்ராஹிம் மூவரும் அப்பகுதியில் தொடர்ந்து இதுபோல வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Jan 23, 2025 13:43 IST
கீழடி இணையதளம் தொடக்கம்
கீழடி இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்கும் வகையில் மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டுள்ளது.
-
Jan 23, 2025 13:19 IST
திருவள்ளுவர் கோவில் - புனரமைக்கும் பணி தொடக்கம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலை புனரமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
-
Jan 23, 2025 13:07 IST
சென்னை - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் சேவை: பயணிகள் குற்றச்சாட்டு
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு. ரயில் சேவையின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளதாக புகாரளித்துள்ளனர். இந்த மார்கத்தை 4 வழித்தடமாக மாற்ற வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க 12 பேட்டிகள் கொண்ட ரயில்களை ஐயா வேண்டும் என்று அந்த மக்கள் கூறியுள்ளனர்.
-
Jan 23, 2025 12:55 IST
சிறுவாபுரி, திருத்தணி கோவில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் - சேகர் பாபு
சிறுவாபுரி மற்றும் திருத்தணி பகுதிகளில், இந்த ஆண்டு இறுதிக்குள் பாதை விரிவாக்கம் மற்றும் மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
-
Jan 23, 2025 12:52 IST
ரஞ்சி டிராபி; ரோகித் சர்மா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு
ரஞ்சி கோப்பை போட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று களமிறங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
-
Jan 23, 2025 12:32 IST
டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு; டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டி.ஜி.பி 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்விகி, சோமேட்டோ, டன்சோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Jan 23, 2025 12:08 IST
சென்னை புறநகர் பகுதியில் பிப்ரவரி முதல் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி
சென்னை புறநகர் பகுதியில் பிப்ரவரி முதல் தனியார் மினி பேருந்துகள் இயங்க போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட இடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் மினி பேருந்துகளுடன் கூடுதல் சேவைக்காக தனியார் மினி பேருந்துகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
-
Jan 23, 2025 11:57 IST
எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினால் கூட்டணி அமைந்துவிடும் - நயினார் நாகேந்திரன்
ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்கும் அவசியம் பா.ஜ.கவுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினால் கூட்டணி அமைந்துவிடும் என பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
-
Jan 23, 2025 11:55 IST
அண்ணா பல்கலை. வழக்கு; அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்த அடையாறு போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் ஞானசேகரன் நடத்தி வந்த கடையில் போலீசார் பிரியாணி வாங்கினார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது
-
Jan 23, 2025 11:31 IST
தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது - ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது. தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன். தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள்! உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Jan 23, 2025 11:11 IST
5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு இருந்தது – ஸ்டாலின்
அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Jan 23, 2025 11:06 IST
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் தொன்மை தொடக்கம் - மு.க.ஸ்டாலின்
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் தொன்மை தொடங்கியது. தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு அறிமுகமாகியுள்ளது என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது என இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Jan 23, 2025 11:00 IST
12,500 சிங்காரச் சென்னை பயண அட்டைகள் விற்பனை
சென்னையில் சிங்காரச் சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் 12,500 பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தின் கீழ் ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்தில் பயணம் செய்ய முடியும்.
-
Jan 23, 2025 09:34 IST
ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடக்கம்
அண்ணா பல்கலை. விவகாரத்தில் கைதான ஞானசேகரன் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது.
-
Jan 23, 2025 09:33 IST
தமிழக அரசு மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை, பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க மசோதா வழிவகை செய்கிறது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்
-
Jan 23, 2025 08:03 IST
தீவிபத்து வதந்தி ரயிலில் இருந்து குதித்து 12 பேர் பலி
புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ள என வதந்தி பரவிய நிலையில் பயணிகள் அலறிஅடித்து ரயிலில் இருந்து குதித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை, தீவிபத்து வதந்தியை அடுத்து மும்பை செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரல் ரயிலின் அலாரம் சங்கிலி இழுத்து ரயிலில் இருந்து பயணிகள் குதித்துள்ளனர். அப்போது எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரயில் மோதியதில் 12 பேர் பலி. மேலும் 10 பயணிகள் காயமடைந்தனர், அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
-
Jan 23, 2025 07:56 IST
டங்ஸ்டன் திட்டம்- அண்ணாமலை முக்கிய தகவல்
டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடன் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்த பின் இதைக் கூறினார்.
-
Jan 23, 2025 07:54 IST
ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் இன்று முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.