/indian-express-tamil/media/media_files/2025/07/29/anbumani-ramadoss-3-2025-07-29-06-05-44.jpg)
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்
Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 08, 2025 21:29 IST
பா.ம.க பொதுக்குழுவுக்கு தடையில்லை: நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி - அன்புமணி
அன்புமணி நடத்தும் பா.ம.க பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி, “நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி; நாளைய பொதுக்குழுவுக்கு தடையில்லை. அனைவரையும் சந்திக்கவும் ஜனநாயக முறையில் விவாதிக்கவும் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
- Aug 08, 2025 20:47 IST
அன்புமணி நடத்தும் பா.ம.க பொதுக்குழுவுக்கு தடையில்லை - ஐகோர்ட் உத்தரவு
அன்புமணி நடத்தும் பா.ம.க பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு தடை கோரி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- Aug 08, 2025 20:07 IST
வறுமை இல்லாத மாநிலமாக உள்ளது தமிழ்நாடு; இதுதான் கம்பன் கண்டன கனவு - மு.க.ஸ்டாலின்
சென்னையில் கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது; இதுதான் கம்பன் கண்ட கனவு; சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது” என்று கூறினார்.
- Aug 08, 2025 19:24 IST
பா.ம.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு
பா.ம.க பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடந்த இந்த விசாரணையின்போது, அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜரானார். மேலும், பொதுக்குழு தொடர்பான காணொலி மற்றும் ராமதாஸ் தரப்பின் விளக்கங்களையும் நீதிபதி கேட்டறிந்தார்.
- Aug 08, 2025 19:21 IST
ரஷ்ய அதிபர் புதின் உடன் மோடி ஆலோசனை
ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். எங்கள் இருதரப்பு நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். மேலும், இந்தியா - ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
- Aug 08, 2025 19:15 IST
பா.ம.க பொதுக்குழு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
பா.ம.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார். அன்புமணி தரப்பு, ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். முன்னதாக அன்புமணி, ராமதாஸ் இருவரிடமும் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- Aug 08, 2025 18:55 IST
சீதா தேவிக்கு பிரமாண்ட கோயில் – அமித்ஷா அடிக்கல்
அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது போல, சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனவ்ரா தாம் பகுதியில் பிரமாண்டமான கோயில் அமைக்கும் பணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
- Aug 08, 2025 18:37 IST
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை பார்த்து தி.மு.க.,விற்கு பயம் – இ.பி.எஸ்
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை பார்த்து தி.மு.க.,விற்கு பயம் வந்துவிட்டது, தி.மு.க.,தான் போலி வாக்காளர்களை சேர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. போலி வாக்காளர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க.,வை விமர்சனம் செய்ய தி.மு.க.,விற்கு தகுதி கிடையாது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
- Aug 08, 2025 18:17 IST
ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜரானால் ஏற்கிறேன் - நீதிபதி
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேரில் வர முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கடிதம் சமர்பித்த நிலையில், காணொலி வாயிலாக ஆஜரானால் ஏற்கிறேன் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்
- Aug 08, 2025 17:50 IST
எஸ்.சி.ஓ மாநாடு - மோடிக்கு சீனா அழைப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தியான்ஜின் நகரில் எஸ்.சி.ஓ (SCO) உச்சி மாநாட்டை சீனா நடத்தவுள்ளது ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சீனா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா விதித்த வரி குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவுடன் இணைந்து இந்தியா ரஷ்யாவிடம் எரிசக்தி துறை தொடர்பாக ஒப்பந்தமும் மேற்கொள்ள உள்ளது
- Aug 08, 2025 17:47 IST
பா.ம.க உட்கட்சி விவகாரம் - நீதிபதியை சந்தித்த அன்புமணி
அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை அன்புமணி சந்தித்தா. நாளை பா.ம.க பொதுக்குழுவை நடத்துவது குறித்து, நீதிபதியை சந்தித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. பொதுக்குழு விவகாரம் குறித்து நேரில் சந்திக்க நீதிபதி அழைப்பு விடுத்த நிலையில், அன்புமணி நேரில் வந்தார். ஆனால், நேரில் வர ஆவலுடன் இருந்தேன், உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை என ராமதாஸ் தரப்பில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது
- Aug 08, 2025 17:31 IST
புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்ற மத்திய அரசு
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. திருத்தப்பட்ட வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது
- Aug 08, 2025 17:16 IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; அசாமை சேர்ந்தவருக்கு 3வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த பிஸ்வகர்மாவுக்கு 3வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- Aug 08, 2025 17:13 IST
ரஜினியின் ’கூலி’ திரைப்படம் - முன்பதிவுக்கு முண்டியடித்த ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள `கூலி' திரைப்படத்திற்கான முன்பதிவு கேரளாவில் தொடங்கியுள்ளது. வரும் 14 ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்
- Aug 08, 2025 16:43 IST
வங்கதேசத்தினரை காப்பாற்ற ராகுல்காந்தி விரும்புகிறார்- அமித்ஷா
அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து திரியும் ராகுல்காந்தி, அதைத் திறந்து படிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை. ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா? இல்லையா? பீகார் மக்களின் வேலையை பறிக்கும் வங்கதேசத்தினரை காப்பாற்ற ராகுல்காந்தி விரும்புகிறார்
- அமித்ஷா
- Aug 08, 2025 16:26 IST
IAS அதிகாரிகள் அரசை நடத்தவில்லை- தமிழக அரசு
தமிழகத்தில் IAS அதிகாரிகள் அரசை நடத்தவில்லை, முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசை நடத்துகிறார். ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
- Aug 08, 2025 16:25 IST
ராகுல்காந்தி குற்றச்சாட்டு - அமித்ஷா பதிலடி
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முதல் முறை அல்ல, நேருவால் தொடங்கப்பட்டது, 2003ம் ஆண்டும் நடந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை ராகுல்காந்தி இப்போதே தேட தொடங்கிவிட்டார்.
