/indian-express-tamil/media/media_files/2025/01/30/8zgA5Xkkbv2XzN6NrOpG.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 14, 2025 20:15 IST
2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் - அண்ணாமலை நம்பிக்கை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “வரும் 2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். பா.ஜ.க ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால் அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். தமிழகத்தில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிர், உடமையை காத்தவர் மோடி; 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் வந்ததைப் போல 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க அட்சிக்கு வரும்” என்று கூறியுள்ளார்
-
Feb 14, 2025 19:51 IST
புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை சூறையாடிய உறவினர்கள்
புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. புதுச்சேரி - கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியல் - 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.
-
Feb 14, 2025 19:37 IST
‘எம்.பி-யை இப்படி நடத்துபவர்கள், மற்ற பயணிகளை எப்படி நடத்துவர்? நினைத்தால் நடுங்குகிறது - தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், டெல்லி - சென்னை இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்த தனக்கு எந்த முன்னறிவிப்பும் விளக்கமும் இன்றி சாதாரண வகுப்புக்கு இருக்கை மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒரு எம்.பி-யை இப்படி நடத்துபவர்கள், மற்ற பயணிகளை எப்படி நடத்துவர் என நினைக்கும்போதே நடுங்குகிறது; பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவைத் தரங்களை இப்படி அலட்சியம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக மத்திய துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 18:54 IST
சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே, தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 16, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Feb 14, 2025 18:33 IST
ஜெயலலிதா நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நிறைவு
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத ஆபரணங்களையும் போலீசார் மீண்டும் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
-
Feb 14, 2025 17:42 IST
ஆம்புலன்ஸ் சேவைக்கான ஆப் அறிமுகம்
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் '108' அவசர ஆம்புலன்ஸ் சேவையை எளிதாக்கும் விதமாக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இருக்கக் கூடிய ஆம்புலன்ஸ் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
-
Feb 14, 2025 17:19 IST
கிளாம்பாக்கம் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் திட்டம்
கிளாம்பாக்கம் முதல் சென்னை விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ரூ. 9,335 கோடி மதிப்பீட்டில் அமையும் என அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முதல் சென்னை விமான நிலையம் இடையே 13 நிறுத்தங்களுடன் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Feb 14, 2025 17:14 IST
“மீனவர்களுக்கு ஆமையும், மீன்களும் 2 கண்கள் போல்" - அமைச்சர் பொன்முடி பேச்சு
"மீனவர்ளையும், கடல் ஆமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விசைப் படகுகள் கடற்கரையில் இருந்து 5 நாடிகல் மைல் தூரம் வரை மீன் பிடிப்பது தவிர்க்க வேண்டும்.
தற்போது வரை 1,300 ஆமைகள் மரணம் அடைந்துள்ளது. விதிகளை மீறிய மீன் பிடித்த 208 மீனவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
Feb 14, 2025 17:13 IST
"ஏழை மக்களை, வங்கிகள் துன்புறுத்தக் கூடாது": நீதிமன்றம் வலியுறுத்தல்
ஏழை மக்களை, வங்கிகள் துன்புறுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தியுள்ளது. கடனை செலுத்திய பின்னரும், சொத்து அடமான பத்திரத்தை வங்கி தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய நீதிமன்றம், வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமார் என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
-
Feb 14, 2025 16:59 IST
சுங்க வரி - தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
உடலில் அணிந்து வரும் நகைகளை, சுங்க வரி விதிக்கும் வகையில் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து
சுங்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, பிணை அல்லது உத்தரவாதம் பெற்று திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள், உடைமைகளாக கருதப்பட்டு வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று சுங்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
-
Feb 14, 2025 16:52 IST
பாம்பன் பாலம் திறப்பு - 28-ம் தேதி மோடி தமிழகம் வருகை
பிரதமர் மோடி வருகிற 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்
-
Feb 14, 2025 16:47 IST
தமிழக சுங்கச் சாவடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ 15,678 கோடி வசூல்
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் (2019-24) சுங்கச் சாவடி கட்டணமாக ரூ.15,678 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 70 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் 21 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 14, 2025 16:19 IST
சாம்சங் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் சாம்சங் தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சு தோல்வியடைந்தது. 3 தொழிலாளர்கள் பணியிடை நீக்கத்தைக் கண்டித்து 10 நாட்களாக சக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற ஆலை நிர்வாகம் மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
-
Feb 14, 2025 15:57 IST
எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே - ஸ்டாலின் பேச்சு
"கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Feb 14, 2025 15:43 IST
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்பால் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 14, 2025 15:28 IST
'அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது' - ஸ்டாலின் பேச்சு
"அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Feb 14, 2025 14:30 IST
சென்னையில் பேரணி கோரிய வழக்கு: பாரத் இந்து முன்னணி நிர்வாகி மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சென்னையில் பேரணி நடத்த பாரத் இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
-
Feb 14, 2025 14:26 IST
அண்ணாமலையின் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வருகிறது: அன்பில் மகேஸ்
அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் எடுத்துவிட்டுதான் செல்வேன் என்ற அண்ணாமலை பேச்சை கேட்டால் சிரிப்புதான் வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
-
Feb 14, 2025 13:32 IST
ஜெயலலிதா நகைகள் குறித்த வழக்கு: ஜெ.தீபா மனு நிராகரிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ.தீபா கூறியிருந்தார்.
