/tamil-ie/media/media_files/uploads/2021/02/kamalhasan.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம்: மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு இளைஞர் அணி சார்பில் தொகுதிதோறும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவாலயத்தில் துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Feb 21, 2025 22:27 IST
மோதலுக்கு தயாராகும் மத்திய அரசு - பெ. சண்முகம்
தமிழ்நாடு அரசுடனும், தமிழ் மக்களோடும் மூர்க்கமான மோதலுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க அரசுக்கு எதிராக வீரியமிக்க போராட்டத்தை நடத்தும் முயற்சியில் தி.மு.க ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 21, 2025 21:41 IST
சி.பி.எஸ்.இ விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம்
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் என்றும், ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
-
Feb 21, 2025 20:56 IST
"ரயில் பெட்டிகள் குறைப்பு என ஆதாரமற்ற தகவல்"
முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் குறைக்கப்படவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இத்தகவல் ஆதாரமற்றது எனக் கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், 2-ஆம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் மாதம் முதல் அதிகரிக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
Feb 21, 2025 20:49 IST
துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழப்பு
பீகார் மாநிலத்தில், பள்ளி தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பான தகராறில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. இதில் 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இருபிரிவு மாணவர்களுக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
-
Feb 21, 2025 20:35 IST
மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்
மத்திய அரசை கண்டித்து ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில், சென்னை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதிய வக்பு சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை வழங்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
-
Feb 21, 2025 20:10 IST
பலருக்கு வயிறு எரிகிறது - ஆர்.பி. உதயகுமார்
ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் எனக் கூறினால் பலருக்கு வயிறு எரிகிறது என ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குறிப்பாக, "நேற்று ஜெயலலிதாவின் மறு உருவம் சசிலகா, இன்று ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் மறு உருவம் இ.பி.எஸ், நாளை யாரோ?" என ஓ.பி.ஆர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
-
Feb 21, 2025 19:30 IST
த.வெ.க பொதுக்குழு கூட்டம் குறித்து என். ஆனந்த் ஆய்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டு விழா நடைபெறவுள்ள நட்சத்திர விடுதியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஆய்வு செய்தார். அதன்படி, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் வரும் 26-ஆம் தேதி இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி தலைவர் விஜய்யின் பாதுகாப்பு குறித்து, பவுன்சர் தலைமை வீரர்களுடன் அவர் ஆய்வு செய்தார்.
-
Feb 21, 2025 19:15 IST
மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்துவதற்கு ஒரு நொடி போதும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாநிலத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 19:08 IST
தேசிய கல்விக் கொள்கை மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கை மூலம் நம் பிள்ளைகளின் படிப்பை தடுக்க முயற்சி செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் அல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 21, 2025 18:56 IST
கடலூரில் ஸ்டாலின் பேச்சு
"எனது ஒரே இலக்கு மக்கள்தான். நான் செய்யவேண்டிய நன்மை மட்டுமே என் கண்களுக்கு தெரியும். அவதூறுகள், வீண் புகார்கள், வெட்டிப் பேச்சுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. ரூ. 1000 உரிமைத்தொகையை, "என் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்" என பெண்கள் கூறுவது எனக்கான பெருமை. மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக்கூடாது." என்று முதலவர் ஸ்டாலின் கடலூரில் தெரிவித்துள்ளார்.
-
Feb 21, 2025 18:49 IST
``பெண் சுதந்திரத்தால் திருமணம் கடினமாகிவிட்டது'' - தமன் கருத்தால் சர்ச்சை
`திருமணம் செய்து கொள்' என நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால், திருமணத்தை காப்பாற்றுவது தற்போது கடினமாகிக் கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதே அதற்கு காரணம்!" என்று இசையமைப்பாளர் தமன் கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
-
Feb 21, 2025 18:44 IST
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அதிக அளவில் காவல்துறையில் இருக்கும் இடத்தில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது." என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Feb 21, 2025 18:40 IST
கோயம்பேடு டூ பட்டாபிராம்... மெட்ரோ ரயில்: தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ இரயில் போக்குவரத்துஅமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால் அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக் இன்று (21.02.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடம், தற்போதுள்ள கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் தொடங்கி, பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராமில்(Outer Ring Road – வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது, இது அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் அம்பத்தூர் OT, ஆவடி இரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை (ORR) போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். திட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக இது மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்திற்கு முன்னால்) நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:* வழித்தடத்தின் மொத்த நீளம்: 21.76 கி.மீ
* உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 19
* மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,744 கோடி. (மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்பு உட்பட).
