/indian-express-tamil/media/media_files/4eb6l6IMBC3K4OFupdeK.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய மழை, வானிலை நிலவரங்களை ஆங்கிலத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: தீபாவளி பண்டிகையான நேற்றும், நேற்று முன்தினமும் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.இது தலைநகரின் காற்று மாசுபாட்டு மீண்டும் அதிகரித்தது. தலைநகரில் உள்ள 38 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 31-ல் காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியிருந்தது கண்டறியப்பட்டது.காலையில் 339 ஆக இருந்த மாசுபாடு அளவு (ஏ.கியூ.ஐ), நண்பகலில் 334 ஆகவும் இருந்தது. அதேநேரம் ஆனந்த் விகார்(402), வாசிர்பூர்(423), அசோக் விகார்(414) ஆகிய 3 மையங்களில் மிகவும் மோசமான அளவை எட்டி இருந்தது. இது வரும் நாட்களில் மேலும் மோசமடையக்கூடும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- Oct 21, 2025 15:54 IST
வெள்ள அபாய எச்சரிக்கை
இன்னும் சற்று நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்படும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 21, 2025 15:53 IST
தன்னார்வலர்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்: சென்னை போக்குவரத்துப்பிரிவு
சென்னை போக்குவரத்து காவல்துறையில், மழைகாலத்தில் தன்னார்வலர்களாக இணைய விருப்பம் உள்ளவர்கள் Traffic volunteers GCTP- monsoon 2025 என்ற வாட்ஸ்அப் குழுவில் இணையலாம் என சென்னை போக்குவரத்துப்பிரிவு இணை ஆணையர் விஜயகுமார் அறிவிப்பு
- Oct 21, 2025 15:51 IST
ஸ்டாலின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி அரசு நிகழ்ச்சி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைந்த பிறகு நிகழ்ச்சி நடத்தப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
- Oct 21, 2025 15:51 IST
நீரில் அடித்து செல்லப்பட்ட தரை மட்ட பாலம்.
கோபிச்செட்டிப்பாளையத்தில், கனமழையின் காரணமாகத் தரை மட்டப் பாலம் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தச் சேதத்தை அமைச்சர் முத்துசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இந்தப் பாலம் விரைவில் சரிசெய்து தரப்படும் என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
- Oct 21, 2025 15:26 IST
மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,00 கன அடியும்,16 கண் மதகுகள் வழியாக 12,500 கன அடியும், கால்வாய்கள் வழியே 500 கன அடி நீரும் வெளியேற்றம்
- Oct 21, 2025 15:13 IST
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு!
கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 21 அடியை நெருங்கிய நிலையில், முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 4 மணிக்கு உபரி நீராக 100 கன அடி திறக்கப்பட உள்ளது.
- Oct 21, 2025 15:11 IST
பருவமழை: மக்களுக்கான மின்சார வாரிய வழிமுறைகள்
மழைக்காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
நனைந்த கைகளால் மின்சாதனங்களை இயக்கக் கூடாது, மின் கம்பங்கள் அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்லக் கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்தடை புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
- Oct 21, 2025 15:06 IST
சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்
சென்னையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- Oct 21, 2025 15:06 IST
வடகிழக்கு பருவமழை: நாளை ஆலோசனைக் கூட்டம்
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட ச் செயலாளர்களுக்கு நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
- Oct 21, 2025 15:05 IST
ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஆலோசனை
கனமழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்களைத் தங்க வைக்க முகாம்களைத் தயார் நிலையில் வைக்கவும், உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழை குறித்து ஆய்வு செய்த முதல்வர், "நெல் கொள்முதல் ஈரப்பதத்தின் அளவை 17%லிருந்து 22% ஆக தளர்த்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
- Oct 21, 2025 14:42 IST
4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (அக். 22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரிக்கும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 21, 2025 14:41 IST
திருச்சியில் குவிந்த குப்பை
திருச்சி: தீபாவளியால் திருச்சி மாநகராட்சி பகுதியில் வழக்கத்தைவிட கூடுதலாக 120 டன் குப்பை குவிந்தது. கடைவீதிகளில் அதிகம் குவிந்த இந்தக் குப்பையை, சாரல் மழையிலும் 2050 தூய்மைப் பணியாளர்கள் இணைந்து முழுவீச்சில் அகற்றி வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோட்டத்தில் மட்டும் கூடுதலாக 20 டன் குப்பை சேர்ந்தது
- Oct 21, 2025 14:39 IST
ரிஷப் பந்த் 'இந்தியா A' கேப்டன்
தென்னாப்பிரிக்கா A அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா A அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக 3 மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், தற்போது உடற்தகுதி பெற்று மீண்டும் விளையாடத் தொடங்கவுள்ளார்.