-
Feb 14, 2025 13:28 IST
மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றால்... ஒ.பி.எஸ்-க்கு நிபந்தனை
மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும். வழக்கு தொடர்வது போன்ற எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், எடப்பாடி பழனிச்சாமியிடம் நாங்களே பேசி, நடவடிக்கை எடுக்க செய்வோம் என்று, அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 13:26 IST
போராட்டத்திற்கு அனுமதி: காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு
மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Feb 14, 2025 12:48 IST
காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை சென்ட்ரலில் அமையவுள்ள சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர். 14,280 சதுர மீட்டர் பரப்பளவில் ₹547 கோடி மதிப்பீட்டில் இது கட்டப்படுகிறது. 4 அடித்தளங்களில் வாகன நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 586 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1652 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என்று தகவல்.
-
Feb 14, 2025 12:47 IST
"சென்னையில் 12 ஏரிகள், மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்தப்படுகின்றன" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“சென்னை நீர்முனை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 12 ஏரிகள், 4 கடற்கரைப் பகுதிகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த ரூ. 250 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு இது உருவாக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
Feb 14, 2025 12:24 IST
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி தாக்கப்பட்ட விவகாரம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணி தாக்கப்பட்ட விவகாரம் சம்பந்தப்பட்ட பயணி, நேரக்காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இழிவான வார்த்தைகளை கூறி திட்டியதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பானதாகவும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து துறை கூறியுள்ளது.
-
Feb 14, 2025 12:02 IST
அதிகாரியை கண்டித்த அமைச்சர் கே.என்.நேரு
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேச்சை கவனிக்காத அதிகாரியை கண்டித்தார் அமைச்சர் கே.என்.நேரு. நகராட்சி நிர்வாகத்துறை குறித்து பேசுவதை கவனிக்குமாறு அமைச்சர் கே.என்.நேரு கண்டித்துள்ளார்.
-
Feb 14, 2025 11:42 IST
CREDAI கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கோவை, மதுரை, ஓசூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 136 நகரங்களுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரைக்கான முழுமை திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரம்புதூர், பரந்தூர் பகுதிகளுக்கு புதுநகர வளரச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று CREDAI கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 11:22 IST
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி சார்பில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னையை காரணமாக்கி ஒற்றுமையை சீர்குலைக்க விடக் கூடாது என்று காவல்துறை கூறியுள்ளது.
-
Feb 14, 2025 11:20 IST
செங்கோட்டையன் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன் - கே.பி.முனுசாமி
“செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா அவருக்கு எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்தாரோ, அதே அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிப்புடன் நடத்துகிறார். ஈரோடு முத்துசாமி போல இல்லாமல், அவர் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன்” என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 11:11 IST
7 வயது குழந்தை மீது விழுந்த இரும்பு கேட்
சென்னை: வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த நங்கநல்லூரை சேர்ந்த ஐஸ்வர்யா (7) என்ற குழந்தை மீது, வீட்டின் கேட் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட வழியிலேயே மரணம் அடைந்துள்ளார். பள்ளி முடித்து தந்தையுடன் வீட்டுக்கு சென்றபோது குழந்தைக்கு இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தகவல். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 14, 2025 11:08 IST
பாமக சென்னையில் போராட்டம்!
