/indian-express-tamil/media/media_files/2025/02/12/HNRhP13PwnlriK5RuQKh.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோடி பிரான்ஸ் பயணம்: 3 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். ஏ.ஐ உச்சிமாநாட்டை தலைமை தாங்குவதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார்.
-
Feb 11, 2025 23:48 IST
அதிமுக உட்கட்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது, சென்னை உயர்நீதிமன்றம் நாளை (பிப்ரவரி 12) தீர்ப்பு அளிக்க உள்ளது.
-
Feb 11, 2025 21:29 IST
வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் இயக்கப்படும் என்று, சென்னை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
-
Feb 11, 2025 21:27 IST
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஈபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
-
Feb 11, 2025 20:41 IST
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், மாநகராட்சி சார்பில், ரூ1.61 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
Feb 11, 2025 20:38 IST
பட்ஜெட் தயார் செய்வது இப்போது மிகவும் சவாலாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்
முன்பு இருந்ததை விட பட்ஜெட் தயார் செய்வது இப்போது மிகவும் சவாலாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் நிலவும், அசாதாரண பொருளாதார சூழல்கள் மாறிவிட்டது பட்ஜெட் தாக்கல்களை தலைகீழாக மாற்றிவிட்டது என்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
Feb 11, 2025 20:06 IST
பள்ளி கல்வி திட்ட நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசு: அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்திற்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தை தவிர்த்து பிற மாநிலங்களுக்கு 17 ஆயிரத்து 632 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
Feb 11, 2025 18:29 IST
சென்னையில் விஜயுடன் 2-வது நாளாக பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவு
சென்னையில் த.வெ.க தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். த.வெ.க நிர்வாகிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் த.வெ.க-விற்கு தற்போது இருக்கும் வாக்கு சதவீதம் 2026 தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார். த.வெ.க தலைவர் விஜய் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பையனூரில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 11, 2025 18:14 IST
பாடகர் எஸ்.பி.பி பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் உதயநிதி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு மறைந்த பின்னணி பாடக எஸ்.பி. பாலசுப்பிரமனியம் பெயர் சூட்டப்பட்டதையடுத்து, அந்த சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
-
Feb 11, 2025 18:10 IST
சென்னையில் சிலிண்டர் மாற்றும்போது விபத்து: 3 பேர் பலி
சென்னையில் வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்த்தில் சிக்கி 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Feb 11, 2025 17:20 IST
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓ.பி.எஸ்; உறுதி செய்தது எஸ்சி, எஸ்டி ஆணையம்
பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை எஸ்சி/எஸ்டி ஆணையம் உறுதி செய்தது. பஞ்சமி நிலம் வாங்கியது தொடர்பாக எழுந்த புகாரை, எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் 3வது அமர்வு விசாரித்தது. ஓ.பி.எஸ் பெயருக்கு மாற்றிய பட்டாவை ரத்து செய்ய தேனி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 11, 2025 16:49 IST
மக்களின் வரிப்பணம் வீணடிப்பு: தயாநிதி மாறன் கண்டனம்
நாடாளுமன்ற விவாதங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக மக்களவையில் தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்தள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், சமஸ்கிருத மொழிக்கு செலவிடுவது அவசியமா?” மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழிகளுக்காக மொழிபெயர்ப்பு செய்து வழங்குவது வரவேற்கத்தக்கது. யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு மக்களின் வரிப் பணத்தை செலவிடுவது அவசியமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் வரிப்பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? இந்தியாவில் எந்த மாநிலம் சமஸ்கிருதத்தை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளது?. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்துக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?. ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
-
Feb 11, 2025 16:45 IST
புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் மாவட்டங்களில் அமையும் தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 19,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். “உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு படுத்தப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் தொழில்களுக்கு அனுமதி” அளித்துள்ளது.
