/indian-express-tamil/media/media_files/2025/05/23/DRx5xlw7mPbLyWGqMsLH.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.90 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.49 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
May 23, 2025 23:49 IST
கனமழை எதிரொலி - விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்
சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமானங்கள் வானில் வட்டமிட்டபடி இருந்தன. அதன்படி, காற்றின் வேகம் மற்றும் மழையின் அளவைப் பொறுத்து விமானங்கள் தரையிறக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
May 23, 2025 21:45 IST
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதன்படி, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி மற்றும் பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
-
May 23, 2025 20:57 IST
வணிக வளாகத்தில் ஒருவர் தற்கொலை
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இந்திரஜித் சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 23, 2025 20:11 IST
கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின்
டெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே 23) ஆய்வு செய்தார்.
-
May 23, 2025 19:43 IST
நாளை மாலை மோடியை சந்திக்கும் ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாளை (மே 23) பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதன்படி, நாளை மாலை சுமார் 4:10 மணிக்கு மோடியை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 23, 2025 19:33 IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புயல், மழையால் 56 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கனமழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஐந்து பேர் உயிரிழந்தனர். மீரட், கவுதம் புத்த நகர் மற்றும் புலந்த்ஷஹர் ஆகியவற்றிலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரங்கள் வேரோடும், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து, வீடுகள் இடிந்து விழுந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன. மின்சார விநியோகமும், ரயில் சேவைகளும் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் வழங்கப்பட உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் புயல் தொடரும் என்று எச்சரித்துள்ளது. இயற்கை பேரிடரால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
-
May 23, 2025 19:32 IST
மைசூர் "ஸ்ரீ" - புதிய பெயரையும் சூட்டிய ராஜஸ்தான் பேக்கரி
பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ராஜஸ்தானில் உள்ள ஒரு பேக்கரியில் "மைசூர் பாக்" உள்ள "பாக்"
என்ற சொல்லை அகற்றியுள்ளது. மைசூர் "ஸ்ரீ" என்ற புதிய பெயரையும் சூட்டியுள்ளது. -
May 23, 2025 19:04 IST
ஓய்வு குறித்த வதந்தி - கமல்ஹாசன் விளக்கம்
சினிமாவை விட்டு விலகும் எண்ணம் தற்போது இல்லை. சமூக பிரச்சனைகளை சினிமா மூலம் சுட்டிக்காட்டும் பொறுப்பில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
-
May 23, 2025 19:02 IST
குடும்பத்தினர் போல - சோனியா, ராகுல் உடனான சந்திப்பு குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி!
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சோனியா காந்தி மற்றும் அன்பு சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்தது. ஒவ்வொரு முறை இவர்களை சந்திக்கும் போது ஓர் அரவணைப்பு கிடைக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
May 23, 2025 18:37 IST
கல்வி நிதி ஒதுக்காதது ஏன் - மத்திய அரசு விளக்கம்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கக் கோரி மனுவில், "தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், 'புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை' மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது என்று தமிழ்நாடு அரசு தரப்பு வாதிடப்பட்டது.
-
May 23, 2025 18:33 IST
பாலக்காடு ரயில் நிலையத்தில் ரூ.48 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
கேரளா மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் ரூ.48 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல், துணிப் பையில் தனி அறை அமைத்து கடத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதாபிசாபு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை. பாலக்காடு ரயில் நிலையம் வந்த ரயில் பயணியிடம் சோதனையிட்ட போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
-
May 23, 2025 18:03 IST
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரி - அதிபர் டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். “இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்கப்பட்டோ அமெரிக்காவுக்கு ஐபோன்கள் ஏற்றுமதி
செய்யப்படுவதை விரும்பவில்லை. அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்குமாறு ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கிடம் ஏற்கனவே கூறினேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். -
May 23, 2025 18:02 IST
கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்திய குழு ஆலோசனை
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவுடன் கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்திய குழு ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து விவரிக்க இந்தக் குழு ரஷ்யா சென்றுள்ளது.