"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வரும் 20ம் தேதி சென்னையில் தொடர் முழக்க போராட்டம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
Feb 14, 2025 11:07 IST
அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க அரசு நடவடிக்கை
"தமிழ்நாட்டில் தற்போது 1.15 கோடி பெண்களுக்கு ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 10:36 IST
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு திருமணம்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இன்று வரை 1800 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். இந்தாண்டு மேலும் 700 திருமணங்கள் நடைபெற உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாக இருந்து சீர் வரிசை வழங்கியுள்ளார். 30 மணமக்களின் பெயர்களுக்கு பின் பட்டங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் 95% மணமகள்கள் பட்டதாரிகளாக உள்ளனர். இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
-
Feb 14, 2025 10:05 IST
வீட்டின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி
சென்னை நங்கநல்லூரில் வீட்டின் இரும்பு கேட் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழந்தார்.
-
Feb 14, 2025 10:04 IST
பாலியல் புகார் விழிப்புணர்வு - அமைச்சர் கீதா ஜீவன்
“பாலியல் புகார் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாகத்தான், தற்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கிறார்கள்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 08:53 IST
இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது
எப்போதும் இல்லாத வகையில் இப்போது இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியப் பிரதமர் மோடி என்னைவிட சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்துபவராக இருக்கிறார்; அவ்விஷயத்தில் அவருடன் போட்டிப்போடுவதற்குகூட ஏதுமில்லை. ரஷ்யா-உக்ரைன் போர் உட்பட உலகில் நடைபெறும் அனைத்து போர்களும் முடிவுக்கு வர வேண்டும்; உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த உதவும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா அமெரிக்கா என இரு நாடுகளும் உதவுவோம். யுத்தங்களில் செலவிடப்படுகிற பல ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தபட வேண்டும். வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியா, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது"
-
Feb 14, 2025 08:13 IST
“அதானி விவகாரம் - டிரம்புடன் பேசவில்லை''
தனிநபர் விவகாரங்களை இரண்டு நாடுகளின் தலைவர்கள் ஒருபோதும் விவாதிப்பதில்லை என அதானி குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
-
Feb 14, 2025 08:11 IST
ஜலசமாதி
அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சர்யா சத்யேந்திர தாஸ் உடல் நேற்று சரயு நதியில் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் ஆற்றில் வீசப்பட்டுள்ளது
-
Feb 14, 2025 07:40 IST
நாளை துபாய் செல்கிறது இந்திய அணி
வரும் 20 ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.
-
Feb 14, 2025 07:38 IST
மோடி - ட்ரம்ப் சந்திப்பு
பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் வர்த்தகம் தொடர்பான சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
Feb 14, 2025 07:36 IST
தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு
தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
Feb 14, 2025 07:32 IST
``இந்தியா விதிக்கும் வரி, இந்தியா மீதே பாயும்''
பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு முன்னதாக, இந்தியா அதிக வரி விதிப்பதாக கடும் குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகளை விட, இந்தியாவே அதிக வரி விதிக்கிறது என்றும் அமெரிக்கா மீது இந்தியா எவ்வளவு இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை இந்தியா மீதும் விதிப்போம் என்றும் தெரிவித்தார். அதிபர் டிரம்பின் அறிவிப்பால், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் வணிகம் செய்ய எலான் மஸ்க் விரும்புகிறார், ஆனால் இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது. அதிக வரிகள் காரணமாக, இந்தியாவில் வணிகம் செய்வது மிக கடினம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Feb 14, 2025 07:29 IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி
ட்ரம்ப் அமெரிக்காவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது பாக்கியம். ட்ரம்புடன் இணைந்து இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என மோடி தெரிவித்தார்.
-
Feb 14, 2025 07:26 IST
தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் விவாதிப்பதில்லை - பிரதமர் மோடி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நமது கலாச்சாரம் வசுதைவ குடும்பம் நாங்கள் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியனும் எனக்கு சொந்தம் என்று நான் நம்புகிறேன். இரு நாடுகளின் இரு முக்கிய தலைவர்கள் இத்தகைய தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் விவாதிப்பதில்லை.
-
Feb 14, 2025 07:24 IST
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்-மோடி சந்திப்பு
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.