-
Feb 11, 2025 16:07 IST
ரூ.20-க்கு மின்சாரம் வாங்குவதா? - அன்புமணி கேள்வி
பா.ம.க தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தள பக்கத்தில், "பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா? மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்றைய நிலையில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,646 மெகாவாட்டாகவும். அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேர மின் தேவை 18,600 ஆக இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 23,135 மெகாவாட்டாக இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் நிலைமையை சமாளித்து விட முடியும் என்றாலும், மாலை நேர மின் தேவையை சமாளிக்க தனியாரிடமிருந்து தான் மின்சாரத்தை வாங்கியாக வேண்டும்.
சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்றும், கோடைக்காலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சியும் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறப்பட வேண்டும். அப்போது தான் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4320 மெகாவாட் மட்டும் தான். அதிலும் இன்று காலை 2619 மெகாவாட் அளவுக்கு தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் சுமார் 17,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதே நிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 11, 2025 15:53 IST
'ஏ.ஐ பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது' - மோடி பேச்சு
அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இணைந்து ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சி மாநாடு தொடங்கியது. பாரிஸில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாரிஸில் நடைபெறும் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பரவலாக்க வேண்டும். மனித இனத்திற்கான வரைவுகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(Al) பயன்படுகிறது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றின் மறுவடிவமைப்பிற்கு ஏ.ஐ. உதவுகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது. பாதுகாப்பான முறையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவரும் கொண்டுசெல்ல வேண்டும். விவசாயம் மற்றும் கல்வித் துறையில் ஏ.ஐ. மூலம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம்.உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மட்டுமே மாறும்.ஏஐ உச்சிமாநாட்டை இணைத் தலைமை தாங்கி நடத்த அழைத்த மேக்ரானுக்கு நன்றி,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 11, 2025 15:52 IST
விஜயுடன் கூட்டணியா?-விஜய பிரபாகரன் நச் பதில்
"தேர்தலில் போட்டியிட்டு விஜய் தன்னை நிரூபித்த பின், அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம். 2006 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிட்டு 12% வாக்குகளை பெற்றது. தேர்தலுக்கு முன் சூழலுக்கு ஏற்றவாறு எங்களின் நிலைப்பாடு மாறும்" என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
-
Feb 11, 2025 15:21 IST
கேஸ் சிலிண்டர் விபத்து - பலி 3 ஆக உயர்வு
சென்னை நுங்கம்பாக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்ட சம்பவத்தில் 3 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
-
Feb 11, 2025 14:54 IST
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை - மம்தா பானர்ஜி அறிவிப்பு
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என மேற்குவங்கம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தேசிய அளவில் பா.ஜ.க-வை எதிர்கொள்ள அக்கட்சி தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 11, 2025 14:50 IST
த.வெ.க உட்கட்டமைப்பு குறித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை என தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பு குறித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கட்சியின் கட்டமைப்பு, நிர்வாகிகளின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், த.வெ.க-விற்கு சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.
-
Feb 11, 2025 14:40 IST
கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான வழக்கு
கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அங்கு பயின்ற மாணவி அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை, நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
-
Feb 11, 2025 14:17 IST
ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மாணிக்கம் தாகூர் எம்.பி.
மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், "ரயிலில் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் 'பெண் குழந்தையக் காப்போம்' திட்டத்தின் பயன் என்ன? ரயில்வே துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 11, 2025 13:46 IST
கஞ்சா கருப்பு போராட்டம் - மாநகராட்சி விளக்கம்
சென்னை, போரூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய நிலையில், மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, "3 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு மருத்துவர் மட்டும் காலதாமதமாக வந்ததால் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. மூன்றாவது மருத்துவரும் வந்த பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 11, 2025 13:22 IST
போலீஸ் காவல் வழங்க நீதிமன்றம் மறுப்பு
சென்னை, ஈ.சி.ஆரில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தோஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அவரை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
-
Feb 11, 2025 12:56 IST
போரூர் மருத்துவமனையில் கஞ்சா கருப்பு வாக்குவாதம்
சென்னை: போரூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த மூதாட்டியை வேறு மருத்துவமனைக்கு மாற்றியதாக அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
-
Feb 11, 2025 12:50 IST
"அரசியலில் தொழில்நுட்ப மாற்றங்கள் தேவை" - அன்புமணி ராமதாஸ்
"இன்றைய காலக் கட்டத்தில் சமூக மாற்றங்கள் போல தொழில்நுட்ப மாற்றங்கள் அரசியலில் தேவைப்படுகிறது; அதனால் இதுபோல பொலிட்டிக்கல் ஸ்டேட்டர்ஜிஸ்ட் தேவை” என்று தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Feb 11, 2025 12:23 IST
இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி!
