/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-04-26T170145.089.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 24, 2025 05:45 IST
சட்டசபை தேர்தலின்போது சூழலைப் பொறுத்து கூட்டணி முடிவு - வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்: “இந்த நிமிடம் வரை தி.மு.க கூட்டணியில் உள்ளோம்; வரும் சட்டசபை தேர்தலில் அப்போதுள்ள சூழலைப் பொறுத்து கட்சி நிர்வாகிகள் கூடி பேசி முடிவு எடுப்போம்.” என்று கூறினார்.
-
Mar 24, 2025 05:41 IST
லஞ்சப் புகார்: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் கைது
லஞ்ச புகாரில் புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், தமிழக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகனான ஒப்பந்ததாரர் இளமுருகனை சிபிஐ கைது செய்தது. தலைமை பொறியாளர் தீனதயாளன் வீடு, காரைக்காலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில், ரூ.73 லட்சம் பறிமுதல் செய்ததாக சி.பி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Mar 23, 2025 21:34 IST
இத்தாலியில் 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயம்; அஜித்குமார் 3வது இடம் - ஷாலினி தகவல்
இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்று அதில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
-
Mar 23, 2025 19:31 IST
தமிழ்நாட்டில் கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
தமிழ்நாட்டில் இன்று கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. செய்யாறு போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.
-
Mar 23, 2025 18:40 IST
ஐ.பி.எல். போட்டி - சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மும்பை அணிகள் மோதுகின்றது. 7.30 மணிஅளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள். சென்னை அணியின் ரசிகர்களும் மும்பை அணியின் ரசிகர்களும் அவரவர்களின் விருப்ப டீசர்ட் அணிந்து உள்ளே செல்கின்றனர்
-
Mar 23, 2025 18:19 IST
நாக்பூரில் 6 நாட்களுக்குப் பிறகு, ஊரடங்கு முற்றிலுமாக நீக்கம்
மார்ச் 11 அன்று நாக்பூரில் தொடர்ந்த வன்முறையை அடுத்து தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது. இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Mar 23, 2025 18:17 IST
போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்கு பின்பு டிஸ்சார்ஜ்
நிம்மோனியா பாதிப்பால் ஜெமெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகனுக்கு திரும்ப உள்ளார்.
-
Mar 23, 2025 18:15 IST
சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு பறிமுதல்!
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ராணுவ அதிகாரி சஞ்சய் சிங்கின் கைப்பையில் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் துப்பாக்கி, குண்டுகள் போன்றவற்றை கொண்டு செல்லும்போது, முன்னதாகவே விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அதை துணை பைலட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதை இவர் மீறியதாக குற்றச்சாட்டு.
-
Mar 23, 2025 18:03 IST
தி.மு.க மீது விஜய் கடும் விமர்சனம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
-
Mar 23, 2025 17:59 IST
ஐதராபாத் அணி 286 ரன்கள் குவிப்பு
ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 286 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதாராபாத் அணி சாதனை படைத்திருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. 287 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறும்.
-
Mar 23, 2025 17:10 IST
முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு- எடப்பாடி பழனிசாமி
சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளைத் திசைதிருப்பவே கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டதாக கூறினார்.
-
Mar 23, 2025 16:55 IST
19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
Mar 23, 2025 16:44 IST
லஞ்சம் பெற்றதாக புதுச்சேரி தலைமை பொறியாளர் கைது
புதுச்சேரி தலைமை பொறியாயளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பர நாதன் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொதுப் பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Mar 23, 2025 16:31 IST
ஏப்ரல் 5-ஆம் தேதி இலங்கைக்கு செல்லும் மோடி
சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்ட ஏப்ரல் 5-ஆம் தேதி, பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார். இது குறித்த தகவலை அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mar 23, 2025 15:58 IST
ஓ.பி.எஸ்., சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்க்கும் திட்டம் இல்லை - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்ப்பதற்கு எந்த விதமான திட்டமும் இல்லை என்று அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க சீரான பாதையில் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 23, 2025 15:16 IST
விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கடலோர பகுதி மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Mar 23, 2025 14:44 IST
ட்விட்டர் பறவை லோகே ரூ30 லட்சத்திற்கு ஏலம்
ட்விட்டர் பறவை லோகே ரூ30 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று பெயர் வைத்து அதன் லோகோவையும் மாற்றிவிட்ட நிலையில், அந்த அலுவலகத்தில் இருந்த 254 கிலோ எடை கொண்ட ட்விட்டர் குருவி லோகோ ஏலம் விடப்பட்டது.