- Oct 21, 2025 14:18 IST
போர்க்கால அடிப்படையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் - கே.பழனிசாமி
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரிக் கடைமடை மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 'போர்க்கால அடிப்படையில்' மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
- Oct 21, 2025 14:16 IST
திருப்பதியில் கனமழை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் திருப்பதி மலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
- Oct 21, 2025 13:54 IST
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கனமழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்களைத் தங்க வைக்க முகாம்களைத் தயார் நிலையில் வைக்கவும், உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
- Oct 21, 2025 13:53 IST
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 24 அடியில் நீர்மட்டம் 20.32 அடியாக உயர்ந்துள்ளது.
- Oct 21, 2025 13:52 IST
ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்
கனமழை காரணமாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்
- Oct 21, 2025 13:49 IST
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (அக்.21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
- Oct 21, 2025 13:48 IST
சென்னையில் 4 மணி வரை கன மழைக்கு வாய்ப்பு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
- Oct 21, 2025 13:11 IST
மங்களம் அருவியில் வெள்ளப்பெருக்கு!
திருச்சியில் பெய்த கனமழை காரணமாகப் பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
- Oct 21, 2025 13:05 IST
திருச்செந்தூர் கோவில் வழக்கு: நீதிபதியின் கேள்வி
விஐபிகளுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா?" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டு, கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விஐபி தரிசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
- Oct 21, 2025 13:00 IST
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள்- 908 பேருக்கு சிகிச்சை
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் ஏற்பட்டு, மொத்தம் 908 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 584 பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மற்ற 324 பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- Oct 21, 2025 12:59 IST
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை (திருநெல்வேலி), தூத்துக்குடி, குமரி (கன்னியாகுமரி) ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் 20.4 செ.மீ வரை மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் (நாகை), தஞ்சாவூர் (தஞ்சை), புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) அதி கனமழைக்கான (Extremely Heavy Rainfall) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது!
- Oct 21, 2025 12:57 IST
3 மாவட்டங்களில் இரு நாட்கள் ரெட் அலர்ட்!
கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) மற்றும் நாளை (அக்டோபர் 22) அதி கனமழைக்கான (Extremely Heavy Rainfall) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது!
- Oct 21, 2025 12:31 IST
தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் காவிபடுமா (Kavipuduma - Karaikal, Puducherry, Mayiladuthurai) மாவட்டங்களில் படிப்படியாக பருவமழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வட கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ அளவுக்கு மழை எதிர்பார்க்கலாம்.
வானிலை ஆய்வாளர் சபரிஷன்
- Oct 21, 2025 12:29 IST
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னையில் தற்போது பரவலாக கனமழை வெளுத்து வாங்குகிறது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 21, 2025 12:28 IST
திருக்கோவிலூர் பகுதிகளில் தொடரும் மழை
திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரும்பாக்கம், தகடி, கீரனூர், குன்னத்தூர், சுந்தரேசபுரம், உள்ளிட்ட இடங்களில் 4 மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது!