திடீர் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னைக்கு இன்று மாலை ரயிலில் வந்து இங்கு தங்கி, பின் டெல்லிக்கு விமானம் மூலம் பயணிக்க உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வரும் ராகுலை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கிறார்கள்.
-
Feb 11, 2025 12:21 IST
யூடியூபர் ரன்வீர் அல்லாபடியாவுக்கு சம்மன்
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபடியாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் கொடுத்துள்ளது. சமைய் ரெய்னாவின் இந்தியா காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லாபடியா அருவருக்கத்த வகையில் பேசியுள்ளார். அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தனது கருத்துக்கு அல்லாபடியா மன்னிப்பு கோரினார். சர்ச்சைக்குரிய அந்த வீடியோ யூடியூப் தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது
-
Feb 11, 2025 11:43 IST
தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
விஜயின் தவெக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2ஆம் நாளாக ஆலோசனை. த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 2026 தேர்தலை கருத்தில் கொண்டு த.வெ.க சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 11, 2025 11:21 IST
நடிகர் கார்த்தி சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து கொண்டார் நடிகர் கார்த்தி. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கார்த்தியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
-
Feb 11, 2025 11:06 IST
வேல் ஏந்தி நம்மைக் காத்தருளும் முருகன்: இபிஎஸ்
வேல் ஏந்தி நம்மைக் காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாள். தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர வழிபடுகிறேன் தைப்பூசத் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக அதிமுக அரசு அறிவித்ததை நினைவுகூர்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Feb 11, 2025 10:30 IST
புதிய உச்சத்தில் தங்கம்
தங்கம் பவுனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 64, 480க்கு விற்பனையாகிறது.
-
Feb 11, 2025 10:29 IST
சென்னை வடபழனியில் கூட்ட நெரிசல்
தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனியில் பக்தர்கள் குவிந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
Feb 11, 2025 09:15 IST
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்- தவெக தலைவர் விஜய்
தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள் முருகன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Feb 11, 2025 09:06 IST
பாலியல் குற்றச்சாட்டில் கைதான பாஜக பிரமுகர்
பாலியல் குற்றச்சாட்டில் கைதான பாஜக பிரமுகர் லியாஸ் தமிழரசனிடம் இருந்து 9 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 11, 2025 08:37 IST
அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
-
Feb 11, 2025 08:10 IST
வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்
திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக இன்று திறந்திருக்கும். தைப்பூசத்தையொட்டி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 11, 2025 08:08 IST
கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
-
Feb 11, 2025 08:03 IST
திருச்செந்தூரில் தைப்பூசம் கோலாகலம்
தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைகடலென குவிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகப்படியான பக்தர்கள் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
Feb 11, 2025 07:55 IST
பழனியில் தைப்பூசத் திருவிழா
தைப்பூசத்தையொட்டி பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமரவேல் வெள்ளி தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
-
Feb 11, 2025 07:27 IST
வடலூரில் தைப்பூசம் திருவிழா
வடலூர் சத்தியஞான சபையில் 154வது தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது. சத்திய ஞான சபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம். "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" என பக்தர்கள் பரவசம் கோஷமிட்டனர்.
-
Feb 11, 2025 07:26 IST
AI மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரான்சில் இன்று நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபருடன் இணைந்து தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி.
-
Feb 11, 2025 07:22 IST
தைப்பூசம் திருவிழா
சென்னை வடபழனி, பழனி முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 11, 2025 07:20 IST
பத்தரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்
தைப்பூசத்தையொட்டி பத்தரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்பட உள்ளன.இன்று காலை 10 மணி ம.தல் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள் திறந்திருக்கும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.