/indian-express-tamil/media/media_files/AboX8YrhJSZ1zm6yR58q.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 19, 2025 21:58 IST
பளு தூக்கும் வீராங்கனை உயிரிழப்பு
ராஜஸ்தானில் பயிற்சியின் போது பளு தூக்கும் வீராங்கனை உயிரிழந்தார். பவர் லிஃப்ட் வீராங்கனையான யாஷ்டிகா ஆச்சார்யா என்பவர், 270 கிலோ எடையை தூக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்தார்.
-
Feb 19, 2025 21:23 IST
சட்டப் புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து கொலை
இலங்கையில், நிழலுலக தாதா கணேமுல்ல சஞ்சீவா கொழும்பு நீதிமன்றத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் போல உள்ளே நுழைந்து சுட்ட நபர், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சட்ட புத்தகம் உள்ளே துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 19, 2025 20:17 IST
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா அறிவிப்பு
டெல்லியின் முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், ஷாலிமார் பாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை முதலமைச்சராக பர்வேஷ் வெர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சிமைக்க பா.ஜ.க உரிமை கோர உள்ளது. இதற்கான பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Feb 19, 2025 19:44 IST
இந்தியாவில் விற்பனையை தொடங்க டெஸ்லா திட்டம்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மின்சார கார்களை இறக்குமதி செய்து, வரும் ஏப்ரல் மாதம் முதல் விற்பனையை தொடங்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்களின் குறைந்தபட்ச விலை ரூ. 22 லட்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
Feb 19, 2025 19:32 IST
"முதல்வர் ஸ்டாலின் அதை `பிளாக்மெயில்' என்று கூறிவிட்டார்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
"அன்று முதலே `பாரதிய ஜனதா கட்சி'யை.. 'பிளாக்மெயில் (Blackmail) ஜனதா கட்சி'யாக தான் நான் பார்க்கிறேன்" என்று மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி" என கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
-
Feb 19, 2025 19:31 IST
'பா.ஜ.க-வின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி' - அமைச்சர் ரகுபதி சாடல்
"பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது
புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல்துறை. நடவடிக்கை எடுத்த பிறகும் பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே?. தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது, இதையெல்லாம் மடைமாற்றி பழனிசாமி பாஜகவின் விஸ்வாசத்தை காட்டுகிறார்'' என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
Feb 19, 2025 18:59 IST
2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
-
Feb 19, 2025 18:51 IST
போப் பிரான்சிஸ்க்கு தீவிர சிகிச்சை
மூச்சுத் திணறல் காரணமாக கடந்த வாரம் ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் (88) அனுமதிக்கப்பட்டார். மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ஏற்பட்டிருப்பது சிறிய தொற்று என்றும், இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் முடிவில், போப்பின் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக போப்பின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவர் பங்கேற்கும் சனிக்கிழமை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் மூத்த கார்டினல் ஒருவர் போப்புக்குப் பதிலாக பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 19, 2025 18:45 IST
பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு
கராச்சியில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணி 321 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யங் 107 ரன்களும், டாம் லாதம் 118 ரன்களும் எடுத்தனர்.
-
Feb 19, 2025 18:13 IST
பி.எம் ஸ்ரீ திட்ட நிதி: அண்ணாமலை கூறியது தவறான தகவல் - உண்மை சரிபார்ப்பகம்
பி.எம் ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் மத்திய அரசு வழங்குவதாக அண்ணாமலை கூறியது தவறான தகவல் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. பி.எம். ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் மத்திய அரசு தருவதில்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் “60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 14,500 பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளும் அடங்கும். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என அண்ணாமலை கூறியது தவறான தகவல்” என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
-
Feb 19, 2025 17:59 IST
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை ஐகோர்ட் நீதிபதி நியாமானம்
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பொறுப்புத் தலைவராக இருந்து வருகிறார். நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான முனைவர் வி.ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Feb 19, 2025 17:58 IST
சென்னை ஆலை தொடங்கும் ஜப்பான் நிறுவனம்
எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்கிறது. சென்னையில் அமைக்கப்படும் ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்க உள்ளது. முராட்டா நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
-
Feb 19, 2025 17:57 IST
முடா வழக்கு: போதிய ஆதாரம் இல்லை - சித்தராமையா விடுவிப்பு
நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தின் (மூடா) சார்பில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அவர் வழங்கிய நிலத்திற்கு பதிலாக ஒதுக்கீடு செய்த 14 வீட்டுமனைகளில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா புகார் கொடுத்தார். இவ்வழக்கை லோக்ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
-
Feb 19, 2025 17:52 IST
"12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்'' - இ.பி.எஸ் வலியுறுத்தல்
"தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலை. பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை.
