/indian-express-tamil/media/media_files/2025/07/31/justice-yashwant-varma-2-2025-07-31-03-36-52.jpg)
நீதிபதி யஷ்வந்த் வர்மா Photograph: (கோப்புப் படம்)
Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (07-08-2025) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 07, 2025 12:33 IST
டிஎஸ்பியை டிஸ்மிஸ் செய்ய பிறப்பித்த ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
கோட்டக்குப்பம் டிஎஸ்பியாக இருந்த சுனிலை டிஸ்மிஸ் செய்ய தனி நீதிபதி பிறபித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. வன்கொடுமை சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத சுனிலை டிஸ்மிஸ் செய்ய தனிநீதிபதி உத்தரவிட்டுந்தார். தற்போது தேனி மாவட்ட டிஎஸ்பியாக உள்ள சுனில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
-
Aug 07, 2025 12:33 IST
பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம் காட்டுகிறார்: மல்லை சத்யா
மத்திய அமைச்சர் ஆகும் ஆசையில் பாஜகவுடன் துரை வைகோ நெருக்கம் காட்டி வருகிறார் வைகோ வேண்டுமானால் திமுக கூட்டணியை விரும்பலாம். ஆனால் துரை வைகோ பாஜகவோடு நெருக்கம் காட்டுகிறார் என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ளார்.
-
Aug 07, 2025 12:11 IST
கலைஞரின் நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞரின் நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ்ப் பதிக்கத்தின் 8 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில், உருவாகியுள்ள “தி.மு.க வரலாறு”, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!”, “மாநில சுயாட்சி முழக்கம்”, “திராவிட இயக்க வரலாறு கேள்வி-பதில்”, “இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”, “இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிடமாடல்!”, “இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்” ஆகிய 8 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
-
Aug 07, 2025 11:42 IST
அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
தமிழ்நாட்டின் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தாக்கல் செய்த பாஜக ஆதரவாளரான வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் விதித்துள்ளது.
-
Aug 07, 2025 11:41 IST
ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான்: ராமதாஸ் வேதனை
பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து தனக்கு எதிராக செயல்பட தூண்டுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் செல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை; நான் கதவை அடைக்கவுமில்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Aug 07, 2025 11:35 IST
நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு - தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
அலகாபாத் உயர்நீதிமன்ற வளாக குழு அறிக்கையை ரத்துசெய்யக் கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியில் இருந்து நீக்குவதற்கு தலைமை நீதிபதி அளித்த பரிந்துரையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மஸி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
-
Aug 07, 2025 11:07 IST
14 மீனவர்கள் கைத செய்த இலங்கை கடற்படை - ஸ்டாலின் கடிதம்
நேற்று புதன்கிழமை கைதான 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் 17வது முறையாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
-
Aug 07, 2025 11:00 IST
இந்திய விவசாயிகளுக்கு முன்னுரிமை; சமரசம் கிடையாது - மோடி திட்டவட்டம்
"இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இருக்கிறேன். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது" என்று இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
Aug 07, 2025 10:24 IST
இந்தியில் பேச மறுத்த கஜோல் - மீண்டும் கிளம்பிய சர்ச்சை
மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்த விவகாரம் மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கஜோல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசிய அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த கஜோல், “நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்” என்று கடுமையான தொனியில் கூறினார்.
-
Aug 07, 2025 09:54 IST
வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ. 20 அதிகரித்து ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது.
-
Aug 07, 2025 09:29 IST
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியை தொடங்கியது. ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி, கலைஞர் நினைவிட வரை செல்லும் பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
Aug 07, 2025 09:28 IST
நெல்லை: மின் ஊழியரை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த ஜேம்ஸ்ராஜ் (வயது 49) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு, டவுண் பகுதியை சேர்ந்த மின் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மின் ஊழியர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து காவல்துறையினர் அடிதடி வழக்காக பதிவு செய்து ஜேம்ஸ்ராஜை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (6.8.2025) நீதித்துறை நடுவர் ஜெய சங்கரகுமாரி குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ்ராஜிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு IPC 294(b)ன்படி மூன்று மாதங்கள் சிறை தண்டனை, IPC 355ன்படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், IPC 353ன்படி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
-
Aug 07, 2025 09:20 IST
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களை ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Aug 07, 2025 09:02 IST
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு - வனத்துறை அறிவிப்பு
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் கோவை குற்றாலம் அருவி பாதுகாப்புக் கருதி மூடப்பட்டது. இந்நிலையில் அருவிக்கு வரும் நீரின் வேகம் சீராக உள்ளதால் மீண்டும் இன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.
-
Aug 07, 2025 08:54 IST
எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 4ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த அவகாசம் மீண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Aug 07, 2025 08:37 IST
கருணாநிதி நினைவு தினம் - தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.
-
Aug 07, 2025 08:29 IST
கண்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதி பெண் பலி, 7 பேர் காயம்
சென்னை மதுரவாயல், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஆட்டோவில் சென்ற பெண் ஒருவர் பலி, ஓட்டுநர் உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Aug 07, 2025 07:55 IST
எஸ்.எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம் - கொலையாளி என்கவுன்ட்டர்
திருப்பூரில் விசாரணைக்குச் சென்ற சிறப்பு எஸ்.ஐ.கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3-வது நபரான மணிகண்டன் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். கைது செய்ய முயன்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது போலீசார் சுட்டதில் மணிகண்டன் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Aug 07, 2025 07:51 IST
கேரளா: முறையாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்
கேரள மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், சட்டவிரோதமாக விடுப்பில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவக்கல்வி துறையில் பணி செய்து வந்த 51 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்
-
Aug 07, 2025 07:45 IST
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (07-08-2025) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 07, 2025 07:43 IST
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: கிரண் ரிஜிஜூ திட்டவட்டம்
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி மக்களவையில் விவாதிக்க முடியாது என கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விவாதிக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
-
Aug 07, 2025 07:43 IST
நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: கர்ப்பிணி பலி
நாமக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்ததில் காரில் இருந்த நிறைமாத கர்ப்பிணி திலகவதி (32) உயிரிழந்தார். 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
Aug 07, 2025 07:24 IST
கலைஞரின் நினைவு நாளை ஒட்டி ஸ்டாலின் பெருமிதம்
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு கலைஞர். அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட, முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என கலைஞரின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Aug 07, 2025 07:23 IST
இலவச அறுபடை வீடு பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 07, 2025 07:22 IST
பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று 3வது சுற்று கலந்தாய்வு
நடப்பு கல்வியாண்டில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 14 முதல் 16 வரை, 2வது சுற்று ஜூலை 26 முதல் 28 வரைநடந்தது. இதன் மூலம் 91 ஆயிரத்து 365 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 3வது சுற்று கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கட் ஆப் மதிப்பெண் 143 முதல் 77.500 வரை பெற்ற மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இவர்கள் 9ம் தேதி மாலை 5 மணிக்குள் பிடித்த கல்லூரிகளை வரிசை படி தேர்வுசெய்ய வேண்டும்.
-
Aug 07, 2025 07:21 IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நேற்று தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போட்டி திடீரென ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று தொடங்குகிறது. போட்டி நடைபெறும் ஓட்டலின் 9-வது தளத்தில் மின்கசிவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து காரணமாக கடைசி நேரத்தில் போட்டி ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தீ விபத்தால் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. 9 சுற்றுகளை கொண்ட சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.