- Oct 21, 2025 12:27 IST
அவசர உதவி எண்கள் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு தொடர்பாக தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
04366 1077 மற்றும் 04366 226623
வாட்ஸ் ஆப்: 9043989192, 9345640279 - Oct 21, 2025 12:04 IST
ஸ்டாலின்ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில்,
மழை அதிகம் பெய்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின்ஆலோசனை நடத்தினார். - Oct 21, 2025 12:03 IST
உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள் - பிரதமர் மோடி
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால், மக்கள் அனைவரும் உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க வேண்டும். மேலும், இந்தியா வளர்ந்த நாடாக உயர, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் , மக்கள் அனைவரும் சமையல் எண்ணெயின் பயன்பாட்டை 10% குறைக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்குத் தீபாவளி செய்தி
- Oct 21, 2025 12:01 IST
கூவம் ஆற்றில் இருந்து நீர்திறப்பு
சென்னையின் கூவம் ஆற்றில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள ஆவடி மற்றும் புதுச்சத்திரம் தடுப்பணைகளில் இருந்து விநாடிக்கு 250 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், கூவம் ஆறு சீரமைக்கப்பட்டு (பருப்பத்திப்பட்டு) உள்ள தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 1,061 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
- Oct 21, 2025 11:57 IST
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
- Oct 21, 2025 11:56 IST
கன மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை பெய்து வருவதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியுள்ளது. எனவே, ஏரியின் பாதுகாப்புக் கருதி, விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், நீர் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் உள்ள கரையோரப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- Oct 21, 2025 11:17 IST
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை
கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 21, 2025 10:39 IST
காவலர் நினைவுச் சின்னத்தில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
காவலர் வீரவணக்க நாளை ஒட்டி காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பணியின்போது மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையையும், காவல்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
- Oct 21, 2025 10:38 IST
வெள்ள சீரமைப்புப் பணிகள் - உதயநிதி நேரில் ஆய்வு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்து மீதமுள்ள பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தென்சென்னை பகுதியில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தி பருவமழை காலத்தில் வெள்ள நீர் எளிதில் கடலில் சென்று சேரும் வகையில், ஒக்கியம் மடுவு கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- Oct 21, 2025 10:36 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 21) காலை 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 7,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
- Oct 21, 2025 10:35 IST
சென்னை: அடுத்த 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மழை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக கடற்கரைக்கு அருகில் இன்று(அக். 21) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும். தமிழக கடற்கரைக்கு மிக அருகில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா, கடலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- Oct 21, 2025 10:33 IST
தமிழகத்தில் பகல் 1 மணிவரை கனமழை தொடரும்
தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகம், கேரளம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகின்றது.
- Oct 21, 2025 10:32 IST
ஃபரூக் அப்துல்லாவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்கள் குரலின் அடையாளமாக ஃபரூக் அப்துல்லா போராடி வருகிறார். நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் திகழ விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
- Oct 21, 2025 10:31 IST
தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
- Oct 21, 2025 10:31 IST
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 319 வழக்குகள் பதிவு
சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 319 வழக்குகள் பதிவாகி உள்ளன.
- Oct 21, 2025 10:09 IST
கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 36 பேர் மீது வழக்கு
புதுச்சேரியில், தீபாவளி அன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக புதுச்சேரியில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 36 பேர் மீதும், காரைக்காலில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- Oct 21, 2025 10:08 IST
வங்கக் கடலில் நிலவும் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி
ஒரே நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- Oct 21, 2025 10:07 IST
சுருளி அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிப்பு
தேனி: வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதித்துள்ளது . நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- Oct 21, 2025 09:46 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிரடியாக உயர்வு
தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.
- Oct 21, 2025 09:40 IST
டெல்லி இனிப்பு கடையில் ‘ஜிலேபி’ செய்த ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இனிப்பு கடை ஒன்றுக்கு சென்றார். அங்கு அவர் ஜிலேபி மற்றும் லட்டு போன்ற இனிப்புகளை தனது கையால் செய்தார். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த ராகுல்காந்தி, மக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடிய தீபாவளி பண்டிகையின் சிறப்பம்சங்களை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும் அவர், ‘தீபாவளியின் உண்மையான இனிப்பு என்பது வெறும் சாப்பாட்டில் மட்டுமல்ல, உறவுகள் மற்றும் இணக்கத்தில்தான் உள்ளது’ எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
- Oct 21, 2025 09:23 IST
சென்னையில் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி
தலைநகர் சென்னையில் கனமழை கொட்டத் தொடங்கியது. எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- Oct 21, 2025 09:21 IST
ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையில் எந்திரக் கோளாறு
சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதையில் ஓடும்போது எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. மாற்று விமானம் மூலம் பயணிகளை ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விமானம் வானில் பறக்க தொடங்கும் முன்னதாகவே எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.