அரசு பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. அரசு விழித்து கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்" என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Feb 19, 2025 17:51 IST
'செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுங்கள்' - சுப்ரீம் கோர்ட்டில் இ.டி மனு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
Feb 19, 2025 16:16 IST
அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: டொனால்ட் டிரம்ப்
இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த மரியாதை உள்ளது. ஆனாலும் இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும். இந்தியாவிடம் அதிக பணம் உள்ளது. அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
Feb 19, 2025 16:14 IST
மூணாறில் கல்லூரி பேருந்து விபத்து: 2 பேர் மரணம்
கேரளா: இடுக்கி மாவட்டம் மூணாறில் நாகர்கோவிலிலிருந்து கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவி, ஆசிரியர் உயரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Feb 19, 2025 16:10 IST
நீராடி மட்டுமல்ல; குடிக்கவும் ஏற்றது கங்கை நீர்: யோகி ஆதித்யநாத்
மகா கும்பமேளா - திரிவேணி சங்கமத்தில் அசுத்த நீர் கலப்பதில்லை. அந்நீரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நீராடி வழிபட மட்டுமல்ல... குடிப்பதற்கும் (Aachman) ஏற்றது கங்கையின் நீர். இதுவரை 56 கோடி மக்கள் கும்பமேளாவில் நீராடியிருக்கிறார்கள். அதில் அசுத்தம் என சொல்வது அவர்கள் அத்தனை பேரையும் அவமதிப்பதாகும் என்று உ.பி. சட்டமன்றத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
-
Feb 19, 2025 15:41 IST
கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது: நீதிமன்றம் கருத்து
வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும். கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வகுப்பை தொடர அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2025 15:35 IST
சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் ஒருபகுதியை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்
-
Feb 19, 2025 15:31 IST
ரயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் 18 பேர் பலி: ரயில்வே பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
டெல்லி ரயில்நிலைய கூட்டநெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவுக்கு பதிலளிக்க ரயில்வேக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2025 14:42 IST
எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கக்கூடிய உன்னத தொண்டர் செங்கோட்டையன் - ஓ.பி.எஸ் பாராட்டு
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “உதயகுமாருக்கு எல்லாம் நான் எந்த நேரத்திலும் பதில் சொல்லத் தேவையில்லை. அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும், அதை மக்கள் கவனித்துக்கொள்வார்கள். அவர் பேசுகிற மொழி எலலாம் எப்படி என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்புறம் ஏன் நான் அவருக்கு பதில் சொல்ல வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருப்பவர்கள் எல்லாம் கொங்குநாட்டு தங்கங்கள் என்று எனது நீண்டா நாள் கனவு. அண்ணன் செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் கட்சியை நிறுவிய காலத்தில் இருந்நு அ.தி.மு.க-வில் இன்று வரை கழகத்திற்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். உங்கள் அனைவருக்கும் தெரியும். நீண்ட காலமாக கட்சிக்காக நானும் அவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கக்கூடிய உன்னத தொண்டராக செங்கோட்டையன் இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
-
Feb 19, 2025 14:22 IST
மாணவர்கள் வருகை பதிவு: தலையிட முடியாது - நீதிமன்றம் கருத்து
“வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று கூறிய நீதிபதிகள், வகுப்பை தொடர அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
Feb 19, 2025 13:56 IST
வேங்கைவயல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் மார்ச் 11-ம் தேதி ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு
வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் வரும் மார்ச் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2025 13:55 IST
பட்ஜெட் தாக்கலுக்கு முன் பிப். 25-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 25-ம் தேதி மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யபடும் நிலையில், அதில் இடம்பெற உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