- அமித்ஷா
- Aug 08, 2025 15:33 IST
இஸ்ரேல் அரசின் முடிவுக்கு ராணுவம் எதிர்ப்பு
2005ம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய நிலையில், தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றும் முடிவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இம்முடிவால் காசாவில் இருக்கும் பணயக் கைதிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் எனக்கூறி இஸ்ரேல் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
போரின் தொடக்கத்தில் காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Aug 08, 2025 15:31 IST
உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை
மத்தியஸ்தம் பேச உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அழைத்த நிலையில் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று நீதிமன்றத்திற்கு வரமாட்டார் என அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ். கோபு கூறியுள்ளார்.
- Aug 08, 2025 14:22 IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய இருவர் கைது!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் செல்போன்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜாவித் மற்றும் அசாமைச் சேர்ந்த மெகபூர் இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.
- Aug 08, 2025 14:20 IST
வரும் 13ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13ம் தேதி காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்,
- Aug 08, 2025 14:19 IST
எல்லாருக்கும் துரோகம் இழைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்: முத்தரசன்
கம்யூனிஸ்ட் கட்சி குறித்த இபிஎஸ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள முத்தரசன் "எல்லாருக்கும் துரோகம் இழைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்" என்று கூறியுள்ளார்.
- Aug 08, 2025 13:38 IST
ராமதாஸ், அன்புமணி நேரில் சந்திக்க நீதிபதி அழைப்பு
அன்புமணி நடத்தும் பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், ராமதாஸ் அன்புமணி ஆகியோரை கட்சி நலன் கருதி இருவருடன் தனியாக பேச வேண்டும், மாலை 5.30 மணிக்கு அறைக்கு வரும்படி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
- Aug 08, 2025 13:37 IST
வெள்ளை தாடியால் ரசிகர்கள் ஷாக்: கோலியின் ரீசன்ட் போட்டோ வைரல்
கிட்டத்தட்ட 1 மாதம் வெளியில் தலை காட்டாத விராட் கோலி, தற்போது லண்டனில் ஒரு ரசிகருடன் எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. அவரது முகத்தில் இருக்கும் வெள்ளை தாடியால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரிட்டைர்மென்ட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தாடிக்கு அடிக்கடி கலர் செய்ய வேண்டிய வயது வந்துவிட்டது என கோலி குறிப்பிட்டிருந்தார். ODIயில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரோ
என தாடியை பார்த்து கமென்ட் செய்யும் நெட்டிசன்கள் - Aug 08, 2025 12:53 IST
பா.ஜ.க தலைவருக்கு `எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அதே கார் எண்'
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அதே கார் எண்ணுடன் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சார வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் தயாராகியுள்ள இந்த வாகனத்தில் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க-வுக்காக வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- Aug 08, 2025 12:47 IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேடு பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்?. போலி வாக்காளர்களை சேர்த்து பாஜகவிற்கு துணை போகும் அதிமுகவிற்கு எதிராக தமிழ்நாடு ஓரணியில் நின்று வெல்லும். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் உரிமையையே அபகரிக்க நினைக்கிறார்கள். நாட்டை தொடர்ந்து ஆள பாஜக எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருவதாக துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
- Aug 08, 2025 12:46 IST
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
- Aug 08, 2025 12:45 IST
மாநில கல்வி கொள்கையை வெளியிட்ட ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார். பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என குழு பரிந்துரை செய்துள்ளது.
