/indian-express-tamil/media/media_files/2025/06/15/ZxNLYZW2FcIn2D58DCYH.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 30, 2025 21:25 IST
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தொடர்வண்டி கட்டண உயர்வை ரயில்வே வாரியம் திரும்பப் பெற வேண்டும்!
இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jun 30, 2025 21:19 IST
பயில்வான் ரங்கநாதனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை
நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்புவதை பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Jun 30, 2025 20:56 IST
மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க தீர்மானம்
சென்னையில், முதற்கட்டமாக 155 மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர, விரைவில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் உட்பட 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
Jun 30, 2025 20:34 IST
ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வுக்கு ரூ. 25000 பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் ஜூலை 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூலை 2-ஆம் தேதியுடன் இதற்கான அவகாசம் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
-
Jun 30, 2025 19:47 IST
தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க தொடர்ந்து நீடிக்கும் - வைகோ திட்டவட்டம்
தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க தொடர்ந்து நீடிக்கும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, "கருணாநிதி மரணப்படுக்கையில் இருக்கும் போது, ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். அதனை கடைசிவரை காப்பேன். தி.மு.க-விற்கு வெற்றியை தேடித்தர ம.தி.மு.க பாடுபடும். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்" என்று அவர் கூறினார்.
-
Jun 30, 2025 19:14 IST
லாக்கப் மரணங்களில் யார் கடமை தவறினாலும், அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் - ஸ்டாலின் எச்சரிக்கை
லாக்கப் மரணங்களில் யார் கடமை தவறினாலும், அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்!
மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
'போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்' என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 30, 2025 18:59 IST
ரயில் மோதி பெண் பலத்த காயம்
கேரளாவைச் சேர்ந்த ராணி என்ற பெண் மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவு ரயில் மோதியதில் ராணி படுகாயம் அடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jun 30, 2025 18:50 IST
எஸ்.ஜே.சூர்யா உருக்கம்
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் அன்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "கில்லர் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அன்பும் ஆருயிருமான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு. 'கில்லர்' திரைப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்!" என்று பதிவிட்டுள்ளார்.
-
Jun 30, 2025 18:33 IST
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பாதுகாப்பாக நிறுத்தம்
புதுச்சேரியில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையிலேயே கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பேர் விமானத்தினுள் இருந்தனர்.
-
Jun 30, 2025 18:28 IST
நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி புறநகர் ரயில் கட்டணம் மற்றும் சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் மாற்றமின்றி அதே கட்டணத்தில் நீடிக்கிறது. தொலைதூர ரயில்களில் சாதாரண வகுப்புகளில் 500 கி.மீ வரை கட்டணம் உயர்வு இல்லை. 500 முதல் 1500 கி.மீ. வரையிலான தூரத்திற்கு ரூ.5 -ம், 1501 முதல் 2500 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ.10-ம், 2501 முதல் 3000 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ.15-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Jun 30, 2025 18:14 IST
ராஜஸ்தான்: போதைப் பொருள் சோதனையில் 60 கிலோ ஹெராயின் பறிமுதல்
ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் நடத்திய சோதனையில் 60 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த தீவிர விசாரணையில் ஒரு பெண் உட்பட 9 பேர் கைது செய்தனர். சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jun 30, 2025 18:05 IST
சென்னையின் முதல் கேபிள் பாலம் - கட்டுமானம் விரைவில் தொடக்கம்
சென்னை நேப்பியர் பாலம் அருகே சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்த்தப்பட்ட வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின் முதல் கேபிள் பாலத்தின் கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேடு மற்றும் மதுரவாயல் ஆகிய இடங்களில் கூடுதலாக இரண்டு கேபிள் பாலங்கள் கட்டப்படவுள்ளது
-
Jun 30, 2025 17:53 IST
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை தொடங்கிவைக்கும் ஸ்டாலின் - டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
தி.மு.க உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக அரசின் 4 ஆண்டுகால நலத்திட்டங்களை விளக்குவதோடு, ஒன்றிய அரசு தமிழர்களை வஞ்சிப்பதை தமிழக மக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
-
Jun 30, 2025 17:17 IST
என் வாழ்வை மாற்றியமைத்த 'நான் முதல்வன் திட்டம்'
'நான் முதல்வன்' திட்டம் மூலம் கனரக வாகனங்களை இயக்குவதற்கு பயிற்சி பெற்று ஓட்டுநர்களாக தேர்வான பெண்கள் நெகிழ்ச்சியாக பேசியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கிவைக்கப்பட்ட 120 மின்சார பேருந்துகளில், 3 பேருந்துகளை ஓட்ட பெண்கள் தேர்வாகியுள்ளனர்.
