Chennai News Highlights: ட்ரம்பை காதலிப்பதாக எலான் மஸ்க் எக்ஸ் பதிவு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trump musk

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Feb 18, 2025 21:40 IST

    பெங்களூருவில் குடிநீரை வீணாக்கினால் ரூ.5,000 அபராதம்

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் குடிநீரை வீணாக்கினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரேனும் குடிநீரை வீணாக்குவதை பார்த்தால், உடனடியாக 1916 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.



  • Feb 18, 2025 21:01 IST

    ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு சலுகை

    ரமலான் மாதத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு சலுகை அளித்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மார்ச் 2 முதல் 30 வரை அனைத்து வேலை நாட்களிலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அலுவலகம் அல்லது பள்ளியை விட்டுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Feb 18, 2025 20:46 IST

     "இருமொழிக் கொள்கையில் படித்து முன்னேறியுள்ளோம்": செல்வப்பெருந்தகை

    இருமொழிக் கொள்கையில் படித்து தான் முன்னேறியுள்ளோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான் கல்வித்துறை, மருத்துவத்துறை போன்றவற்றில் முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Feb 18, 2025 19:52 IST

    அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம் -  உதயநிதி ஸ்டாலின்

    மத்திய அரசின் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "தமிழ்நாடு ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்காது. இன்னொரு மொழிப்போரை சந்திக்க தயங்காது. மிரட்டலுக்கு அடிபணிவோம் என கருதினால் கனவிலும் நடக்காது" எனத் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 18, 2025 19:29 IST

    'உங்க அப்பா வீட்டு காசை கேட்கவில்லை' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசின் பாசிச போக்கிற்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்துள்ளது. தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடியை உ.பி., குஜராத் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்கள் என மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

    'உங்க அப்பா வீட்டு காசை கேட்கவில்லை; பிச்சையோ, கடனோ கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணம், எங்களின் உரிமையைத்தான் கேட்கிறோம். தமிழ்நாடு கல்வியில் எத்தனையோ சாதனைகளைச் செய்து வருகிறது. ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அடிபணியும் என்று நினைத்தால், அது கனவிலும் நடக்காது' என்றும் அவர் கூறியுள்ளார்.



  • Feb 18, 2025 19:13 IST

    மத்திய அமைச்சருக்கு முத்தரசன் கேள்வி

    மும்மொழிக் கொள்கையை ஏற்காத மாநிலத்துக்கு நிதி ஒதுக்கக் கூடாது என அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கு உள்ளது? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தெரியாமல் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகிறார். ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒன்றிய ஆட்சியாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.



  • Feb 18, 2025 19:09 IST

    ஏழுமலையான் கோயிலில் மே மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை வெளியிடப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 



  • Feb 18, 2025 18:39 IST

    பீஞ்சல் புயல் பாதிப்பு - 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு; ஸ்டாலின் உத்தரவு

    பீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.498.8 கோடி நிவாரணம் வழங்குவதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன் பெறுவர். மானாவாரி பயிர் ஹெக்டேருக்கு ரூ.8,500, நெற்பயிர், பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • Feb 18, 2025 18:30 IST

    நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல் :அமைச்சர் ரகுபதி

    நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பெண்களை பாதுகாப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதலமைச்சர் இடம் தரமாட்டார்; பெண்களுக்கு முதலமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல்.உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் அற்ப வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல்படுங்கள் பழனிசாமி!; பெண்களை அச்சுறுத்த நினைத்து அற்ப அரசியல் செய்யாதீர்கள்” என்றும் கூறியுள்ளார். 



  • Feb 18, 2025 18:30 IST

     “தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது'' - செல்வப்பெருந்தகை

    "மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது; மத்திய அரசுக்கு எதிராக வலுவான கண்டனக் குரல்களை எழுப்ப உள்ளோம். தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதற்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் ஒரு உதாரணம்" என்று  காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

     



  • Feb 18, 2025 17:50 IST

    “விஜய் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளி'' - அண்ணாமலை குற்றச்சாட்டு 

    "தவெக தலைவர் விஜய் சி.பி.எஸ்.இ பள்ளியை நடத்தி வருகிறார்; எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் பள்ளி நடத்தப்படுகிறது" என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 



  • Feb 18, 2025 17:35 IST

    மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க கூட்டணி கட்சிகள்
    ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, த.வா.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், முத்தரசன், காதர் மொகிதீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

     



  • Feb 18, 2025 17:19 IST

    மும்மொழி கொள்கை - பா.ஜ.க கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு 

    "மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்கள் மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை, 3-வது மொழி விருப்ப மொழி மட்டுமே. 3-வது மொழியாக இந்தியை திணிக்காமல், ஏதேனும் ஒரு விருப்ப மொழியை படிக்கும் வகையில் பிரதமர் மோடி மாற்றினார். 

