/indian-express-tamil/media/media_files/2025/04/20/rLk3dKgPI38QbzOEUbe7.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவின் ஓணம் திருவிழா: மகாபலியின் மறுவருகையை கொண்டாடும் பண்டிகையாகும். மகாபலியின் நற்குணங்களை நினைவுகூர்ந்து, மக்கள் வீடுகளை அலங்கரித்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அறுசுவை உணவுகளை சமைத்து மகாபலியை வரவேற்கின்றனர். இந்த பண்டிகை, கேரள மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகும்.
- Aug 28, 2025 11:31 IST
ஸ்டாலின் வலியுறுத்தல்
திருப்பூர், நாட்டின் முன்னணி ஜவுளி மையங்களில் ஒன்றாக இருந்தாலும், தற்போது பெரிய அளவில் வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதனால், சுமார் 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் இழக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலமும் நிச்சயமற்றதாக மாறியுள்ளது.
நமது தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அவசர நிவாரண உதவிகளையும், தொலைநோக்கு சீர்திருத்தங்களையும் அறிவிக்க வேண்டும் என்று நான் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.
The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore and putting thousands of jobs at risk.
— M.K.Stalin (@mkstalin) August 28, 2025
I reiterate my demands to the Union Government for immediate relief and structural reforms to… https://t.co/Yhxo3EfBTMpic.twitter.com/xXe5wVLpjH - Aug 28, 2025 10:51 IST
தமிழ்நாடு முதலிடம்
நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட, 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (Annual Survey of Industries - ASI) முடிவுகளின்படி, இப்பட்டியலில் குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்திரப் பிரதேசம் (8%), கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- Aug 28, 2025 10:43 IST
இ.பி.எஸ். வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை அலுவலகத்திற்கும் அதே மின்னஞ்சலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில், மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
- Aug 28, 2025 10:41 IST
மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிம்ஆர்எல் (CMRL) மொபைல் செயலி, பேடிம், போன்பே, சிங்கார சென்னை கார்டு (Paytm, phonepe, Singara Chennai Card, CMRL) பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. - Aug 28, 2025 09:20 IST
தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 28, 29 ஆகிய 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
- Aug 28, 2025 09:00 IST
சேப்பாக்கத்தின் சிங்கம் - அஸ்வினுக்கு CSk வாழ்த்து
ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தின் சொந்த சிங்கம். கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன். முதல் முறையாக மஞ்சள் நிற சீருடையுடன் புழுதி பறக்கும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழற்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியதுடன், அணிக்காக எல்லாவற்றையும் வழங்கினீர்கள். நமது பாரம்பரியத்தின் துணாக இருந்து சேப்பாக்கம் கோட்டையில் கர்ஜித்தீர்கள். நன்றி அஸ்வின்” என்று பதிவிட்டுள்ளது.
- Aug 28, 2025 08:37 IST
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்தேபோரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. குரேஸ் செக்டரில் இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசும் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், இந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
- Aug 28, 2025 08:34 IST
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 குழந்தைகள் பலி
அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டனர். மேலும், 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Aug 28, 2025 08:15 IST
திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்த தெரு நாய்
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை துரத்திச் சென்று கை, கால்களில் தெரு நாய் கடித்துள்ளது. சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- Aug 28, 2025 07:56 IST
தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு விருது
சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாகப் பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
- Aug 28, 2025 07:50 IST
வேளாங்கண்ணி கடலில் நாளை முதல் குளிக்கத் தடை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்படுதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
- Aug 28, 2025 07:49 IST
சத்தீஸ்கர்: மழை வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூரில் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்பபந்தா என்ற பகுதியில் காரில் பயணித்த 4 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
- Aug 28, 2025 07:46 IST
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு
மும்பையில் விஜய் நகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 8 முதல் 10 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- Aug 28, 2025 07:32 IST
"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால்.."
ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அறிவித்துள்ளார். இந்தியா மீதான 50% வரி விதிப்பு நேற்று (ஆக.27) முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- Aug 28, 2025 07:29 IST
10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- Aug 28, 2025 07:21 IST
மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை
பிரதமர் மோடியை இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், குவாண்டம் தொழில்நுட்பம், 6ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
- Aug 28, 2025 07:20 IST
50% வரி -பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. கடிதம்
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கடிதம் எழுகியுள்ளார். அதில், திருப்பூர் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ.15,000 கோடி வருவாய் இழப்பு, 2 லட்சம் வேலையிழப்பு ஏற்படும். பின்னலாடை தொழிலை பாதுகாக்க நிதி தொகுப்பு அறிவித்து, அனைத்து மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியை நிறுத்திவைக்க வேண்டும். பருத்திக்கு அறிவித்த தற்காலிக இறக்குமதி வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும், ஏற்றுமதியாளர்களுக்கு இலவச மின்சாரம், போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- Aug 28, 2025 07:18 IST
14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம்- பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உள்பட 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கடந்த 25 மற்றும் 26-ந்தேதிகளில் கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
- Aug 28, 2025 07:17 IST
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் நீட்டிப்பு
ரூ.7,332 கோடி செலவில் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 50 லட்சம் புதிய வியாபாரிகளை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்படும் இந்த திட்டத்தில் கடன் உச்சவரம்பும் உயர்த்தப்படுகிறது.
- Aug 28, 2025 07:16 IST
ஜம்முவில் வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள்
ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம் பாதித்த இடங்களில் இரவு பகலாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கனமழை நிலச்சரிவால் 41 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.