-
Feb 19, 2025 13:24 IST
முல்லைப் பெரியாறு: தமிழ்நாடு - கேரள மாநிலங்கள் பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளது - சுப்ரீம் கோர்ட்
“முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளது; இது போன்ற விவரங்கள் உண்மையில் நீதித்துறை தலையீடு தேவையா என்று நாங்கள் நினைக்கிறோம். உரிய தீர்வு காண இயலாவிட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்வு காணும்: என்று முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அணை பராமரிப்பு பணிகளைக் கேரளா மேற்கொள்ள விடுவதில்லை , மரத்தை வெட்டவிடுவதில்லை என இரு மாநிலங்களும் குற்றம் சாட்டி வருவதை நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
-
Feb 19, 2025 13:20 IST
ஒரு வாரத்திற்குள் முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக்குழு கூட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஒரு வார காலத்திற்குள் முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக்குழு கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்னைகளுக்கு அதற்கடுத்த 2 வாரங்களில் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு, கேரளா அனுமதி மறுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீடு காட்ட வேண்டுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். 25 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் கேரளா செயல்படுவதாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்ட்டியது.
-
Feb 19, 2025 13:03 IST
"அதிமுகவில் இருந்து என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள்"
“அதிமுகவில் இருந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,அதுதான் ரகசியம் என்று சொல்லி இருக்கிறேன்” அதிமுக இயக்கம் பிளவுப்பட்டு இருக்கிறது தனிப்பட்ட ஈகோவை கீழே போட்டுவிட்டு அம்மா ஆட்சி மலர வேண்டுமென்றால் இணைய வேண்டும் என்று தான் சொல்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
-
Feb 19, 2025 12:56 IST
இந்தி எதிர்ப்பு - பாரதிதாசன் பாடலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் பதிவு
இந்தி எதிர்ப்பு குறித்த பாரதிதாசன் பாடலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே' என தொடங்கும் பாரதிதாசன் பாடலை பதிவிட்டுள்ளார் முதலமைச்சர். மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பதிவு உள்ளது.
-
Feb 19, 2025 12:44 IST
சீமான் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார் - செயலாளர் தமிழரசன்
நாதகவில் இருந்து அக்கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தமிழரசன் விலகியுள்ளார். சீமான் அந்த கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
-
Feb 19, 2025 12:43 IST
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நாகேந்திரன் மனுத்தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நாகேந்திரனின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்து அறிக்கை அளிக்க வேலூர் மாவட்ட நீதிபதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் உள்ள தன்னை, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க உத்தரவிடக்கோரி நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
Feb 19, 2025 12:27 IST
சென்னை- கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு
சென்னை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! என்ற வாசகத்தை கோலத்தில் போட்டு வருகின்றனர்.
-
Feb 19, 2025 12:09 IST
"வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகி மோசடி"
மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார் பாஜக நிர்வாகி ஜெயராம். வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி, அலுவலக உதவியாளர் பிரியா, மாமியார் சத்யா ஆகியோர் மீது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் அளித்த புகாரில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குபதிவு செய்த தாம்பரம் மாநகர போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்
-
Feb 19, 2025 12:07 IST
இன்னும் சற்று நேரத்தில் திறக்கப்படுகிறது சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம்
15 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை திறந்து வைக்கவுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. ஜி.எஸ்.டி. சாலையை ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வழியாக காட்டுப்பள்ளி துறைமுகத்துடன் இணைக்கும் 'சென்னை எல்லை சாலை' திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த மேம்பாலம் உள்ளது.