    அரசுப் பள்ளி மாணவர்கள் தனியாருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இருமொழிக் கொள்கையை தி.மு.க அரசு பின்பற்றுகிறதா? மும்மொழி கொள்கை தொடர்பாக மார்ச் 1 முதல் 90 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். 3-வது மொழி வேண்டுமா? வேண்டாமா? என்று மக்களை வீடுதேடி சென்று சந்தித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளோம்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  



  • Feb 18, 2025 17:00 IST

    மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்கள் - அண்ணாமலை

    மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். மும்மொழிக்கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை, 3வது மொழி விருப்ப மொழி மட்டுமே. 3வது மொழியாக இந்தியை திணிக்காமல், ஏதேனும் ஒரு விருப்ப மொழியை படிக்கும் வகையில் பிரதமர் மோடி மாற்றினார். அரசுப் பள்ளி மாணவர்கள் தனியாருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இருமொழிக் கொள்கையை தி.மு.க அரசு பின்பற்றுகிறதா? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்



  • Feb 18, 2025 16:43 IST

    வேளாண் பட்ஜெட் - அமைச்சர் தலைமையில் ஆலோசனை

    வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மார்ச் 15ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் 



  • Feb 18, 2025 16:42 IST

    வணிக வரித்துறை வருவாய் ரூ.1.13 லட்சம் கோடி – அமைச்சர் மூர்த்தி

    தமிழக வணிக வரித்துறை 2024-25 நிதியாண்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை ரூ.1.13 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் தற்போது வரை கூடுதலாக ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்



  • Feb 18, 2025 16:40 IST

    இரட்டை இலை வழக்கு; தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

    மனு இரட்டை இலை தொடர்பான வழக்கை தாமதமின்றி விசாரிக்க தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தடையாணை ரத்து உத்தரவை சுட்டிக்காட்டி, விசாரணையை துவங்க மனுவில் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்



  • Feb 18, 2025 16:16 IST

    மத்திய அரசின் பங்கு தொகையை விடுவியுங்கள்; ஸ்டாலின் வலியுறுத்தல்

    ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் நிலுவை பங்கு தொகையை உடனே விடுவியுங்கள். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. PMMVY திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.304 கோடியில், ரூ.184 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசு காலதாமதமாக வழங்குவதால், குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்



  • Feb 18, 2025 15:57 IST

    பெண்கள் பாதுகாப்புக்கு `பிங்க்' ஆட்டோ திட்டம் - தமிழ்நாடு அரசு

    சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்கு `பிங்க்' ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் நிற ஆட்டோவில் ஜி.பி.எஸ், கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும். பிங்க் ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது



  • Feb 18, 2025 15:33 IST

    'மதராஸி' சொல்லும் கருத்து; ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

    வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் `மதராஸி' படத்தின் கதை. வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை குறிப்பிடும் வார்த்தை தான் `மதராஸி' அதனால் தான் இப்படத்திற்கு `மதராஸி' என பெயர் வைக்கப்பட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்



  • Feb 18, 2025 15:08 IST

    த.வெ.க உடன் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கூட்டணி

    த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா நேரில் சந்தித்து த.வெ.க.,விற்கு ஆதரவு தெரிவித்தார். 2026 தேர்தலில் த.வெ.க கூட்டணியில் இடம்பெறுவோம் என்றும் உறுதி அளித்தார்



  • Feb 18, 2025 15:02 IST

    பிப். 24-ம் தேதி அ.தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் - தலைமைக் கழகம் அறிவிப்பு

    அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் 24.02.2025 திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 18, 2025 13:58 IST

    சென்னை தியாகராயர் நகரில் விதிமீறல் கட்டிடங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

    அனுமதி இல்லாத கட்டுமானங்கள் நீடிக்கக் கூடாது. சென்னை தியாகராயர் நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கட்டடங்களை இடிக்க சி.எம்.டி. அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Feb 18, 2025 13:52 IST

    அவசரமாக தேர்தல் ஆணையர் நியமனம்... தேர்தல் நடைமுறை மீதான நேர்மை கேள்விக்குறி - ராகுல் விமர்சனம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்தின் அடிப்படை அம்சமே நிர்வாகத் தலையீடு இல்லாத சுதந்திரமான ஆணையரை தேர்வு செய்யும் முறைதான். அவசர அவசரமாக தேர்தல் ஆணையரை நியமித்ததன் மூலம் தேர்தல் நடைமுறை மீதான நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.