-
Mar 23, 2025 14:41 IST
நாக்பூர்தான் இந்தியாவில் கலவரங்களை தூண்டி விடுகிறது: சுப.வீரபாண்டியன்
அவுரங்கசீப் கல்லறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை குறித்து பேசிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் இந்தியாவில் நடைபெறும் கலவரங்களையே நாக்பூர்தான் தூண்டி விடுகிறது என்று கூறியுள்ளார்.
-
Mar 23, 2025 14:35 IST
காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை
புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மூட்டை மூட்டையாக முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
Mar 23, 2025 13:30 IST
தொகுதி மறுவரையறை விவகாரம்: அண்ணாமலை கருத்தை நம்ப முடியாது; துரை வைகோ
தொகுதி மறுவரையறை குறித்து அண்ணாமலையின் கருத்துக்களை நம்ப முடியாது. அவர் இன்று ஒன்று பேசுவார் நாளை ஒன்று பேசுவார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையெறை கூடாது என்பதே எங்கள் நிலைபாடு என்று எம்.பி.துரை வைகோ கூறியுள்ளார்.
-
Mar 23, 2025 12:54 IST
பெங்களூருவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அசாமை சேர்ந்த நபர் சென்னையில் கைது
பெங்களூருவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்ப முயன்ற அசாமை சேர்ந்த நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்
-
Mar 23, 2025 12:06 IST
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Mar 23, 2025 11:48 IST
ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9ஆம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி மரணம்
சென்னையில் ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9ஆம் வகுப்பு மாணவி அனிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Mar 23, 2025 11:14 IST
பெங்களூருவில் 150 அடி உயர தேர் சாய்ந்ததில் 2 பேர் மரணம் - 3 பேர் படுகாயம்
பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோயில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். காற்றின் வேகம் அதிகரித்ததால், தேர் ஒரு பக்கமாக சாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 23, 2025 11:12 IST
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி; விஜய் முக்கிய உத்தரவு
த.வெ.க.,வில் பிரிக்கப்பட்டுள்ள 120 மாவட்டங்களிலும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்த த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்
-
Mar 23, 2025 10:19 IST
மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு - அமைச்சர் சேகர்பாபு
மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று மனசாட்சி இல்லாமல் கூறுகின்றனர். மத்திய நிதியமைச்சர் சொல்லும் பொய்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழ்நாடு நிதியமைச்சருடன் மத்திய நிதியமைச்சரை வாதம் செய்யச் சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.
-
Mar 23, 2025 09:58 IST
தமிழ்நாட்டை உருவாக்கியது ஆங்கிலேயர்களா?
எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. மொழி பிரச்சனைக்கு மத்தியில் தமிழர்களை மேலும் கொந்தளிக்க வைக்கும் வகையில் மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
-
Mar 23, 2025 09:16 IST
நாய்க்கடிக்கு உரிய நடவடிக்கை வேண்டும்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Mar 23, 2025 09:14 IST
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை 11 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 23, 2025 08:51 IST
அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை - டி.கே.சிவகுமார் பேட்டி
அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை என தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி அளித்துள்ளார்.
-
Mar 23, 2025 08:50 IST
தேர்கள் சாய்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
பெங்களூரு அருகே உஸ்கூரில் மத்தூரம்மா கோயில் தோரோட்டம் நடைபெற்றபோது உயரமான இரு தேர்கள் சாய்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒசூரை சேர்ந்த லோகித், பெங்களூருவை சேர்ந்த ஜோதி ஆகிய இருவர் உயிரிழந்தனர். 120 அடி உயரம் கொண்ட இரு தேர்களும் காற்றால் சாய்ந்தபோது 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
Mar 23, 2025 08:15 IST
மதுரையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை
மதுரை மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டினர். காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Mar 23, 2025 07:31 IST
பாகிஸ்தானில் சக்கரை விலை உயர்வு
ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தானில் சர்க்கரை விலை உயர்ந்தது. ஒரு கிலோ 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
-
Mar 23, 2025 07:30 IST
"சுஷாந்த் சிங் மரணத்தில் ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை" -சிபிஐ
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லை என சிபிஐ அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
-
Mar 23, 2025 07:28 IST
யஷ்வந்த் வர்மாவு எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது - சஞ்சீவ் கண்ணா உத்தரவு
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவு எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 23, 2025 07:27 IST
தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - கனிமொழி
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் எதிர்த்துப் போராடுகிறோம், தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை குறித்து நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.