-
Feb 19, 2025 11:53 IST
தமிழக டிஜிபி - ரயில்வே டிஜிபி ஆலோசனை
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உடன் ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
-
Feb 19, 2025 11:46 IST
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு
2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு கோரப்பட்ட நிதியை ஒதுக்கவில்லை. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2024-இல் 4 மாநிலங்களில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கியது உள்துறை அமைச்சகம்
-
Feb 19, 2025 11:35 IST
வட சென்னை வாசிகளுக்கு பிரியாணி பரிமாரிய முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில்712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி, பிரியாணி பரிமாறினார் முதலமைச்சர் ஸ்டாலின்
-
Feb 19, 2025 11:28 IST
தேர்தல் ஆணையர் நியமனம் - வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. வழக்கை ஒத்திவைக்காமல் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சேர்க்காமல் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு எதிராக வழக்கு. வழக்கு விசாரணையில் உள்ளபோதே தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
Feb 19, 2025 11:21 IST
உ.வே.சா.படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை
171ஆவது பிறந்தநாளையொட்டி உ.வே.சாமிநாதர் படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா. படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்
-
Feb 19, 2025 11:13 IST
90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்
விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் என தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார்.
-
Feb 19, 2025 11:05 IST
வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இனையாக மாற்றி வருகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இனையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ₹1000 கோடி இல்லை, ₹6400 கோடியாக வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி வளர்ச்சி அடைந்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 19, 2025 10:31 IST
"இந்தியை திணிக்காதே" - கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு
சென்னை மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக் வீடுகளின் வாசலில் கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியை திணிக்காதே1 தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மக்கள் கோலமிட்டனர்.
-
Feb 19, 2025 10:06 IST
ஒரு நாளைக்கு 25 பேர் கைது - ரயில்வே காவல்துறை அதிரடி
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, ரயில்வே ஐ.ஜி அதிரடி உத்தரவிட்டுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கையில் இறங்கியது. ரயில்வே காவல்துறை சென்னை சென்ட்ரல், அரக்கோணம் அடங்கிய சப்- டிவிஷனில் ஒரு நாளைக்கு 25 பேர் கைது செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 19, 2025 10:04 IST
"நாம் ஏன் இந்தியாவுக்கு பணம் தர வேண்டும்?” -அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ₹182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான DOGE அமைப்பு அறிவித்திருந்தது.
-
Feb 19, 2025 10:03 IST
சென்னையில் ஆபணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு
உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.64,280 ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035 க்கு விற்பனையாகிறது.
-
Feb 19, 2025 09:34 IST
தலைமை தேர்தல் அதிகாரியாக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு
புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஞானேஷ் குமார் பொறுப்பேற்றார். 2029 ஜனவரி வரை பதவியில் நீடிப்பார்.
-
Feb 19, 2025 08:57 IST
போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய POCSO குற்றவாளி பிடிபட்டார்
16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைப்பதற்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட POCSO குற்றவாளி ஃபக்ருதீன் (20), தப்பியோடினார். இரவு முழுவதும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மேலரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
-
Feb 19, 2025 08:54 IST
டெல்லி முதல்வர் தேர்வு- பாஜக இன்று ஆலோசனை
டெல்லி முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. டெல்லி முதல்வராக பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, ஆசிஷ் சூட் உள்ளிட்டோர் பெயர் பரிசீலனை செய்ய உள்ளது. புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா நாளை நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 19, 2025 08:32 IST
தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை தடை விதித்துள்ளது வனத்துறை!
தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு, நிலைத்தனமையை உறுதி செய்தல், காட்டுத்தீ போன்ற அபாயங்களை தவிர்க்க இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Feb 19, 2025 08:31 IST
அதானி ஊழல் புகார்; இந்தியாவின் உதவியை கோருகிறது அமெரிக்கா!
தொழிலதிபர் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோருகிறது. அதானி விவகாரத்தில் விசாரனை நடத்த உதவுமாறு இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.