-
Jun 30, 2025 16:57 IST
வெடிகுண்டு மிரட்டல்-தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றம்
சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் - மொத்த வழக்குகளும் தீவிரவாத தடுப்புப் பிரிவு(சென்னை)-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரி உள்பட பொது இடங்களுக்கு கடந்த ஓராண்டாக 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள். சென்னையில் பதியப்பட்ட அனைத்து வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளும் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. ஒரு தலை காதல்-நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மாநில சைபர் கிரைம் போலீசார் அகமதாபாத் போலீசாரிடம் கைது செய்யப்பட்ட பெண் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர்.
-
Jun 30, 2025 16:56 IST
மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக்கும் அரசின் திட்டம்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக்கும் அரசின் திட்டம் தொடக்கம். நாளை முதல் இதற்கான வேட்புமனு விநியோகம் செய்யப்படும். ஜூலை 17ம் தேதி வேட்புமனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும்.
-
Jun 30, 2025 16:51 IST
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள்
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தது.
-
Jun 30, 2025 16:08 IST
விரைவில் தடுப்பூசி அறிமுகம்
தமிழக அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்புக்காக, ஹெச்பி.வி., வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, விரைவில் தொடங்கப்பட்டுள்ளது.
-
Jun 30, 2025 15:33 IST
பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு முஞாமீன் உச்சநீதிமன்றம் வழங்கியது.
-
Jun 30, 2025 15:03 IST
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு அழைத்துவர ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு ஈரானில் இருக்கும் மீனவர்கள் அங்கிருக்கும் தூதரகத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
-
Jun 30, 2025 15:03 IST
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி பொருந்த ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
Jun 30, 2025 15:03 IST
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-ஃபெப்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க ஐகோர்ட் முடிவு
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-ஃபெப்சி பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் துவங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 30, 2025 14:35 IST
ரயில் நிலையத்தில் நிற்காமல் 200 அடி தள்ளி நின்ற மின்சார ரயில்
புதுச்சேரியில் இருந்து எழும்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் 200 அடி தள்ளி நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் கூச்சல் எழுப்பினர். இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் 200 அடி தள்ளி ரயிலை நிறுத்தினார். ரயில் நிற்காமல் சென்றது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்திவருகிறது.
-
Jun 30, 2025 14:34 IST
சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு கேஸ் விநியோகம் செய்ய மாநகராட்சி அனுமதி
சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு கேஸ் விநியோகம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 8 இடங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள TIDCOவுக்கு அனுமதி. 27 இடங்களில் திட்டத்தை செயல்படுத்த TIDCO அனுமதி கோரிய நிலையில் 8 இடங்களுக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது
-
Jun 30, 2025 14:10 IST
சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் தர ஐகோர்ட் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
-
Jun 30, 2025 13:59 IST
‘தி.மு.க-வை விட வி.சி.க-வுக்கு அதிக வாக்கு வங்கி இருக்கிறது’ - நத்தம் விஸ்வநாதன்
தி.மு.க-வுக்கு 10 சதவீத வாக்குகள் கூட இல்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
நத்தம் விஸ்வநாதன்: “தி.மு.க-வை விட வி.சி.க-வுக்கு அதிக வாக்கு வங்கி இருக்கிறது. திருமாவளவனின் உண்மையான சக்தி அவருக்கே தெரியவில்லை” என்று கூறினார்.
