/indian-express-tamil/media/media_files/sMX9P083OnzpQCdQ2Uiz.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 06, 2025 13:34 IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு; அமைதி காக்க வலியுறுத்திய நீதிபதி கவாய்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் காலணியை வீசிய சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை நீதிபதியைப் பார்த்து, 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று கூச்சலிட்ட அந்த வழக்கறிஞரை நீதிமன்றப் பாதுகாவலர்கள் உடனடியாக வெளியேற்றினர். இந்த எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகும், தலைமை நீதிபதி கவாய் சற்றும் அசராமல், வழக்கறிஞர்களைப் பார்த்து, "கவனத்தைச் சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது," என்று கூறி, தங்கள் வழக்குகளைத் தொடர்ந்து வாதிடும்படி கேட்டுக்கொண்டார்.
- Oct 06, 2025 13:32 IST
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 6) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
தலைமைச் செயலாளர், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பருவமழை தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதித்தார்.
- Oct 06, 2025 13:06 IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவ் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- Oct 06, 2025 13:03 IST
கஞ்சா வைத்திருந்த வழக்கில் பா.ஜ.க நிர்வாகி வேலூர் இப்ராஹிமின் மகன் கைது
பா.ஜ.க நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமான் (21) கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கஞ்சா பொட்டலங்களுடன் காரில் இருந்தபோது அப்துல் ரகுமான் அவரது கார் ஓட்டுநர் ஆகியோரை திருமங்கலம் ரோந்து போலீசார் கைது செய்தனர்.
- Oct 06, 2025 13:00 IST
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: இன்று மாலை அறிவிப்பு
அக். 20ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்துகிறார். சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை, இடங்கள் தொடர்பாக ஆலோசனை. தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.
- Oct 06, 2025 12:59 IST
‘ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார்’ ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வாதம்
ஜாய் கிரிசில்டாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். ஜாய் கிரிசில்டா என்னை ஏமாற்றிவிட்டார். நான் வைத்திருந்த நம்பிக்கையை ஜாய் கிரிசில்டா தவறாக பயன்படுத்தினார். ஜாய் கிரிடில்டாவின் பேட்டியால் எனது குழந்தைகள் பாதிகப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வாதிடப்பட்டது.
- Oct 06, 2025 12:24 IST
அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று மாலை இ.பி.எஸ் ஆலோசனை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று (அக்டோபர் 6) மாலை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆளும் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் எவ்வாறு எடுத்துச் செல்வது, அதற்கானப் பரப்புரைகளைத் திட்டமிடுவது ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Oct 06, 2025 11:45 IST
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகள் திறப்பு
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ.20 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினர்.
- Oct 06, 2025 11:30 IST
விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் - நீதிபதி செந்தில்குமார்
நீதிமன்ற உத்தரவுகளுக்காக சமூக வலைதளங்களில் செய்யப்படும் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் என ஜாய் கிரிசல்டா தன் மீது அவதூறு பரப்ப தடைக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் கூறியுள்ளார். மேலும் உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுவதாகவும் நீதிபதி செந்தில்குமார் கூறியுள்ளார்
- Oct 06, 2025 11:22 IST
கரூர் துயரம் – பா.ஜ.க எம்.பி.,க்கள் குழு அறிக்கை தாக்கல்
கரூர் த.வெ.க பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்தை ஆய்வு செய்த பா.ஜ.க எம்.பி.,க்கள் குழு பா.ஜ.க தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க எம்.பி ஹேமமாலினி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். கரூர் மாவட்ட நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என பா.ஜ.க குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
- Oct 06, 2025 11:05 IST
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு 26 வாகனங்கள்; கொடியசைத்து தொடங்கி வைத்த ஸ்டாலின்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடி செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து 3 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்களின் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ.5.78 கோடி செலவில் 25 அவசர கால ஊர்திகள், ரூ.4 கோடி செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
- Oct 06, 2025 10:45 IST
த.வெ.க மாவட்டச் செயலாளர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு திட்டம்
த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கில் கைதான கரூர் த.வெ.க மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் புவன்ராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
- Oct 06, 2025 10:29 IST
ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த 'காந்தாரா சாப்டர்-1'
கன்னட நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்திருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 4-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. காந்தாரா சாப்டர் 1 படம் 4-வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.61.5 கோடி வசூலித்துள்ளது. அதில் அதிகபட்சமாக படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.23.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.15.5 கோடியும், தெலுங்கு ரூ.11.25 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.6.5 கோடியும், மலையாள ரூ.4.75 கோடியும் வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளிலும் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுவதால், இப்படம் 4 நாட்களில் 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
- Oct 06, 2025 10:21 IST
அடுத்த வாரம் விஜய் கரூர் பயணம்; நிதியுதவி வழங்க திட்டம்
கரூர் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்ல இருக்கிறார். இதற்காக முறையாக நீதிமன்றத்தில் மனு செய்து, அனுமதி கேட்கப்பட உள்ளது. நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
- Oct 06, 2025 10:05 IST
ஐயா ஐ.சி.யூ.வில் இருப்பதால் பார்க்க முடியவில்லை: அன்புமணி
சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அவரது மகன் அன்புமணி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தனது தந்தை நலமுடன் உள்ளார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; பயப்படும்படி எதுவும் இல்லை. ஐசியூவில் ராமதாஸ் இருப்பதாகவும், அவரை நேரில் சந்திக்கவில்லை. ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். 6 மணி நேரத்துக்கு பிறகு ராமதாஸ் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார். மேலும் 2 நாட்கள் மருத்துவ ஓய்வில் இருக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் 2 நாள் ஓய்வுக்கு பிறகு ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறினார்.