- Aug 08, 2025 12:27 IST
ஒரேயொரு வேட்பாளர் என்றால் நோட்டாவை மறுக்கலாமா? - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரேயொரு வேட்பாளர் போட்டியிட்டால் நோட்டாவை மறுக்க முடியுமா? என்றும், வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என தெரிவிக்க நோட்டாவை வாக்காளர்கள் பயன்படுத்த வாய்ப்பு தரப்படுமா? என்றும் போட்டியின்றி தேர்வாகும்போது தேர்தல் நடத்தாதது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பல சமயங்களில் போட்டி வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்படுவதால் தேர்தலில் ஒரேயொருவர் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்று ஒரே ஒருவர் மட்டும் போட்டியின்றி தேர்வு என ஆணையம் அறிவிக்கிறது. ஒரேயொரு வேட்பாளரை பிடிக்கவில்லை என வாக்காளர்கள் தெரிவிக்கும் வாய்ப்பு தேர்தல் நடக்காததால் மறுக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- Aug 08, 2025 12:00 IST
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க போராட்டம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜிப்மரில் வேலை வாய்ப்புகளில் புதுச்சேரி மக்களை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் திமுக சிவா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Aug 08, 2025 11:39 IST
பாலியல் பலாத்கார வழக்கு - சாமியார் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோல் நீட்டிப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மோசமாக உள்ளதால் ஆசாராம் பாபுவின் மருத்துவ பரோலை நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Aug 08, 2025 11:37 IST
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகின்றனர் - ஐகோர்ட் கடும் கண்டனம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர் என உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு தொடர்ந்த நிணலயில், எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது உணர்வு பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது." என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
- Aug 08, 2025 10:36 IST
பாலின உளவியல் விழிப்புணர்வு - குழு அமைப்பு: அமைச்சர் கோவி.செழியன்
"மாணவ மாணவிகளிடையே பாலின உளவியல் குறித்தான விழிப்புணர்வு காலத்தின் அவசியமாகிவிட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்த பேராசிரியர்கள் அடங்கிய குழு கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
- Aug 08, 2025 10:12 IST
சென்னை: ஏ.சி. மின்சார பேருந்து ஆகஸ்ட் 11-ல் தொடக்கம்
சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து ஆகஸ்ட் 11ல் தொடங்கப்பட உள்ளது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 80 சாதாரண மின்சார பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. 625 பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- Aug 08, 2025 10:09 IST
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப எச்சரிக்கை
போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார். நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
- Aug 08, 2025 09:47 IST
ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று ஆர்ப்பாட்டம்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பா.ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
- Aug 08, 2025 09:18 IST
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
நாகாலாந்து மாநில ஆளுநராகப் இல.கணேசன் (வயது 80) பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இந்தநிலையில், இல.கணேசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- Aug 08, 2025 08:37 IST
காசாவை முழு கட்டுப்பாட்டில் எடுக்க விருப்பம்: இஸ்ரேல் பிரதமர்
காசாவை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். காசா முழுவதையும் தங்களது ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்; காசாவை அரசின் கீழ் நிர்வகிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
- Aug 08, 2025 08:24 IST
சுதந்திர தினவிழா-காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியில், முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவதற்கான போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுகிறது. 2ம் மற்றும் 3ம் கட்ட ஒத்திகை ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
- Aug 08, 2025 08:00 IST
நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுககனி திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரப்படி நேற்று (7.8.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
- Aug 08, 2025 07:53 IST
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற பிரகாஷ் என்பவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்தனர். கடத்தல்காரர்களிடம் இருந்து 36 மூட்டைகள் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
- Aug 08, 2025 07:42 IST
8 மாவட்டங்களில் இன்று 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 08, 2025 07:24 IST
3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Aug 08, 2025 07:20 IST
அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை - விஜய் திட்டவட்டம்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முழுவீச்சில் தயாராகி வரும்நிலையில், மதுரையில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டின் மீது அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். விஜய் தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரிடம் கலந்துரையாடியுள்ளார். அதில், எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
- Aug 08, 2025 07:19 IST
மாநில கல்விக் கொள்கை - இன்று வெளியிடுகிறார் ஸ்டாலின்
மாநில கல்விக் கொள்கையை இன்று(ஆகஸ்ட் 08) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். மாநில கல்விக் கொள்கை உருவாக்க 2022ல் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி முருகேசன் குழு தயாரித்த மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2024-ஜூலையில் சமர்ப்பித்தது.14 பேர் கொண்ட குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. பள்ளி, உயர்கல்விக்கு என்று தனித்தனியாக மாநில கல்வி கொள்கைகளை முதல்வர் வெளியிடுகிறார். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.