-
Jun 30, 2025 13:49 IST
புதுச்சேரி ரயில் 200 அடி தள்ளி நின்றதால் பரபரப்பு - ரயில்வே நிர்வாகம் விசாரணை
புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிச் சென்ற புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை திருசூலம் ரயில் நிலையத்தில் வழக்கமான நிறுத்தத்திற்கு அப்பால் சுமார் 200 அடி தள்ளி நின்றதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கவும், ஏறவும் எதிர்பார்த்திருந்த நிலையில், ரயில் நடைமேடையை தாண்டி சுமார் 200 அடி தொலைவில் நின்றது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக, ரயிலின் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு ரயிலை மீண்டும் சரியான இடத்திற்கு நகர்த்தி நிறுத்தினார். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரயில் ஏன் வழக்கமான நிறுத்தத்தைத் தாண்டி 200 அடி தள்ளி நின்றது என்பது குறித்தும், இதில் ஓட்டுநரின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Jun 30, 2025 13:34 IST
அஜித் குமார் ரேஸிங் அணி முதலிடம்
"க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப்" போட்டியில் "Pro-Am" பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்துள்ளது. அஜித் குமார் ரேஸிங் அணி வீரர்கள் ஃபேபியன், மேத்தியூ ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அஜித் குமார் ரேஸிங் அணி கடுமையான சவால்களையும் மீறி திறமையாலும் மனோபலத்தாலும் வெற்றிக் கனியை எட்டியது.
-
Jun 30, 2025 12:57 IST
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் மரணம்
தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தார். பலர் தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
-
Jun 30, 2025 12:54 IST
சிம்பு நடிப்பது வடசென்னை -2 இல்லை - இயக்குனர் வெற்றிமாறன்
தனுஷ் நடிப்பதுதான் 'வடசென்னை 2' ஆக இருக்கும். சிம்பு நடிப்பது வடசென்னை 2 இல்லை, ஆனால் நான் இப்போது சிம்பு வைத்து இயக்கும் படம் "வடசென்னை"யில் நடக்கக்கூடிய ஒரு கதை. ஆனால் இது வேறு மாதிரியான படம் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்
-
Jun 30, 2025 12:52 IST
பங்குச்சந்தை மோசடி - இன்ஸ்டா பிரபல தம்பதி மீது வழக்கு
இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதியான விஷ்ணு - அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
-
Jun 30, 2025 11:59 IST
அர்ச்சகர்கள் நடன வீடியோ: தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகர்கள் வீடியோ விவகாரம், வீடியோவில் வரும் கோமதி விநாயகம் தக்கார் தீர்மானத்தின்படி நியமனம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் தேர்வானவர் அல்ல என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
-
Jun 30, 2025 11:55 IST
பேருந்தில் ஏறி சிறப்பம்சங்களை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
Video: Sun News
#Watch | சென்னை வியாசர்பாடியில் மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின், பேருந்தில் ஏறி சிறப்பம்சங்களை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
— Sun News (@sunnewstamil) June 30, 2025
முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.#SunNews | #ElectricBus | @mkstalin pic.twitter.com/U5yRBQGMse -
Jun 30, 2025 11:40 IST
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது 'வாட்டர் பெல்' திட்டம்
காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என 'பெல்' ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும்.
-
Jun 30, 2025 11:40 IST
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் பெற வேண்டாம்
பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் பெற வேண்டாம். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு.
-
Jun 30, 2025 11:23 IST
பாஜக - திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்
ஆ.ராசா எம்.பி.,-க்கு கண்டனம் தெரிவித்து பேச வந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
-
Jun 30, 2025 10:58 IST
அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என்கிறார்: திருமாவளவன்
அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என பேசி வருகிறார், கூட்டணி ஆட்சி குறித்து ஈபிஎஸ் கூறியுள்ள கருத்து பாஜகவுக்கானது. பாஜக - அதிமுக கூட்டணியில் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்
-
Jun 30, 2025 10:34 IST
தேர்தல் ஆணையம் செல்லும் அன்புமணி ராமதாஸ்
பாமகவில் ராமதாஸ் உடன் மோதல் முற்றியுள்ள நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள அன்புமணி ராமதாஸ். டெல்லி சென்றுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செல்லவுள்ளதாக தகவல்.
பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தை நாடுகிறார்.
-
Jun 30, 2025 10:24 IST
எண்ணெய் கப்பலில் தீ: மீட்பு பணியில் கடற்படை
குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர், 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் மீட்பு
-
Jun 30, 2025 09:52 IST
"விமான விபத்து -அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும்"
அகமதாபாத் விமான விபத்துக்கு பின்னால் சதி வேலை இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 274 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது.
-
Jun 30, 2025 09:24 IST
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலி
அமெரிக்காவின் இடாஹோ மாகாணம் கொயூர் டி அலீன் நகரில் உள்ள வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று இரவு 11 மணியளவில் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, தீயணைப்பு வீரர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 30, 2025 09:06 IST
ஜெகன்மூர்த்தி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் கோட்டீஸ்வர் சிங் அமர்வில் ஜெகன்மூர்த்தி மனு விசாரணைக்கு வருகிறது
-
Jun 30, 2025 08:54 IST
திருப்பதி பக்தர்கள் டெம்போ மீது லாரி மோதி 3 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில பக்தர்கள் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை அருகிலுள்ள டோல்கேட் மற்றும் சுற்றுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Jun 30, 2025 08:52 IST
சென்னை: பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை
சென்னை கல்பாக்கம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகன்ராஜ் (50) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பேட்டையில் உள்ள வீட்டுக்கு பைக்கில் சென்றபோது காரில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டனர். மோகன்ராஜை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் 2 தனிப்படைகளை அமைத்துள்ளது.
-
Jun 30, 2025 08:46 IST
ரயில் நிலையங்களில் அட்ராசிட்டி - 3 ஆண்டுகளில் 127 பேர் கைது
சென்னை நகர், புறநகர்ப் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக மாணவர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 127 பேர் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
-
Jun 30, 2025 08:43 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,000 கன அடியாக அதிகரிப்பு
காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியாக 120 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 57,732 கன அடியில் இருந்து 58,000 அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து மொத்தமாக 58,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 26,000 கனடியும், 16 கண் மதகுகள் வழியாக 32,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது.
-
Jun 30, 2025 08:41 IST
புதுவை பாஜ தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு: இன்று பதவியேற்பு
புதுச்சேரி பாஜ மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி இன்று அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இன்று மதியம் 12 மணிக்கு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் தேசிய பொது செயலாளர் தருண்சோக் முன்னிலையில் வி.பி. ராமலிங்கம் தலைவர் பதவியை ஏற்கவுள்ளார். 2021ம் ஆண்டு பாஜவில் இணைந்த வி.பி ராமலிங்கத்துக்கு, நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது.
-
Jun 30, 2025 08:40 IST
ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்
ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தோர் மட்டுமே நாளை முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கவுன்டர்கள் மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர ரயில்வே புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி கணக்குகள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
-
Jun 30, 2025 08:02 IST
10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 30, 2025 07:46 IST
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரலில் தொடக்கம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி முதலில் வீட்டுப்பட்டியல் தயாரிப்பும், அடுத்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஆகும். இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி குறித்த தகவல் சேகரிப்பு அடங்கிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக இந்திய மக்கள் தொகை பதிவாளர் ஜெனரல் மிரித் யுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவல்களை அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.