- Oct 06, 2025 10:03 IST
அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு - அரசு பரிசீலனை
கரூரில் சமீபத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசியல் கட்சிகள் இனி பொதுக் கூட்டங்களை நடத்தும்போது, மக்களைச் சுரண்டும் நிகழ்வுகளையும், உயிர் இழப்புகளையும் தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
- Oct 06, 2025 10:01 IST
மா.செயலாளர்களுடன் விஜய் தொலைபேசி மூலம் ஆலோசனை
கரூர் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட த.வெ.க. மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் தொலைபேசியில் மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கருத்துகளை அவர்களிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 06, 2025 09:56 IST
பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிவிகிறது. இன்று மாலை செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்கிறார்கள். அப்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.
- Oct 06, 2025 09:42 IST
டார்ஜிலிங் நிலச்சரிவு - 20 பேர் உயிரிழப்பு; மீட்பு பணி தீவிரம்
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். சர்சாலி, ஜஸ்பிர்கான், மிரிக் பஸ்தி, தர் காவன், நகர்காட்டா பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 30 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. மேலும் டார்ஜிலிங்கில் சிக்கித் தவிக்கும் 1000-க்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- Oct 06, 2025 09:40 IST
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,060-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
- Oct 06, 2025 09:20 IST
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி) அதிகாலை 2:47 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.18 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
- Oct 06, 2025 09:08 IST
புரட்டாசி பவுர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இன்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகளைத் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Oct 06, 2025 09:04 IST
வெளிநாட்டுப் பயணிகளுக்காக புதிய இ-அரைவல் கார்டு
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு செயல்முறைகளை எளிதாகவும், வேகமாகவும் முடிக்க இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. பயணத்திற்கு முன்போ அல்லது வருகையின் போதோ ஆன்லைனில் எளிதாக இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
- Oct 06, 2025 08:52 IST
ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி ராமதாஸ்
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் அன்புமணி. காலை ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இருப்பினும் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- Oct 06, 2025 07:59 IST
ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி
ராஜஸ்தான் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 6 நோயாளிகள் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சேமிப்பு அறையில் (storage area) தீ விபத்து ஏற்பட்ட போது, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Neuro ICU) 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
- Oct 06, 2025 07:56 IST
மாரத்தானில் ஓடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ் (24) உயிரிழந்தார். மாரத்தானில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர், நேற்று 21 சுற்றுகள் கொண்ட போட்டியில் 18 சுற்றுகளை நிறைவு செய்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள பலரும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
- Oct 06, 2025 07:55 IST
வண்டலூர் பூங்காவில் காணாமல்போன சிங்கம் கண்டுபிடிப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. லயன் சபாரி பகுதியில் இருந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Oct 06, 2025 07:54 IST
சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலை, பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைகின்றன.
- Oct 06, 2025 07:53 IST
மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு பணி நிறைவு; நாளை திறப்பு
சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.2.50 கோடி மதிப்பில் செய்யப்பட்டன. திங்கட்கிழமை தவிர்த்து, மற்ற நாட்கள் காலை 5.30 - இரவு 7.30 வரை திறந்து இருக்கும். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Oct 06, 2025 07:39 IST
பாக்., வீழ்த்திய இந்தியா; தேசம் பெருமை கொள்கிறது: அமித்ஷா
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
A perfect strike.
— Amit Shah (@AmitShah) October 5, 2025
Dominating display of India's cricketing might by our Women's Cricket team in today's match in the ICC Women's World Cup.
Nation is proud of our team. Best wishes for your upcoming matches.#CWC25pic.twitter.com/HRZP9GxqTvஇது ஒரு கச்சிதமான வெற்றி, ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையில் நேற்று நடந்த போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களின் கிரிக்கெட் வலிமையை ஆதிக்கம் செலுத்தும் வகையில் வெளிப்படுத்தியது. வரவிருக்கும் உங்க அனைத்து போட்டிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று அமித்ஷா குறிப்பிட்டு உள்ளார்.
- Oct 06, 2025 07:31 IST
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணிஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 06, 2025 07:29 IST
பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இருப்பினும் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- Oct 06, 2025 07:28 IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 06, 2025 07:27 IST
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை
காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமாதானம் குறித்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எகிப்தில் இன்று நடக்க உள்ளது. அதிபர் டிரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில், ஓரிரு அம்சங்களுக்கு மட்டுமே ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
- Oct 06, 2025 07:26 IST
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் முட்செடிகள், புதர்செடிகளை அகற்றினர். மேலும் பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.