-
May 23, 2025 17:37 IST
2 நாட்களில் தென்மேற்கு பருவமழை - செந்தாமரை கண்ணன் தகவல்
"கேரளாவில் இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தகவல் தெரிவித்திட்டுள்ளார்.
-
May 23, 2025 17:34 IST
சென்னை மெரினா ஏர் ஷோ மரணம் - தமிழக டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்
சென்னை மெரினாவில் நடந்த ஏர் ஷோ விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.அனுப்பியுள்ளது
-
May 23, 2025 16:52 IST
பாண்லே நிறுவனம் நஷ்டம் ஏன்?-புதுச்சேரி முதல்வர் விளக்கம்
“புதுச்சேரியில் பாண்லே நிறுவனத்தை நஷ்டத்துக்கு கொண்டுவந்தது ஊழியர்கள்தான்; பாண்லேவில் பாதிபேர் வேலை செய்கின்றனர்; மீதி பேர் எங்கு எனத் தெரியவில்லை 7,000 லிட்டர் பால் கேட்டால் 2,000 லிட்டர்தான் தருகிறோம்; லாபம் இருந்தால்தான் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கிடைக்கும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
-
May 23, 2025 16:46 IST
19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழிதடத்தில் 24 மற்றும் 26ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து. மதியம் 1.20 முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரத்திற்கு 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
May 23, 2025 16:35 IST
ரஷ்யா சென்றுள்ள இந்திய குழு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைக்க ரஷ்யா சென்றுள்ளது இந்திய குழு. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைக்க ரஷ்யா சென்றுள்ள திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய குழு சென்றுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பு கவுன்சிலில் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
-
May 23, 2025 15:48 IST
"கொரோனா பரவலால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடு ஏதும் இல்லை" - சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையல்ல; மக்கள் நம்ப வேண்டாம்; கொரோனா தொற்றுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-
May 23, 2025 15:39 IST
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தார்மீகக் கடமை: கார்கே
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் தார்மீகக் கடமை; பொதுநோக்குடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு தரும் ஒபிசி, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற வேண்டும்; அதற்காக அரசமைப்பின் 15 (5) பிரிவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
-
May 23, 2025 15:35 IST
லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்ற சென்னை நபர்!
எமிரேட்ஸ் லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்றார் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலன்! தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக சிலாகிக்கிறார். ‘முதலில் என் கண்ணையே இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது' எனக் கூறுகிறார்.
-
May 23, 2025 15:16 IST
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒருமாதம் சிறை அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி லலிதாம்பாள், மற்றும் விஸ்வநாதன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. "குறித்த காலத்தில் உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு. பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை 3 வாரங்களில் வழங்காவிட்டால் மேலும் 10 நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 23, 2025 15:12 IST
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
-
May 23, 2025 14:49 IST
மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது
-
May 23, 2025 14:31 IST
இந்திய தூதருடன் கனிமொழி ஆலோசனை
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க ரஷ்யா சென்றுள்ள கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யாவுக்கான இந்திய வெளியுறவுத்துறை குழு சந்திப்பு நடத்தியது. இந்தியாவுக்கு ஆதரவு திரட்டுவதற்கு முன்பாக இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
-
May 23, 2025 14:14 IST
“இனி அறிக்கை விடக்கூடாது” - ஆர்த்தி, ரவி மோகனுக்கு உத்தரவு!
தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து ரவி மோகன் - ஆர்த்தி இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது. இதுவரை வெளியிட்ட அறிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குக. ஆர்த்தி மற்றும் அவரது தாய் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்கக்கோரிய ரவி மோகனின் மனு மீதான் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவானிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
-
May 23, 2025 13:39 IST
"ED சோதனை: மோடியை சந்திக்கிறார் முதல்வர்" - சீமான்
அமலாக்கத்துறை சோதனை வந்தால்தால்தான் மோடியை சந்திக்க ஸ்டாலின் செல்கிறார். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் இந்தாண்டு செல்வது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
May 23, 2025 13:14 IST
இ சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாணாக்கருக்கு, ஒரு வாரக் காலத்திற்குள் சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றிதழ் கேட்டு இ சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
May 23, 2025 13:12 IST
2026இல் திமுக ஆட்சியிழப்பது உறுதி: ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் 2026 தேர்தலில் திமுக ஆட்சி இழப்பது உறுதியானது. 2011 தேர்தலில் தொடர் மின்வெட்டு பிரச்சனையால் திமுக ஆட்சியை இழந்தது போன்று இப்போதும் நடக்கும். மக்கள் அதிமுக பக்கம் உள்ளனர். மீண்டும் ஆட்சியை பிடித்து இபிஎஸ் முதல்வராவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
-
May 23, 2025 12:56 IST
கீழடி ஆய்வறிக்கையில் கூடுதல் ஆதாரங்கள் கேட்கும் தொல்லியல் துறை - சு.வெங்கடேசன் கண்டனம்
கீழடி ஆய்வறிக்கையில் கூடுதல் ஆதாரங்களை இந்திய தொல்லியல் துறை கோரியுள்ள நிலையில், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்
-
May 23, 2025 12:38 IST
வான் பரப்பை பயன்படுத்த அனுமதி மறுத்த பாகிஸ்தான்
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடுமையான சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையால் கடுமையாக குலுங்கியது. இதனையடுத்து பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில், லாகூர் வான் நிலையம் கோரிக்கையை ஏற்க மறுத்தது. பயணிகள் அச்சத்தில் உறைந்த நிலையில் பைலட்டுகளின் சாமர்த்தியத்தால் ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் அனுமதி மறுத்ததால் இந்திய விமானம் தன்னுடைய வழக்கமான பாதையிலேயே பயணித்துள்ளது
-
May 23, 2025 12:04 IST
திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்ததால், திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
-
May 23, 2025 11:24 IST
காத்திருப்போர் பட்டியலில் இருந்த 5 இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு
சென்னை மாநகர காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 5 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
-
May 23, 2025 11:00 IST
நகைக் கடன் பெற ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகள்; திரும்பப் பெற இ.பி.எஸ் வலியுறுத்தல்
நகைக் கடன் பெற ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
-
May 23, 2025 09:57 IST
மே 26 ஆம் தேதி விசாரணை
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்து மனு; வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் மனுவை மே 26 ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
-
May 23, 2025 09:47 IST
டெல்லி புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரை வலியுறுத்த உள்ளார்.
-
May 23, 2025 08:51 IST
மாஸ்கோ சென்றடைந்த கனிமொழி
Credit: Sun News
#Watch | ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு.
— Sun News (@sunnewstamil) May 23, 2025
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விவரிக்க இந்தக் குழு பயணிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் இக்குழு பயணம்… pic.twitter.com/GQrzzy8SsI -
May 23, 2025 08:51 IST
வலுவடைந்தது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தகவல்
-
May 23, 2025 08:40 IST
முக கவசம் கட்டாயமா? சுகாதாரத்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல்
-
May 23, 2025 08:39 IST
ஐபிஎல் இன்றைய போட்டி
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் RCB Vs SRH அணிகள் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற பெங்களூரு முனைப்பு
-
May 23, 2025 08:09 IST
ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
May 23, 2025 08:05 IST
கிருஷ்ணா ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா ஆற்றில் நீர் வரத்து நேற்று விநாடிக்கு 130 கன அடியாக இருந்த நிலையில் இன்று 345 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தமிழ்நாட்டுக்கு திறந்துள்ள தண்ணீரின் அளவு விநாடிக்கு 2500 கன அடியாக தொடர்கிறது.
-
May 23, 2025 07:34 IST
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதிகளை விடுவிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்த திட்டம்
-
May 23, 2025 07:34 IST
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் வரும் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.