-
Feb 21, 2025 18:36 IST
முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு - செல்வப்பெருந்தகை கண்டனம்
முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு திட்டத்தை இந்திய ரயில்வே திரும்பப் பெற வேண்டு என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரயில்வே என்பது, தினசரிப் பயணியாகவோ, சுற்றுலாப் பயணியாகவோ, நகர்ப்புறமாகவோ அல்லது கிராமப்புறங்களில் வசிப்பவராகவோ, ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.
ஏழை, எளியோர் அணுகக்கூடிய ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள இந்திய ரயில்வேயின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்துள்ளது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஒன்றிய ரயில்வே துறை பொதுப்பெட்டிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் குறைக்கக் கூடாது. பெட்டிகள் குறைப்பு திட்டத்தை இந்திய ரயில்வே திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Feb 21, 2025 18:28 IST
அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல - ராகுல் விமர்சனம்
அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல; அது தேசிய விவகாரம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது தொகுதிக்கு உட்பட்ட லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது; அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல. அது தேசிய விவகாரம். அமெரிக்காவில் அதானி மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், நாங்கள் அதைப் பற்றி விவாதிப்பதில்லை என்றும் பிரதமர் மோடி கூறுகிறார். இந்தியாவின் பிரதமராக இருப்பவர், இந்த விஷயத்தைப் பற்றி டிரம்ப்பிடம் கேட்டிருக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தேவைப்பட்டால் அதானியை அமெரிக்காவிற்கு விசாரணைக்கு அனுப்புவதாக கூறியிருக்க வேண்டும். ஆனால் இது தனிப்பட்ட விஷயம் என்று மோடி கூறியுள்ளார்" என்று அவர் கூறியுள்ளார்.
-
Feb 21, 2025 18:17 IST
ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசின் போக்கை கண்டித்து தாம்பரத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ . 2,152 கோடியை மாணவர்கள் நலன் கருதி விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
Feb 21, 2025 18:09 IST
பராமரிப்பு பணி - சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை இரவு 10 மணி முதல் பிப்.23 காலை 6 மணி வரை விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 21, 2025 17:55 IST
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு: வெளியான ஐகோர்ட் உத்தரவு
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதில், "மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜய லட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது
சீமானின் வற்புறுத்தலினால் 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளார் எனவும் விஜயலட்சுமியிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை ஆராய்ந்ததில் விஜய லட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்ப பிரச்னை, திரைத்துறை பிரச்னையால் சீமானை விஜய லட்சுமியின் குடும்பத்தினர் அணூகியுள்ளனர். அப்போது, திருமணம் செய்வதாகக் கூறி விஜய லட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
-
Feb 21, 2025 17:47 IST
சொத்து முடக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் - ஷங்கர் தரப்பு
"எந்திரன் படத்தின் காப்புரிமை தொடர்பான ஆரூர் தமிழ்நாடனின் வழக்கு நிராகரிக்கப்பட்டு விட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்து முடக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் " இயக்குநர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 21, 2025 17:39 IST
சபாநாயகர் அப்பாவு பேச்சு
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். "எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர். ‘சமக்ர சிக்க்ஷா’ போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது." என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Feb 21, 2025 17:32 IST
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் - திட்ட அறிக்கை தாக்கல்
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைக்க விரிவாவ திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. 21.76 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ. 9744 கோடி செலவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
-
Feb 21, 2025 17:29 IST
``எங்கும் இரயில் #பரிதாபங்கள்..'' - ஸ்டாலின் பதிவு
"சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லா பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது சாடிஸ்ட் அரசு! " முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 16:34 IST
மும்மொழிக் கொள்கை தேவையில்லை - இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,
எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 16:06 IST
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் - தமிழக ஆளுநர் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துப்பூர்வ வாதம்
உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை ஆளுநர் ரவி தரப்பு தாக்கல் செய்தது; அதில், “ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை; அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. மசோதாக்களுக்கு கூடிய விரைவில் ஒப்புதல் வழங்க வேண்ட்ம் என பஞ்சாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனக்கு பொருந்தாது. தேவைப்பட்டால் இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 21, 2025 15:57 IST
மோடி ஆட்சியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி கிடையாது - கரு நாகராஜன்
பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், “மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என்று தவறாகப் பரப்பப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி திணிப்பு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவரது ஆட்சியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி கிடையாது. மும்மொழிக் கொள்கையில் மற்ற மொழிகளையும் கற்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Feb 21, 2025 15:52 IST
‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’; துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சுக்கு கனிமொழி விமர்சனம்
“ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி” என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பேச்சை சுட்டிக்காடி, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்று தி.மு.க எம்.பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 15:25 IST
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை: ஏழை எளிய பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் - அப்பாவு
சபாநாயகர் அப்பாவு: “2022 ஆண்டு பீகார் மாநிலம் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அச்சமயத்தில் அங்கு 51% பேர் பள்ளிக் கல்விக்கு வந்திருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு கணக்கெடுப்பில் 31 சதவீதம் மட்டுமே வந்துள்ளார்கள்; தேர்வில் தேர்ச்சி பெறாத 20% பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சாமானிய ஏழை எளிய பிள்ளைகளைப் படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம்தான் புதிய கல்விக் கொள்கை” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
Feb 21, 2025 14:26 IST
கடலுக்குள் துவாரகாபுரி குறித்து தேடல் தொடங்கியது
குஜராத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை தொடங்கியது இந்திய தொல்லியல் ஆய்வகம். 5 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு இதற்காக ஆழ்கடலில் இறங்கி தொல்பொருள் தடயங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
-
Feb 21, 2025 14:22 IST
கார் விபத்தில் சிக்கிய கங்குலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் கார் விபத்தில் சிக்கினார். கங்குலி காரில் பயணித்த போது லாரி குறுக்கே வந்ததால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வேகம் குறைவு என்பதால் காயங்கள் இன்றி கங்குலி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது..
-
Feb 21, 2025 14:19 IST
இந்தி திணிப்பு மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும்: அன்பில் மகேஷ்
இந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிந்துவிட்டன, அதே நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. இந்தி திணிப்பு - மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
Feb 21, 2025 13:23 IST
வட அமெரிக்காவின் அட்லாண்டாவில், தமிழ் வாரம் கொண்டாட்டம்
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, வட அமெரிக்காவின் அட்லாண்டாவில், தமிழ் வாரம் கொண்டாடப்பட்டது. ஜார்ஜியா மாநிலத்தின் ஆளுனர், பிரையன் கெம்ப், ஜார்ஜியாவின் முதல் பெண்மணி மார்ட்டி கெம்ப் ஆகியோரிடம் இருந்து, தமிழ் வாரத்திற்கான அறிக்கை பெற்று அட்லாண்டா தமிழ் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
-
Feb 21, 2025 12:40 IST
கைதிகளுக்கு போன் கிடைப்பது எப்படி?