  • Feb 18, 2025 13:26 IST

    ‘வடக்கு - தெற்கு என இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள்... வேதங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள்’ - ஆளுநர் ரவி

    சென்னை மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “பாரதம் ஒருங்கிணைந்த நாடு என்பதை ஏற்க மறுக்கும் கட்டமைப்பு இங்கே இருக்கிறது. காஞ்சி - காசி இடையே இருக்கும் ஒற்றுமையை பாரதியார் பேசினார். ஆனால், வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள். பாரதியார் வேதங்களை போற்றினார், இங்கு வேதங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். இம்மாநிலம் முழுவதும் முழுவதும் சுற்றி இருக்கிறேன். மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை” என்று கூறினார்.



  • Feb 18, 2025 12:59 IST

    யூடியூபர் ரன்வீர் விவகாரம் - உச்சநீதிமன்றம் கண்டனம்

    யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் சர்ச்சை கருத்து: தான் ஒரு பிரபலம் என்பதற்காக மனதில் தோன்றுவதை பேசுவதா? என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனுதாரர் மறு உத்தரவு வரும் வரை வேறு எந்த நிகழ்ச்சியையும் அவரது யூடியூபில் ஒளிபரப்பக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 18, 2025 12:41 IST

    கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு -அமைச்சர் சிவசங்கர்

    ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். ஆட்டோ கட்டணம் உயர்வு தொடர்பான கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 



  • Feb 18, 2025 12:33 IST

    சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா

    சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சார்பில், 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு ₹3.75 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று, உதவித்தொகையை வழங்கினார்



  • Feb 18, 2025 12:24 IST

    திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது: முஸ்தபா

    தவெகவிற்கு எதிராக இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது இஸ்லாமியர்களுக்கு தவெக அங்கீகாரம் கொடுக்கவில்லை என பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா கூறியுள்ளார். 



  • Feb 18, 2025 12:09 IST

    களத்தில் துணை முதல்வர்

    மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



  • Feb 18, 2025 12:00 IST

    ஆட்டோ கட்டணம் உயர்வா? - அமைச்சருடன் பேச்சுவார்த்தை

    ஆட்டோக் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 25 வசூலிக்கவும் அனுமதி தரவும் வாடகை ஆட்டோக்களுக்கான செயலியை அரசு அறிமுகப்படுத்தவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். 



  • Feb 18, 2025 11:50 IST

    “இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்” - ஜெயக்குமார்

    “தமிழ்நாட்டில் என்றைக்கும் இருமொழிக் கொள்கைதான். தமிழ்நாட்டின் உரிமையை என்றும்| விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தி திணிப்பை அதிமுக ஒருபோது ஏற்றுக்கொள்ளாது!” என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 



  • Feb 18, 2025 11:41 IST

    த.வெ.க. கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது

    தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி உடன் தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை சந்தித்துப் பேசினார்; 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம்பெறுவது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 



  • Feb 18, 2025 11:39 IST

    10 கைவினைஞர்களுக்கு விருது- முதல்வர் வழங்கினார்

    தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதல்வர் வழங்கினார்.  65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்' விருதுகள் வழங்கப்பட்டன.  கைத்தறி தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி, படைப்புகளில் சிறந்த கைவினைஞர்களுக்கு விருதுகள்



  • Feb 18, 2025 11:29 IST

    குவியும் போலீஸ் சம்மன்.. எதிரடி அடித்த சீமான்

    தேர்தலுக்காக புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போன்று திமுக அரசு நாடகமாடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், ஆனால் எதிர்ப்பது போல அரசியல் நாடகம் ஆடுவதாகவும் இல்லம் தேடி கல்வி திட்டமே அதன் கீழ் வருவதாக விமர்சித்தார். தொடர்ந்து, திருவள்ளூரில் மக்களின் வாழ்விடங்களை அழித்து அறிவு நகரம் தேவையா என கேள்வி எழுப்பிய சீமான், தன்னை சோர்வடைய செய்யவே பல்வேறு வழக்குகளில் சம்மன் அனுப்பப்படுவதாக தெரிவித்தார்.



  • Feb 18, 2025 11:26 IST

    தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு எதிராக முறையீடு

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையீடு செய்துள்ளார். ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் வகையில் மத்திய அரசு ஆணையரை நியமனம் செய்துள்ளது என முறையீடு செய்துள்ளார். 