கடுமையான கட்டுப்பாடுகளை மீறி கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது? பதுக்கி வைக்கின்றனரா? சிறையில் ஜாமர் இல்லையா? "சிறைக்காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிறைக்குள் எப்படி கொண்டு செல்ல முடியும்" என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
Feb 21, 2025 12:32 IST
தர்மேந்திர பிரதானை கண்டித்து போராட்டம் - திமுக
நிதி தராமல் ஆணவமாக பேசுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து பிப்.25ல் திமுக போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என தர்மேந்திர பிரதான் கூறியதற்கு திமுக கண்டனம்; அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிப்.25இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது திமுக மாணவரணி. தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
-
Feb 21, 2025 12:29 IST
தர்மேந்திர பிரதானுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
“இருமொழிக் கல்விக் கொள்கையில் படித்தவர்கள், சமச்சீர் கல்வியில் படித்தவர்கள்தான், உலகம் போற்றும் வல்லுநர்களாக இருக்கிறார்கள். மும்மொழி கொள்கை RSS-ன் சித்தாந்தம், மனுதர்மத்தில் உள்ளதை திணிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதுதான் அரசியல். இதை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்காது!” என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
-
Feb 21, 2025 12:13 IST
தர்மேந்திர பிரதானுக்கு முத்தரன் கடும் கண்டனம்
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றி வருவது ஒன்றிய அமைச்சருக்கும் தெரியும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவேன் என கூறுவதுதான் அரசியல் என்று CPI மாநில செயலாளர் முத்தரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Feb 21, 2025 11:56 IST
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவிய சூர்யா ரசிகர்கள்
சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள 500க்கு மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு EXAM STATIONARY KIT வழங்கப்பட்டது. வண்டலூர், கண்டிகை, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள 3 அரசுப்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
-
Feb 21, 2025 11:51 IST
கல்வியை அரசியலாக்க வேண்டாம் - தர்மேந்திர பிரதான்
கல்வியை அரசியலாக்க வேண்டாம்; தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்த மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
-
Feb 21, 2025 11:36 IST
ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Feb 21, 2025 11:15 IST
நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு
"உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது" என்று இந்தி மொழி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 11:14 IST
திரைத்துறையினர் நலன் கருதி எடுத்த முடிவு - துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரைத்துறையினர்
சென்னையை அடுத்த பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டது. "திரைத்துறையினர் நலன் கருதி 90 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். "40,000 திரைப்பட கலைஞர்களின் இதயத்தில் பால் வார்த்த தமிழ்நாடு அரசுக்கு மிக்க நன்றி" என்று அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர் திரைப்பட துறையினர்
-
Feb 21, 2025 10:33 IST
‘GET OUT MODI' முழக்கத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு
உங்களுக்கு இந்தி தெரியும். நீங்க இந்தியில் பேசுறீங்கள்.எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாயப் படுத்துகிறீர்கள். ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும்.
-
Feb 21, 2025 10:05 IST
மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக சுவரொட்டி
மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
-
Feb 21, 2025 10:04 IST
திருமாவளவன் மறுப்பு
சிபிஎஸ்இ பள்ளி எதுவும் தாங்கள் நடத்தவில்லை; ஊடக விமர்சனத்திற்காக அண்ணாமலை பேசி வருகிறார். அரசியலில் நாகரிக அணுகுமுறையை அண்ணாமலை கடைப்பிடிப்பதில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Feb 21, 2025 10:02 IST
தங்கம் விலை சவரனுக்கு 360 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் சரிந்து ரூ.64,200க்கு விற்பனையாகிறது.
-
Feb 21, 2025 09:24 IST
கார் விபத்தில் சிக்கிய கங்குலி
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி சென்ற கார் மேற்கு வங்கத்தின் தாதுபூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. லாரி மீது மோதாமல் இருக்க கங்குலியின் கார் ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
-
Feb 21, 2025 08:58 IST
இமயமலை...பிரதமருக்கு சிரித்தபடியே பதிலளித்த பவன் கல்யாண்
டெல்லி முதல்வர் பத்வியேற்பு விழாவில் எளிய உடையை அணிந்திருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலை போகப் போகிறீர்களா? என சிரித்தபடியே கேட்ட பிரதமர் மோடி கூறினார். நான் எங்கும் போகவில்லை. செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. இமயமலை காத்திருக்கலாம் என பவன் கல்யாண் சிரித்தபடியே பதிலளித்தார்.
-
Feb 21, 2025 08:16 IST
பள்ளி மாணவி மாரடைப்பால் மரணம்
தெலங்கானா மாநிலம் காமரெட்டியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பள்ளிக்கு நடந்து சென்றபோது மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
-
Feb 21, 2025 08:14 IST
உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி என பதிவிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 08:13 IST
“உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயன்று வருகிறது பாஜக” -ராகுல் காந்தி
நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துவிட்டது. ஆனால் பாஜக அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயன்று வருகிறது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 21, 2025 07:36 IST
"அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது"
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.