  • Feb 18, 2025 11:11 IST

    கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்க தடையில்லை

    சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர ஜிம்கானா கிளப்க்கு உரிமை இல்லை என அரசு வாதம். குத்தகைக்கு விட்ட நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முன்பு ஜிம்கானா கிளப்க்கு நோட்டீஸ் கொடுக்க அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 



  • Feb 18, 2025 11:09 IST

    மார்ச் 14ல் தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்!

    தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று தகவல். 



  • Feb 18, 2025 10:37 IST

    பள்ளிகளில் பாலியல் புகார் - அரசு அதிரடி

    "ஆசிரியர்கள், பணியாளர்கள் கல்வி நிறுவனங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக காவல்துறை சரிபார்ப்பு சான்று கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்சோ வழக்கில் தண்டனை பெறும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.



  • Feb 18, 2025 10:22 IST

    டெஸ்லாவில் வேலைவாய்ப்பு.. பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

    எலான் மஸ்க், பிரதமர் மோடி சந்திப்புக்கு பிறகு, டெஸ்லா இந்தியாவில்  உள்ள 13 காலி பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது. டெக்னீஷின்யன் முதல் ஸ்டோர் மேனேஜர் வரை 13 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என லிங்க்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



  • Feb 18, 2025 09:59 IST

    சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

    செல்போனில் அழைத்தும் காதலன் எடுக்காததால் நள்ளிரவில் வீட்டிற்கு அழைத்து சென்று 3 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த புவனேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து வருமாறு அழைத்து வந்த பின் செல்போனை எடுக்காத காதலன் ஜெகதீஷ்வரனும் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • Feb 18, 2025 09:56 IST

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கு எதிராக மக்கள் போராட்டம்!

    அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகம் வெளியே பொடுமக்கள் போராட்டம் நடத்தினர்.  அதிபராக பொறுப்பேற்றது முதல் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிறகு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோஷம் எழுப்பினர். பதாகைகள் ஏந்தியும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.



  • Feb 18, 2025 09:54 IST

    போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை

    சென்னையில் பணிகாலத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. பணிகாலத்தில் உயிரிழந்த 6 ஊழியர்களின் வாரிசுகளுக்கு ரூ.45 லட்சம் வழங்கப்பட்டது.



  • Feb 18, 2025 09:12 IST

    பறந்து பறந்து பரீட்சைக்கு சென்ற மாணவர்

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கல்லூரி தேர்வுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்ப பாராகிளைடிங்கில் பறந்து சென்றார்.



  • Feb 18, 2025 09:10 IST

    மோடி பலவீனமானவர் காங்கிரஸ் தாக்கு

    நரேந்திர மோடி மிகவும் பலவீனமான பிரதமர் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து, சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்படும் முறையை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளது. 



  • Feb 18, 2025 09:06 IST

    DeepSeek செயலிக்கு தென் கொரியா தடை

    சீனாவின் ஏஐ செயலியான டீப் சீக் செயலிக்கு தென்கொரியா தடை விதித்துள்ளது. டீப்சீக் செயலியில் தனியுரிமை கொள்கை மீறல், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தடை , ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளிலும் டீப்சீக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



  • Feb 18, 2025 08:20 IST

    பிபிசியின் விருதுகளை வென்ற சாதனை வீராங்கனைகள்!

    பிபிசி சார்பில் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைகளுக்கான விருது டெல்லியில் வழங்கப்பட்டது. பாரிஸ் ஒலிபிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கர் சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற துளசிமதி முருகேசனுக்கு நட்சத்திர வீராங்கனை விருது பெற்றார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவ்னி லேகரா, வில்வித்தை பாரா வீராங்கனை ஷீத்தல் தேவிக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.



  • Feb 18, 2025 08:14 IST

    ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் மற்றும் 45 வயது பெண் உயிரிழப்பு

    ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் மற்றும் 45 வயது பெண் உயிரிழந்தார். ஜிபிஎஸ் நோய் தொற்றும் தன்மை கொண்டதில்லை, பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சல் பரவலைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கூட்டம் உள்ள இடங்களின் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Feb 18, 2025 08:09 IST

    சென்னை விமான நிலையத்திற்கு அவசர ஊர்திகள் அதிகரிப்பு

    சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வருகை. சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியசைத்து செயல்பாட்டுக்கு இயக்கிவைத்தார். இதன்மூலம்  விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை  9-ஆகவும், அவசர ஊர்திகளின்  எண்ணிக்கை  6 ஆகவும் அதிகரித்துள்ளது.



  • Feb 18, 2025 08:07 IST

    சென்னையில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு

    சென்னையில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேவையை அதிகரிக்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. 



Tamil News Live Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: